பி.எஸ்.ஜி கல்லூரியில் மாணவர் அமைப்பு நடத்திய 10-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா - ஒரு தொகுப்பு
கோவைத் தனியார் கல்லூரியான பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘சிந்தனை மன்றம்’ என்ற ஒரு மாணவர் அமைப்பு பத்தாவது ஆண்டு புத்தகத் திருவிழாவை கடந்த மார்ச் 5,6ம் தேதிகளில் நடத்தியது. அந்த நிகழ்ச்சி குறித்த ஒரு தொகுப்பு.
அரங்கத்தின் வாசலில், ‘உங்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது’ என்று தொடங்கக்கூடிய இயக்குநர் மாரி செல்வராஜின் நீண்ட வாசகம் நம்மை வரவேற்றது. கல்லூரியில் இயங்கக் கூடிய ஒரு மாணவர் அமைப்பு பத்தாவது ஆண்டாகப் புத்தகத் திருவிழா நடத்துவதைப் பற்றியும், அந்த மாணவர் அமைப்புப் பற்றியும் அறிந்துக்கொள்ள, அந்த மாணவர் மன்ற பொறுப்பாளர்களில் ஒருவரான கவிநிலவனை சந்தித்து உரையாடினோம்.
அப்போது பேசியவர், “சிந்தனை மன்றம் என்ற இந்த அமைப்பு பி.எஸ்.ஜி கல்லூரியில் 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரைக்கும் மாணவர்கள் சமூகப் பிரச்னைகளை, அரசியலை, பண்பாட்டை , கலை இலக்கியத்தை, புதிய வளர்ச்சிப் படிநிலைகளை பற்றிச் சுதந்திரமாக உரையாடுவதற்கான ஒரு தளத்தை ‘சிந்தனை மன்றம்’ என்ற இந்த அமைப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. மிகவும் குறிப்பாக, மனிதனைப் பண்பட்டவனாக மாற்றும் வேலையை அமைப்பு செய்கின்றது.
எங்கள் அமைப்பு வாரவாரம் செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ஒரு குழு உரையாடலை ஒருங்கிணைக்கிறது. இந்தக் கல்லூரியில் உள்ள மாணவர்கள் எல்லோரும் வெவ்வேறான சமூகப் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். இப்படி வெவ்வேறான சமூகப் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் ஒரு அறையில் கூடி, ஒரு நிகழ்வு குறித்து உரையாடுவது என்பது ஜனநாயகப்பூர்வமான விஷயம் இல்லையா? மணிப்பூரில் நடந்த கலவரம் தொடங்கி, மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள், பாலியல் வன்கொடுமை, சமீபத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற தேசிய கல்விக் கொள்கை வரை எல்லா வகையான சமூக பிரச்னைகளையும் `சிந்தனை மன்றம் ஏதோ ஒரு வகையில் மாணவர்களின் மத்தியில் கவனத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பழங்குடி சமூகத்தில் தனிமனிதத்துவம் (Indiualism) என்ற ஒன்று கிடையாது. ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனிமனிதத்துவத்தை நாம் அதிகம் நம்புகிறோம்; அதை நோக்கி நகர்கிறோம்; இது மனிதனை உதிரியாக்கிவிடக் கூடிய ஆபத்துள்ளது. இப்படியான சூழலில், இந்த மாதிரியான உரையாடல்கள் மாணவர் மத்தியில் அமைப்பாக மாற வேண்டிய தேவையை உணர்த்துவதாக நம்புகிறோம். மேலும் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு, ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய ரசனையையும், சமூகப் பிரச்னைகளின் மீதான தன்னுடைய பார்வையையும் கூர்தீட்டிக் கொள்ளவேண்டிய தேவையுள்ளது. அதற்கும் இந்த அமைப்பு ஏதேனும் ஒரு வகையில் உதவுவதாக நம்புகிறோம்.
சிந்தனை மன்றம் என்ற இந்த அமைப்பு கல்லூரிக்குள் செயல்படும் ஒரு அமைப்பு என்றாலும் சமூகத்தின் சின்னஞ்சிறு அதிர்வலைகளையாவது சத்தமின்றி ஏற்படுத்துதின்றது என்று கூறலாம். சமூகத்தில் எந்த விதமான பிரச்னைகள் நடந்தாலும் அதைப் பற்றியான மிகக் காத்திரமான ஓர் உரையாடலை முன்னெடுக்கும் இடமாக சிந்தனை மன்றம் செயல்பட்டு வருகிறது. குறைந்தபட்சமாக சமூகப் பிரச்னைகள் குறித்தான உரையாடல்களை மாணவர்களிடம் முன்வைப்பதில் தொடங்கி, தேவை ஏற்படும்போது அதற்காக களத்தில் குரல் கொடுக்கும் வரை இந்த அமைப்பு செயல்பட்டுள்ளது.

சிந்தனை மன்றத்திலிருந்து வெளியே சென்றவர்களில் பெரும்பாலானோர் எழுத்தாளர், கலைஞர், சமூக செயற்பாட்டாளர் என ஏதேனும் ஒரு வகையில் இந்த சமூகத்திற்கு பங்களிக்க கூடியவர்களாக உள்ளார்கள். உதாரணமாக பெருமாள் முருகன் தனது சாதியும் நானும் என்கிற நூலின் முன்னுரையில், நான் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்தேன். அங்கு சிந்தனை மன்றம் என்கிற ஒரு அமைப்பு இருந்தது. எழுத்தாளனுக்கு இப்படி எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ அதைப்போல், பேச வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதற்கான களமாக எங்களுக்கு அமைந்தது சிந்தனை மன்றம் என்ற அமைப்பு தான். அதில் கிடைத்த அனுபவங்கள் எனது வாழ்க்கையில் மிக முக்கியமான அனுபவங்கள் என்று குறிப்பிடுகிறார். இப்படி பல்வேறு எழுத்தாளர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும், சமூகப் பிரக்ஞையை உள்ள மனிதர்களையும் சிந்தனை மன்றம் இந்த தமிழ்ச் சமூகத்திற்கு தந்துள்ளது. அது நாளையும் தந்துக்கொண்டே இருக்கும். வீதியில் இறங்கி போராடக்கூடிய மனிதர்களை சிந்தனை மன்றம் உருவாக்காவிட்டாலும், சமூகத்தில் நடக்கிற கொடூரங்களை கண்டு பதறுகின்ற நெஞ்சங்களையும், ஒருவருக்கு உதவி என்றால் நீள்கின்ற கைகளையும் இந்தச் சிந்தனை மன்றம் நிச்சயமாக உருவாக்கியுள்ளது என்போம்.
தமிழ்நாடு அரசு இப்போது எல்லா மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்துகிறார்கள். இப்போது தான் சில மாவட்டங்களில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடக்கின்றது. இப்படியான சூழலில், எங்கள் மாணவர் அமைப்பு பல இடர்பாடுகளுக்கு இடையிலும் இன்று 10-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது மற்றக் கல்லூரிகளில் நடப்பது போல், நூலகத்துறை நடத்தும் நிகழ்வு அல்ல! முழுக்க முழுக்க மாணவர்களால் நடத்தப்படும் ஒரு நிகழ்வு. புத்தக வாசிப்பு என்பது ஒரு அறிவியக்கம். அதை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய தேவையுள்ளதாகக் கருதுகிறோம்.
சமூகத்தைப் பற்றிப் பேசும் நாங்கள் புத்தகத்தை கொண்டாடுவதும் இயல்பு தானே? எங்களுடயை இந்த புத்தகத் திருவிழாவின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், கிஃப்ட் த புக் என்ற ஒன்றை நாங்கள் நடத்துகிறோம். இதில் யார் , யாருக்கு வேண்டுமானாலும், எங்கள் மூலம் புத்தகத்தைப் பரிசளிக்கலாம். பரிசளிப்பவர்களின் விவரங்கள் இதில் காக்கப்படும். யாராவது உங்களுக்கு ஒரு புத்தகத்தை பரிசளித்தால், பரிசளித்ததற்காகவாவது அந்த புத்தகத்தை வாசிப்போம் இல்லையா? அப்படி பரிசளிக்கும்போது, இதுவரை அறவே புத்தக வாசிப்பு அற்ற ஒரு நபருக்கு புத்தக வாசிப்புப் பழக்கம் ஏற்படக்கூடும் இல்லையா? வாசிப்பை மாணவர்கள் மத்தியில் பரவாலக்கிட அவ்வப்போது இப்படி பல குட்டிக்கரணங்கள் அடிக்க வேண்டியுள்ளது.” என்கிறார் குறும்பாக...

மேலும் தொடர்ந்தவர் “இதற்கு முன்பாக பல நிகழ்வுகளை இந்த மன்றம் நடத்தியுள்ளது. அதில் முக்கியமானதாக நான் கருதுவது சிந்தனை வாரம். ஒரு வாரம் முழுக்க வெவ்வேறு துறை சார்ந்த எழுத்தாளர்களும், செயற்பாட்டாளர்களும் வந்து உரையாற்றுவார்கள். அவர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே உரையாடல் நிகழும். அதில் இயக்குநர் மாரி செல்வராஜ், எழுத்தாளர் பவா செல்லத்துரை, கவிஞர் இசை, எழுத்தாளர் இரா முருகவேள் போன்ற பலர் இந்த மன்றத்தில் நின்று உரையாற்றியுள்ளார்கள். இப்போது புத்தகத் திருவிழாவும், கலைத்திருவிழாவும் நடத்துகின்றோம். அதில் முக்கியமானது. ‘ஃபோட்டோஃபிலிக்’ என்ற நிகழ்வு. இதை கலைத்திருவிழாவின் ஒரு அங்கமாக நிகழ்த்துகிறோம். இது மாணவர்கள் மத்தியில் ‘மொபைல் ஃபோட்டோகிராபி’யை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படுகிறது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் சில ஃபோட்டோக்களை ஓரிரு நாட்களுக்கு காட்சிப்படுத்துகிறோம். ஒரு கலையை நிகழ்த்துவதற்கு எந்த வித பெரிய உபகரணங்களும் தேவை இல்லை என்பது எங்கள் கருத்து. ஃபோனோ, கேமிராவோ எல்லாம் ஒரு கருவி தான். ஒரு விஷயத்தைப் பார்க்கிற கோணம் தானே முக்கியத்துவமாகின்றது.”
“இவ்வாறு நாங்கள் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளை முன்னெடுத்தாலும் கல்லூரி முதல்வரும், கல்லூரி நிர்வாகமும் எங்களுக்கு எப்போதுமே உறுதுணையாக நின்றுள்ளார்கள். நாங்கள் அவ்வப்போது சிறு சிறு தவறுகளைச் செய்தபோதும், எங்களது தூய நோக்கம் வீணாகிவிடக்கூடாது என்ற அக்கறை அவர்களிடம் உள்ளது. இது மாதிரியான ஒரு மாணவர் அமைப்பு சுதந்திரமாக செயல்படுவது என்பது கல்லூரியின் ஒத்துழைப்பின்றி சாத்தியமாகாது. இத்தருணத்தில் கல்லூரி நிர்வாகத்திற்கும் எங்கள் நன்றியை உங்கள் வாயிலாக கூறிக்கொள்கிறோம்.”

“நீங்கள் எதிர்காலச் செயல்பாடு குறித்துக் கேட்டீர்கள். சிந்தனை மன்றம் தொடக்கத்தில் தமிழிலக்கியம் சார்ந்து இயங்கியுள்ளது. அதற்கு பின்பு ஒவ்வொரு காலத்திலும் அரசியல், தத்துவம், கலை என அதற்கான பேசுபொருளையும், அதற்கான ஆட்களையும் அந்த மன்றம் தான் கண்டடைந்துள்ளது. இந்த மன்றத்திற்கு நாங்களே ஒரு கருவி தான். அதற்கான மனிதர்களை அதுவே கண்டடையும். எது எப்படியானாலும், இந்த மன்றம் மிக நிச்சயமாக சமூக அக்கறை கொண்ட மனிதர்களை உருவாக்கும் என்பது மட்டும் திண்ணம்.” என்று நம்பிக்கை ஒளிபூக்க பேசுகிறார் கவிநிலவன்.
உண்மையில் இயக்குநர் மாரி செல்வராஜ் சொன்னதைப் போல, நமக்கும் பொறாமையாகத்தான் இருக்கிறது இவர்களைப் பார்த்தால்...
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
