Kaun Banega Crorepati: ஓய்வு பெறும் அமிதாப்? - கோன் பனேகா குரோர்பதியை நடத்தப் போவது யார்?!
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சோனி டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 2000ம் ஆண்டில் இருந்து இந்த நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் நடத்தி வருகிறார். அமிதாப் பச்சன் திரைப்படங்களை சொந்தமாக தயாரித்து நஷ்டமடைந்து கடன் தொல்லையில் இருந்த நேரத்தில் அமிதாப் பச்சனுக்கு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி கை கொடுத்தது. இதனால் அந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சனுக்கு ஈடுபாடு அதிகமுண்டு. 57 வயதில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்த அமிதாப் பச்சனுக்கு இப்போது 82 வயதாகிறது. அப்படி இருந்தும் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு படத்தில் நடித்தபோது காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனாலும் தனது நடிப்பையோ அல்லது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்துவதையோ கைவிடவில்லை.
தற்போது சமீப காலமாக அமிதாப் பச்சன் ஓய்வு பெறுவது குறித்து மறைமுகமாக கூறி வருகிறார். ஓய்வுக்கான நேரம் வந்துவிட்டது என்று அமிதாப் பச்சன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்த வேறு ஆளை தயார் செய்யும்படி சம்பந்தப்பட்ட டிவி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் இப்போது தனது பணிச்சுமையை குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து அமிதாப் பச்சனுக்கு பதில் வேறு ஒருவரை தேடவேண்டிய வேலையில் சோனி டிவி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அடுத்த கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை வேறு ஒருவர்தான் நடத்துவார் என்று கூறப்படுகிறது.
அப்படி நடத்தினால் யார் அதற்கு தகுதியான நபர் என்பது குறித்து ரசிகர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிராண்ட் சார்பாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் அமிதாப் பச்சனுக்கு பதில் கோன் பனேகா குரோர்பதியை நடத்தக்கூடிய நபர் தேர்வில் முதலிடத்தில் நடிகர் ஷாருக் கான் இருக்கிறார். இதில் இரண்டாவது இடத்தில் அமிதாப் பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார். அதேசமயம் மூன்றாவது நபர் பாலிவுட்டிற்கு வெளியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இக்கருத்துக்கணிப்பில் 768 பேர் பங்கேற்றனர்.
அவர்களில் 360 பேர் பெண்கள் ஆவர். இந்தி பேசும பகுதியில் மட்டும் இக்கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கருத்துக்கணிப்பு வெளி வந்தபோதிலும் சோனி டிவியோ அல்லது அமிதாப் பச்சனே இன்னும் கோன் பனேகா குரோர்பதியை வேறு ஒருவர் நடத்தப்போகிறார் என்று தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
