``திருமணம் மீறிய உறவு; வேறு ஒருவருடன் தொடர்பு.. - பெண்ணை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் இளம்பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுக்கபட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலையடுத்து, வெப்படை காவல் நிலைய போலீஸார் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்றனர். அங்கு இறந்து கிடந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் (வயது: 27) என்பது தெரியவந்தது. அவருடன் தங்கியிருந்த நபர் குளித்தலையை சேர்ந்த அருண்பாண்டியன் (வயது: 35) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீஸார் அருண்பாண்டியன் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று அவரை தேடும் முயற்சியில் இறங்கினர். இந்நிலையில், வெப்படை அருகே உள்ள உப்புபாளையம் பகுதியில் பதுங்கி இருந்த அருண்பாண்டியனை போலீஸார் கைது செய்தனர்.

அருண்பாண்டியன்

அப்போது, சித்ராவை கொலை செய்ததாக போலீஸாரிடம் ஒத்துக்கொண்ட அருண்பாண்டியன், அவரை கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், கரூர் மாவட்டம், குளித்தலை தான் எனக்கு சொந்த ஊர். கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவி என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதேபோல், அதேப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். நாங்கள் இருவரும் குளித்தலை பகுதியில் வேலைக்குச் செல்லும் போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

நாமக்கல் பகுதியில் உள்ள நூற்பாலைக்கு இருவரும் வேலைக்கு வந்தோம். அப்போது, வெப்படை சந்தைப்பேட்டையில் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் கணவன், மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். இந்நிலையில், நூற்பாலையில் வேலை பார்க்கும் வேறு ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் நெருங்கிப் பழகினார். இது, எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அந்த நபருடன் பழகுவதை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தேன். நான் சொல்வதை அவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

கைது

அதை நான் கண்டித்ததால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், எங்களுக்கு இடையே மீண்டும் வழக்கம்போல் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த நான் கத்தியை எடுத்து அவள் கழுத்தை அறுத்ததோடு, அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டு படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு, அருண்பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தன்னுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த ஆத்திரத்தில் இளைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.