திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; பயன்பாட்டிற்கு வந்த ரயில்வே மேம்பாலம் - பொதுமக்கள் மகிழ்ச்சி!

நாட்றம்பள்ளி- திருப்பத்தூரை இணைக்கும் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தது. எனினும், பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் இருந்ததால், வாகன ஓட்டிகள் 5 கி.மீ வரை சுற்றிச் செல்ல வேண்டிய சிரமமான சூழல் நிலவிவந்தது. மேலும் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது.

இது தொடர்பாக நம்மிடம் வந்து பேசிய சமூக ஆர்வலர்கள், ``தினந்தோறும் பணிக்குச் செல்லக் கூடியவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லக் கூடியவர்கள் என அனைவரும் பாலம் திறக்கப்படாமல் உள்ளதால், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் மக்கள் பயன்பாட்டுக்காக இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. எனவே, துறை சார்ந்த அமைச்சர், அதிகாரிகள் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மேம்பாலத்தைத் திறந்து வைத்தால், அனைவரும் பயனடைவார்கள்" என்றனர். 

இது குறித்து வாகன ஓட்டிகளிடம் விசாரித்தபோது, ``இந்த மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது . இதுதான் இப்படி என்று பார்த்தால், திறப்பதற்கும் இதே நிலைமைதான் போல. ஆரம்பத்தில் ரயில்வே கேட்டை கடந்துதான் சென்று கொண்டிருந்தோம். வேலைக்குச் சரியான நேரத்தில் செல்ல முடியாது. பிள்ளைகளையும் ஸ்கூலுக்கு அழைத்துச் செல்ல மிகவும் சிரமமாக இருக்கும். பின்னர் மேம்பாலம் கட்டுகிறோம் என்று இந்த வழியை முழுமையாக அடைத்து விட்டார்கள். தினமும் 5 கி.மீ வரை சுற்றிக் கொண்டுதான் எங்கள் ஊருக்குச் செல்வோம். மேம்பாலத்தை விரைந்து திறக்க வழிவகை செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில்‌ பொதுமக்களிடம் பேசியும் ஸ்பாட் விசிட் அடித்தும் மார்ச் 03-ம் தேதி திருப்பத்தூர்: பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாத ரயில்வே மேம்பாலம் - சிரமத்தில் மக்கள்!...என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு போயிருந்தோம். அதன் எதிரொலியாகச் செய்தி வெளியான சில நாள்களில் (07/03/2025) அன்று அதிகாரிகள் பொதுமக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலத்தை விரைந்து திறந்து வைத்துள்ளார்கள்.

`இனி நாங்கள் பணிக்கும், எங்கள் பிள்ளைகள் பள்ளிக் கல்லூரிகளுக்கும் சீக்கிரமாகவே சென்றடைய முடியும். அதிகாரிகளுக்கும், விகடனுக்கு நன்றி என இன்முகத்துடன் கூறுகின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.