`யார் இந்த தண்ணீரை குடிப்பார்கள்?- கும்பமேளாவிலிருந்து கொண்டுவந்த நீரை குடிக்க மறுத்த ராஜ் தாக்கரே!
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜ் நகரில் 45 நாள்கள் நடந்த கும்பமேளாவில் 65 கோடி பக்தர்கள் புனித நீராடி இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இக்கும்பமேளாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் செல்ல தவறவில்லை. பிரதமர் நரேந்திர மோடி முதல் முக்கிய தலைவர்கள் அனைவரும் சென்று அங்குள்ள திரிவேனி சங்கமத்தில் புனித நீராடினர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த நவநிர்மாண் சேனா கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாலா நந்த்காவ்கரும் கும்பமேளாவிற்கு சென்றுவிட்டு அங்குள்ள கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து வந்தார். அந்த புனித நீரை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயிடம் கொடுத்தார். ஆனால் ராஜ் தாக்கரே அந்த தண்ணீரை பார்த்து, `இதனை யார் குடிப்பார்? என்று கேட்டதோடு, இது போன்று மக்கள் கூடுவதையும் விமர்சித்தார்.
இது தொடர்பாக அவர் தனது தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, ``கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். கொரோனா என்ற ஒரு நோய் தொற்றில் இருந்து மீட்டுள்ளோம். அப்படி இருந்தும் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இப்போது மதச் சடங்கு குளியலுக்காக கூடுகிறார்கள். நம்பிக்கைகள் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். மூடநம்பிக்கையால் இருக்கக் கூடாது. கும்பமேளாவில் மக்கள் தங்களது உடலை தேய்த்து குளிப்பதை நான் சோசியல் மீடியாக்களில் பார்த்தேன். பாலா நந்த்காவ்கர் அந்த தண்ணீரை கொண்டு வந்து கொடுத்து என்னை குடிக்கச் சொன்னார். அந்த தண்ணீரை யார் குடிப்பார்கள். கும்பமேளாவிற்கு சென்று வந்தவர்களிடம், வந்தவுடன் குளித்தீர்களா என்று கேட்டேன்.
இந்தியாவில் நதிகள் புனிதமாக மதிக்கப்பட்டாலும், எந்த நதியும் சுத்தமாக இல்லை. இது தொடர்பாக வாக்குறுதிகள் கொடுத்தபோதும் நதிகள் சுத்தப்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே நதிகளை சுத்தம் செய்யும் பிரச்னை இருந்துகொண்டுதான் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
