`கோரிக்கை நிறைவேறும்வரை என் உடலை எடுக்காதீர்கள்- வேளாண்மைக்கு தண்ணீர் கேட்டு உயிரை மாய்த்த விவசாயி!

மகாராஷ்டிரா மாநிலம், தொழில் வளர்ச்சி மட்டுமல்லாது விவசாயத்திலும் சிறந்து விளங்குகிறது. ஆனாலும் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் மகாராஷ்டிராதான் முதலிடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் இருக்கும் கடக்பூர்னா அணையில் இருந்து 14 கிராமங்களின் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று விவசாயி கைலாஷ் அர்ஜூன் போராடி வந்தார். கடந்த ஆண்டு தனது கோரிக்கையை வலியுறுத்தி 10 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்படி இருந்தும் அரசு இவ்விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து தனது கோரிக்கையை வலியுறுத்தி கைலாஷ் அர்ஜூன் தனது கிராமத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது சொந்த ஊரான சிவானி என்ற கிராமத்தில் கைலாஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தற்கொலைக்கு முன்பு மூன்று பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், ``அரசு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. நமது கோரிக்கை ஏற்கப்படும் வரை எனது உடலை எடுக்கவேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார். இத்தற்கொலையால் கிராம மக்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். மாவட்ட பொறுப்பு அமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் வந்து உத்தரவாதம் கொடுக்கும் வரை கைலாஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று கூறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடி போராட்டம் நடத்தினர். இது குறித்து தற்கொலை செய்த கைலாஷ் மனைவி சுஷிலா கூறுகையில், ``எனது கணவரின் கோரிக்கையை அரசு புறக்கணித்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் விவசாயிகள் உரிமைக்காகப் போராடினார். ஆனால் நிர்வாகம் எதையும் செய்யவில்லை. அரசு தக்க நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் இப்போது உயிரோடு இருந்திருப்பார் என்று அழுதுகொண்டே தெரிவித்தார். இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், ``மாநில அரசு இந்து முஸ்லிம் அரசியலில் தீவிரமாக இருக்கிறது. விவசாயிகளை புறக்கணித்துள்ளது என்றார். புல்தானா விவசாயிகள் சங்கத்தலைவர் ரவிகாந்த் இது குறித்து கூறுகையில், ``கைலாஷ் தற்கொலை செய்யவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு அரசுதான் காரணம்" என்றார். தற்கொலை செய்த கைலாஷிற்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர். 2020ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு கைலாஷிற்கு சிறந்த இளம் விவசாயி என்ற விருதை கொடுத்து கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.