Tattoo: சமந்தா கருத்து முதல் ஆதிக்கத்துக்கு எதிரான புரட்சி வரை; டாட்டூ சொல்லும் வரலாறு | Explained
நடிகை சமந்தா ஒருமுறை இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தபோது ஒரு ரசிகர் பச்சை குத்திக் கொள்ள எந்த வாசகத்தை அல்லது படத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்? என்று கேட்க, ` அவர், எப்போவும் பச்சை குத்திக்கக் கூடாதுனு எனக்கு நானே இப்போலாம் சொல்லிக்கிறேன். அதனால நீங்களும் எப்போவும் பச்சை குத்திக்காதீங்க" எனப் பேசினார்.
நடிகர் ஜெயசங்கர், ஜெயசித்ரா நடிப்பில் 1971-ம் ஆண்டு வெளியான சினிமா பைத்தியம் என்ற படத்தில் நடிகர் ஜெய்சங்கரின் பரம விசிறியான ஜெயசித்ரா, தன் கையில் ஜெய் என்று பச்சை குத்திக் கொண்டிருப்பார். திரையில் தெரிவதையெல்லாம் உண்மையென நம்புவார். ஆனால், ஒருநாள் உண்மை தெரியவரும்போது, கொள்ளிக் கட்டையால் பச்சை குத்திய தனது கைப்பகுதியை எரித்துக் கொள்ள முயல்வார்.
அதேபோல அரசியலிலும் ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை எம்.ஜி.ஆர் தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்ணாவின் உருவத்தைக் கையில் பச்சைகுத்திக் கொள்ள வேண்டும் என்று கூற, அ.தி.மு.க-வினர் பலர் தங்கள் கட்சி விசுவாசத்தை நிரூபிக்கும் வகையில் அண்ணா உருவத்தை தம் கையில் பச்சை குத்திக் கொண்டனர். பின்னர் அவர்களில் சிலர் வேறு கட்சிக்கு மாறிய போதுதான் அவர்களுக்குச் சோதனை தொடங்கியது. கையில் பச்சை குத்தியதை மறைக்க, முழுக்கைச் சட்டை அணிந்து திரிந்தனர். இன்னொருபக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் டாட்டூ போட்டுக்கொண்ட 6 பேர் எச்.ஐ.வி-யாலும், பலர் தோல் சம்பந்தமான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது அரசு ஆவணம்.
இப்படி சினிமா பிரபலங்கள் தொடங்கி அரசியல்வாதிகள், பொதுமக்கள் வரை `பச்சை குத்துதல் என்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தனைப் பிரச்னைக்கு காரணமான டாட்டூவின் வரலாறு என்ன? எப்போது எங்கே தொடங்கியது? இது எப்படி புரட்சிக்கு கரணமானது என இதன் மறைக்கப்பட்ட இன்னொரு பகுதியை அலசுகிறது இந்தக் கட்டுரை.

அடையாளமிடுதல் எனப் பொருள்படும்படியான சமோவான் வார்த்தை டாட்டாவ். இந்த வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் டாட்டூ. 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கேப்டன் ஜேம்ஸ் குக் என்பவர்தான் இந்த வார்த்தையை ஆங்கிலத்துக்குக் கொண்டுவந்தார் எனக் குறிப்பிடப்படுகிறது. அப்போது முதல் சமீபகாலத்துக்கு முன்புவரை, டாட்டூ வரையும் திறன் அப்பாவிடமிருந்து மகனுக்கு எனப் பரம்பரைப் பரம்பரையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. மேலும், பச்சை குத்துதல் என்பது, ஒரு சமூகத்தில் தலைமைப் பொறுப்புக்கு ஒருவர் உயர்ந்துவிட்டார் என்பதைக் குறிக்கும் வகையில் பல்வேறு சமூகங்களில் பச்சை குத்துதல் எனும் விழாவே நடத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால், இந்த டாட்டூ எப்போது, எப்படிப் பிறந்திருக்கும்? என்றக் கேள்வியுடன் அலசத் தொடங்கினோம்.
வேட்டையாடி உண்ணுதலில் தொடங்கி, போர்களால் தன் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதுவரை இந்த மனித இனம் பல்வேறு காயங்களைச் சுமந்திருக்கிறது.
என நம்புகிறார் 19-ம் நூற்றாண்டின் ஜெர்மன் இனவியலாளரும், ஆய்வாளருமான கார்ல் வான் டென் ஸ்டீனென் (Karl von den Steinen).
இரத்தபோக்கைத் தடுக்க தாவரச் சாறுகளைக் காயங்களில் தேய்ப்பதால் வடு நிறமாற்றம் ஏற்படுகிறது. இதன் விளைவாக வரும் அலங்காரமும் பச்சை குத்திக்கொள்வதின் வரலாறாக இருக்கலாம். வட அமெரிக்க அப்பாசி(Apache), கோமாஞ்சே (Comanche) வீரர்கள் போர் காயங்களில் மண்ணைத் தேய்த்து மருந்தாக்கியிருக்கின்றனர். அதன்மூலம் பெரிதான வடுக்கள் மூலம் பழங்குடியினருக்கும் இந்தக் கலாச்சாரம் பரவியிருக்கலாம் என்கிறது ஆய்வு. அதே நேரத்தில் நியூ கினியாவின் பிக்மிகள் தோலில் உள்ள கீறல்களில் மூலிகைகளைத் தேய்த்து தொற்றுகளுக்கு சிகிச்சையளித்தனர். இதனால் நிரந்தர வடுக்கள் ஏற்பட்டன என்றும் அது பிற்காலத்தில் அடையாளமாகவும், பாதுகாப்பாகவும், அழகுக்கலையாகவும் வளர்ந்திருக்கலாம் எனப் பல்வேறு கதைகளும், கருத்துகளும், உறுதிப்படுத்தப்படாத ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
உலகில் முதன்முதலில் பச்சை குத்துதல் என்ற வழக்கம் கி.மு 6000-ம் ஆண்டு தென் அமெரிக்காவின் பெருவில், பண்டைய பழங்குடியினரில் ஒன்றில் தோன்றியிருக்கலாம் என்கிறது ஆய்வு முடிவுகள். ஆனால், அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி 5,200 ஆண்டுகள் பழமையான மம்மி எட்ஸி தி ஐஸ்மேன் இத்தாலிய - ஆஸ்திரேலிய எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மம்மியின் உடலில் 61 இடங்களில் பச்சை குத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பச்சைகுத்துதல்கள் அனைத்தும் மருத்துவம், அல்லது சடங்குகள் சார்ந்து இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பெர்சியர்களிடமிருந்து பச்சை குத்துவதைக் கற்றுக்கொண்ட கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆரம்பக் காலங்களில் (கி.மு 8 முதல் 6 வரை) பச்சை குத்துவதைக் காட்டுமிராண்டித்தனம் என்றே கருதியிருக்கின்றனர். அதனால், தப்பிக்க முயலும் அடிமைகள், குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் பச்சைகுத்துதலைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அது அப்படியே மெல்ல வளர்ந்திருக்கிறது.
டாட்டூ விவகாரத்தில் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் சிக்கல்கள் இருந்ததுபோல, ஜப்பானியக் கலாச்சாரத்திலும் சிக்கல் இருந்தது. பச்சை குத்துதலை ஜப்பான் கலாச்சாரம் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. இது பெரும் குற்றச் செயல்களான யாகுசா (சூதாடுதல், வழிப்பறி, கொள்ளை)வுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்டுப் புறக்கணித்தது. அதனால், சட்டவிரோதிகளுக்கான (நெற்றிகளிலும் கை,கால்களிலும்) பச்சை குத்துதல் தண்டனைகள் வழங்கப்பட்டன. இந்தக் குற்றவியல் பச்சை குத்தப்பட்டவர்கள் முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். அவர்களுடனான வணிகம் மட்டுமல்லாமல் எந்த வேலையிலும் பணியமர்த்தப்படாமல் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர்.
அதே காலகட்டத்தில், சமூகத்தின் கீழ் அடுக்கிலிருந்த மக்கள், இன்றைய ஜப்பானிய அலங்கார பச்சை குத்தல்களுக்கு அடிப்படையாக இருக்கும் ஐரேசுமி எனப்படும் தங்கள் சொந்த பச்சை குத்தும் வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில், `பச்சை குத்தியிருப்பவர்கள் அனைவரும் யாகுசா குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்ற அந்த பிம்பத்தை அடித்து, உடைக்கும் ஒரு புரட்சிகரமான செயல்பாடாகவே ஐரேசுமி பச்சைகுத்துதல் மாறியது. அதற்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அரசின் அடக்குமுறைக்கு எதிராக பச்சை குத்துதல் எனும் பயன்பாட்டை மீட்டுருவாக்கம் செய்தனர் அந்தக் கீழடுக்கு மக்கள்.
உலக நாடுகளில் இப்படி வளர்ந்த பச்சைக் குத்தும் கலை, மத்திய இந்தியாவில் 10,000 ஆண்டுகளுக்கும் பழமையான பழங்கால பாறை ஓவியங்களிலேயே அலங்காரங்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பலநூறு ஆண்டுகளாக இந்தியாவிலும் இந்தப் பச்சைகுத்தும் கலாச்சாரம் இருப்பதாக வரலாற்று, மானுடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக, இந்தியாவைப் பொருத்தவரை பச்சை குத்தும் வழக்கம் பழங்குடி மக்களிடம்
உதாரணத்துக்கு சில பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையைப் பார்க்கலாம்....

அபதானி பழங்குடியினர்:
அருணாச்சலப் பிரதேசத்தில் வாழும் அபதானி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், இளம்பெண்களின் முகத்தில் கோடுகளை பச்சை குத்தும் நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். ஒரே பகுதியில் பல்வேறு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்வதுண்டு. அப்படிப் பிறப் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், அபதானி இனத்தின் அழகான பெண்களைக் கடத்திக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதனால், அவர்களின் அழகைக் கெடுக்கும் வகையில், அவர்களின் முகத்தில் கோடுகளை வரைகிறார்கள். அபதானி பச்சை குத்தும் நடைமுறையில், தோலில் முட்களின் மூலம் கோடு வரைந்து, அடர் நீல நிறத்துக்கு விலங்குகளின் கொழுப்பைச் சூடாக்கி பச்சை குத்தப்பட்டது. அதனால் ஏற்படும் காயம், தொற்று போன்றவற்றால் அது பெரிதான வடுவாகவும், பச்சை குத்துதலாகவும் மாறும். 1970-களில்தான் இந்திய அரசு இந்த நடைமுறைக்குத் தடை விதித்தது. ஆனால் வடகிழக்கில் இன்னும் முறையான அரசு அதிகாரம் செல்லுபடியாத இடங்களில், இந்த நடைமுறை தொடர்வதாக கூறப்படுகிறது.
சிங்போ பழங்குடியினர்:
அஸ்ஸாமிலும், அருணாச்சலப் பிரதேசத்திலும் வாழும் சிங்போ பழங்குடியின மக்கள், ஆண் - பெண் எனத் தனித்தனியாக பச்சைகுத்துதல் விதிகளை வகுத்திருக்கின்றனர். திருமணமான பெண்கள் கணுக்கால் முதல் முழங்கால் வரை இரு கால்களிலும், ஆண்கள் தங்கள் கைகளிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். திருமணமாகாதவர்களுக்குப் பச்சை குத்துதல் தடை செய்யப்பட்டிருக்கிறது.
நாகாலாந்தின் வேட்டைக்காரர்களான கோன்யாக்கு இனத்தைச் சேர்ந்தவர்கள், போரில் தங்கள் திறமையையும், எண்ணிக்கையையும் குறிக்க முகங்களில் பச்சை குத்திக் கொண்டனர்.
போரில் இறந்த பிறகு உரிய அங்கீகாரம் கிடைக்கவும், பழங்குடிகளின் அடையாளத்தை நிறுவவும் பச்சை குத்திக்கொள்வதாக கூறுகின்றனர். மேலும், பச்சை குத்தும்போது ஏற்படும் வலியைத் தாங்குவது ஆண்மை என்றும், தைரியம் என்றும் ஆண்கள் கருதுகின்றனர். பச்சை குத்திக்கொள்ளும்போது ஏற்படும் வலியைத் தாங்கும் பெண்களுக்குப் பிரசவ வலியைப் பயிற்றுவிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.
பைகா பழங்குடி:
பைகா பழங்குடியினப் பெண்கள் பச்சை குத்தும் பயணத்தை வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தொடங்குகிறார்கள். 8 முதல் 10 வயதுக்குள், அதாவது பருவமடைவதற்கு முன்பு, நெற்றியில் முதல் பச்சை குத்தப்படுகிறது. இந்த பச்சை குத்துவதுதான் அந்த சிறுமி பெண்மையாக மாறுவதற்கான அடையாளமாகவும், விரைவில் தனது வீட்டையும் குடும்பத்தையும் நிர்வகிக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாராகிறாள் என்பதை அந்த சிறுமிக்கு நினைவூட்டவும் இந்த முறை பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதன் அடிப்படையை நமது ஊரில் மஞ்சள் நீராட்டுவிழாவுடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம். அதாவது அந்தச் சிறுமி திருமணத்துக்குத் தயாராகிவருகிறாள் என்பதைக் குறிப்பிடுவதே இதன் நோக்கம். அந்த சிறுமி பருவ வயதை நெருங்கிவிட்டால், (15 முதல் 18 வயதுக்குள்) அவள் முதுகில் பச்சை குத்தப்படுகிறது. அதன்மூலம் அவளுடைய கவர்ச்சியை அதிகரிப்பதாக நம்புகிறார்கள். பைகா பெண்களின் பாரம்பரிய உடையும், முதுகில் குத்தப்பட்ட டாட்டூ வெளியில் தெரியும்படி தான் வடிவமைக்கப்படுகிறது. அதற்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் அந்தப் பெண் கைகளில் ஒன்றன்பின் ஒன்றாகப் பச்சை குத்திக் கொள்கிறாள். அதன்மூலம் சமூகத்தில் அவளின் பங்களிப்பைக் குறிப்பதாகவும், சடங்குகள், சமூக நடவடிக்கைகளில் ஈடுபட அந்தப் பெண் தயாராக இருப்பதைக் காட்டுவதாகவும் நம்புகிறார்கள்.
திருமணமானதுடன் அந்தப் பெண்ணுக்குக் கால்களில் பச்சை குத்தப்படுகிறது. இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அந்தப் பெண் முழுமையாக ஈடுபடுவதைக் குறிக்கும் ஒரு அடையாளமாக கூறுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு, இறுதியாக அந்தப் பெண்ணின் மார்பில் பச்சை குத்தப்படுகிறது. இது தாய்மையையும், அவளுடைய குடும்பத்திற்குள் அவள் வகிக்கும் பங்கையும் குறிக்கும் ஒரு இறுதி அமைப்பு எனக் குறிப்பிடுகிறார்கள். இப்படி பைகா பெண்களுக்கு, இந்த பச்சை குத்தல்கள் ஒரு வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்கிறது.
இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளிலும், பெண்களை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே இதன் அடிப்படை நோக்கமாக நம்மால் கவனிக்க முடிகிறது.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டைப் பொருத்தவரை பச்சை குத்துதல் என்றால் குறவர் சமூக மக்கள்தான் பிரதானம் என்ற ந
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

