பிரியாணி சாப்பிட்ட பெண்ணின் தொண்டையில் சிக்கிய எலும்பு; 8 மணி நேரம் போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்
மும்பை குர்லாவைச் சேர்ந்த ரூபி ஷேக் (34) என்ற பெண் தனது வீட்டில் தயாரிக்கப்பட்ட சிக்கன் பிரியாணியை குடும்பத்தினருடன் அமர்ந்து ஆசையாக சாப்பிட்டார். அவர் பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதில் இருந்த எலும்பு துண்டையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டார். அவர் சாப்பிட்ட எலும்பு துண்டு தொண்டையில் சிக்கிக்கொண்டது. எலும்பு துண்டு தவறான வழித்தடத்தில் சென்று எங்கும் நகரமுடியாமல் வழியில் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பெண்ணுக்கு மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
டாக்டர்கள் அவரை மருத்துவமனையில் சேரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் மருத்துவமனையில் சேர மறுத்து வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்கு வந்த பிறகு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் அவரது தொண்டை பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது எலும்பு துண்டு மிகவும் சிக்கலான பகுதியில் சிக்கி இருந்தது. அதனை அகற்றுவது மிகவும் சிரமமான ஒன்றாகும். அதற்கு 8 லட்சம் வரை செலவாகும் எனக் கூறியிருக்கின்றனர். அந்த அளவுக்கு சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தால் செலவு செய்ய முடியாத நிலையில் இருந்தனர்.
இதையடுத்து நன்கொடை மூலம் அச்சிகிச்சைக்குத் தேவையான பணத்தை மருத்துவமனை நிர்வாகமே ஏற்பாடு செய்தது. இதையடுத்து எலும்பு துண்டை அகற்ற டாக்டர்கள் அப்பெண்ணிற்கு தொண்டையில் ஆப்ரேசன் செய்தனர். மொத்தம் 8 மணி நேரம் டாக்டர்கள் ஆபரேசன் செய்த பிறகே தொண்டையில் சிக்கி இருந்த எலும்பு துண்டை அப்புறப்படுத்தினர். பெண் சிகிச்சையில் இருந்த 21 நாள்களும் பைப் மூலம் உணவு வழங்கப்பட்டது.
இது குறித்து ரூபிஷேக் கூறுகையில், ``மோசமான அனுபவத்தால் இனிமேல் பிரியாணியே சாப்பிடமாட்டேன்" என்று தெரிவித்தார். தனது கணவரிடமும் இனி மேல் வீட்டில் பிரியாணி சமைக்க மாட்டேன் என்று தெளிவாக சொல்லிவிட்டார். ரூபியிடம் ஒரு மாதம் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

