பீர்க்கங்காய் கொள்ளு துவையல் செய்முறை
நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்படி காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்கிறோமோ அதற்கு இணையாக பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் நம்முடைய உடல் வலிமையாக இருப்பதற்கு கொள்ளு அத்தியாவசிய ஒன்றாக திகழ்கிறது. அதேபோல் நார்ச்சத்து நிறைந்த பீர்க்கங்காயும் நம்முடைய உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. இவை இரண்டையும் தனித்தனியாக செய்து கொடுத்தால் பலரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து துவையலாக செய்து கொடுத்தோம் என்றால் நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டு காலி செய்து விடுவார்கள். அப்படிப்பட்ட கொள்ளு பீர்க்கங்காய் துவையலை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பூண்டு – 8 பல்
பச்சை மிளகாய் – 5
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
பீர்க்கங்காய் நறுக்கியது – 2 கப்
உப்பு – தேவையான அளவு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தேங்காய் – 1/4 கப்
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்திருக்கும் கொள்ளை சேர்த்து நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். வறுபட்ட இந்த கொள்ளை ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாய், புளி இவை மூன்றையும் சேர்த்து நன்றாக இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு பீர்க்கங்காயை அதில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சீரகத்தை போட்டு நன்றாக கலந்து மூடி போட்டு எட்டு நிமிடம் வேக விட வேண்டும். இதற்கு தண்ணீர் சேர்க்கக்கூடாது. பீர்க்கங்காயிலேயே அதிக அளவில் நீர் சக்தி இருக்கிறது. பீர்க்கங்காய் நன்றாக வெந்தவுடன் அதை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் கொள்ளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நறுக்கி அல்லது துருவி வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து ஒரு முறை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு நாம் வதக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயையும் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அரைக்கும் பொழுதும் தண்ணீர் தேவைப்படாது. ஒருவேளை தேவைப்பட்டால் சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் சுவையான கொள்ளு பீர்க்கங்காய் துவையல் தயாராகிவிட்டது. இதை சுட சுட சாதம் வடித்து அதில் நெய் கலந்து பிணைந்து சாப்பிட உடலுக்கு வலிமை அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே: கேரட் பாசிப்பருப்பு பாயாசம் செய்முறை
சாப்பிடாத பொருட்களை இந்த முறையில் நாம் துவையலாக செய்து தரும்பொழுது அதை சாதத்தில் போட்டுக் கொண்டு சாப்பிடுவதைப் போலவே இட்லி, தோசை, சப்பாத்தி என்று அனைத்திற்கும் நம்மால் தொட்டுக்கொண்டு சாப்பிட முடியும். துவையலாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் இதை சட்னியாகவும் மாற்றி சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
The post பீர்க்கங்காய் கொள்ளு துவையல் செய்முறை appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.