திருச்சி: BHEL பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை; போலீஸ் விசாரணை!

திருச்சி, திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். பெல் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு குடியிருப்புகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெல் நிறுவனத்தின் எஸ்.எஸ்.டி.பி பிரிவில் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கணேசபுரம் 8-வது தெருவைத் சேர்ந்த சண்முகம் என்பவர் பொது மேலாளராக வேலை பார்த்து வந்தார். அவர் வழக்கம் போல் பணிக்கு பணிக்குச் சென்றுள்ளார். ஆனால், அப்படி சென்றவர் மாலை பணி நேரம் முடிந்தும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் சண்முகத்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, சண்முகம் போனை எடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து, பெல் நிறுவன அலுவலகத்திற்கு குடும்பத்தினர் தொடர்பு கொண்டுள்ளனர். உடனே, அலுவலக ஊழியர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த பொழுது அலுவலக கதவு சாத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். நீண்ட நேரமாக சண்முகம் வீடு திரும்பாத நிலையில், அவரது மனைவி பார்வதி மீண்டும் பெல் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனால், பெல் நிறுவன ஊழியர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்த பொழுது அறையின் உள் பக்கக் கதவு தாழிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், கதவை உடைத்து பார்த்த பொழுது சண்முகம் அங்குள்ள சோபாவில் துப்பாக்கியால் தலையில் வைத்து சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக பெல் நிறுவன வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெல் காவல் நிலைய போலீஸார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பெல் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.

திருச்சி BHEL

சண்முகத்தின் மனைவி பார்வதி, பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பெல் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். அவர் தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் பயின்று வருகிறார். சண்முகத்திற்கு இதய நோய் பிரச்னை இருந்து வருவதாகவும், அதற்குரிய சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிய உரிமம் இல்லை என்பதும், அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில், பெல் காவல் நிலைய போலீஸார் சண்முகம் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன, அந்த துப்பாயாக்கி அவருக்கு எப்படி கிடைத்தது என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெல் நிறுவன அதிகாரி ஒருவர் துபாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.