கரூர்: இளம்பெண்களை கடத்த முயன்ற பெங்களூரு தம்பதி; பெற்றோர் கொடுத்த புகாரில் கைது - என்ன நடந்தது?
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் ரத்தினகிரி (வயது: 50) - கார்த்திகைசெல்வி (வயது: 45). தம்பதியினர், விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பிரியங்கா (வயது: 27), பிரியதர்ஷினி (வயது: 25), பிரித்திகா (வயது: 23) என்று மூன்று மகள்கள் உள்ளனர். இதில், இந்த தம்பதியின் மூத்த மகள் பிரியங்கா கொல்லிமலை வனச்சரகத்தில் வனவராக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், இணையதளம் மூலமாக பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக் (வயது: 41) என்பவரிடம் பிரியங்காவுக்குப் பழக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அப்படி, அவரோடு ஏற்பட்ட பழக்கத்தில்... கார்த்திக் மற்றும் அவரது மனைவி கிரிஷ்மா BMW காரில் ரத்தினகிரி வீட்டிற்கு நேரடியாக வந்து, அவரது மூன்று மகள்களையும் வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர். இதற்கு, ரத்தினகிரியும், கார்த்திகைசெல்வியும் தங்களது மகள்களை அழைத்துச் செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், உங்கள் மகள்கள் எங்களுடன் வர ஒத்துழைக்கிறார்கள். நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? என்று கூறி தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். ஆனால், தங்களது மகள்களை அனுப்ப மறுத்துவிட்ட அவர்கள், கார்த்திக் குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது, அவர் பெங்களூரில் உள்ள ஒகானா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், இதில் சந்தேகம் அடைந்த அந்த பெண்களின் பெற்றோர், அப்பள்ளியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அங்கு கார்த்திக் என்று யாரும் தங்களது பள்ளியில் வேலை செய்யவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால், சந்தேகம் ஏற்பட்டதால், இந்த விவகாரம் குறித்து அவர்கள் மீது குளித்தலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்து குளித்தலை காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

மேலும், இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு, அவர்கள் மீது மூன்று பெண்களை கடத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவர்களது பிஎம்டபிள்யூ காரினையும் பறிமுதல் செய்தனர். அதோடு, அவர்களை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும், பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது மனைவி குறித்து குளித்தலை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை சொகுசு காரில் வந்து கடத்த முயன்ற பெங்களூரைச் சேர்ந்த தம்பதி கைதாகியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


