பீத்தோவன்: `குடியால் வீழ்ந்த மாபெரும் இசைக்கலைஞன் - சொல்ல மறந்த கதை! | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நாள் முழுக்க நின்றுகொண்டே பியானோ வாசித்ததால் பீத்தோவனுக்கு கால்கள் நடுங்கின.
பியானோவை நின்றுகொண்டே ஏன் வாசிக்க வேண்டும்? சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்துகொண்டு வாசிக்கலாமே! உண்மை தான். ஆனால் அதில் தான் ஒரு உயர பிரச்சினை இருந்தது.
பீத்தோவனுக்கு பியானோ எட்டவில்லை!
ஆம்.
ஐந்து வயது சிறுவனுக்கு எப்படி எட்டும்? உண்மையில் அப்போது பீத்தோவனுக்கு வயது வெறும் ஐந்து தான்! எனில், நாற்காலி மீதேறி தானே வாசிக்க முடியும்? அதுசரி, ஆனால் கால்கள் நடுங்கும் அளவுக்கு ஏன் வாசிக்க வேண்டும்?
வாசிக்கத் தான் வேண்டும். இல்லையெனில் பீத்தோவனின் தந்தை அவனை வெளுத்து வாங்கி விடுவார். அவரைப் பொருத்தவரை, பீத்தோவன் மொஸார்ட்டை போல இசையில் புகழ்பெற வேண்டும். அதுவும் அவரைப் போலவே இளம்வயதில். அதனால் தான் இந்த கடும் பயிற்சி.
ஆனால் பீத்தோவனுக்கு தந்தையுடைய இந்த கடுமையான அணுகுமுறை சுத்தமாக பிடிக்கவில்லை. அவரிடமே இதை நேரடியாக சொல்லலாம் தான். ஆனால் அதற்கும் அடி விழுமே!
சரி நமக்கு வாய்த்தது இந்த பியோனா தான் என தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டான் சிறுவன் பீத்தோவன். அன்று ஆரம்பித்த இசைப் பயணம், நிறுத்தமே இல்லாத தொடர்வண்டி போல பீத்தோவனின் வாழ்நாள் முழுக்க தொடர்ந்தது.
கண்டிப்பு மிக்க தந்தை, பாதியில் முடிந்த பள்ளி வாழ்க்கை, இசையால் அடைந்த புகழ், நிறைவேறாத காதல்கள், செவித்திறன் குறைபாடு, குடிப்பழக்கம், மன அழுத்தம் என பீத்தோவனின் வாழ்க்கை அசாத்தியமானது.
பீத்தோவனின் சாதனைகள் பற்றி பல கட்டுரைகள் வாசித்திருப்போம். ஆனால், தனிப்பட்ட நபராக பீத்தோவன் எப்படி இருந்தார்? அவருக்கிருந்த மனநலச் சிக்கல்கள் என்னென்ன? குடிப்பழக்கம் அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
பீத்தோவன், 1770ம் ஆண்டு ஜெர்மனியின் பான் ( Bonn) பகுதியில் பிறந்தவர். இவருடைய தாத்தா, தந்தை, உறவினர்கள் என ஒட்டு மொத்த குடும்பமும் இசைத்துறையைச் சேர்ந்தது. ஆரம்பத்தில் சொந்த தந்தையிடம் இசை கற்றுக் கொண்ட பீத்தோவன், பின்னர் கிறிஸ்டியன் கோட்லாப் என்கிற இசைக்கலைஞரிடம் இசை பயிற்சி மேற்கொண்டார்.
ஆறு வயதிலேயே பொது மேடையேறி இசை அரங்கேற்றம் நடத்தியது அக்காலத்தில் அவர் செய்த மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. எந்த மொஸார்ட்டை முன்மாதிரியாக வைத்து இசை கற்க ஆரம்பித்தாரோ, அவரையே முந்தும் சூழல் பின்னாளில் உருவானது. அந்த அளவுக்கு இசைத்துறையில் பீத்தோவனின் பெயர் கொடிகட்டிப் பறந்தது.
ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தார் பீத்தோவன். அதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருந்தது அவருடைய குணாதிசயங்கள் என்றால் நம்ப முடிகிறதா?
வியன்னாவைச் சேர்ந்த மனநல மருத்துவரான ஆன்ட்ரியாஸ் எர்ஃபர்த் (Dr. Andreas Erfurth), பீத்தோவனின் மனநலச் சிக்கல்கள் குறித்து ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதியிருக்கிறார்.
அதில், பீத்தோவனுக்கு Hyperthymic Temperament எனும் நிலையற்ற குணாதிசயம் இருந்ததைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதாவது பீத்தோவன் சிறுவயது முதலே மிகவும் உணர்ச்சிவசப்படும் நபராக இருந்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படுவது, எளிதில் மனமுடைந்து அழுவது, பதற்றம், பயம், நடுக்கம் என சிடுமூஞ்சிக்காரராகவே அறியப்பட்டிருக்கிறார் பீத்தோவன்.
இந்த Hyperthymic Temperament பெர்சனாலிட்டி கொண்டவர்கள் பொதுவாக அதீத உடல் ஆற்றலுடன் செயல்படுவர். அவ்வளவு சீக்கிரத்தில் சோர்வடைய மாட்டார்கள். சிறிதளவு நேரம் மட்டுமே தூக்கம் தேவைப்படும். எளிதில் கவனம் சிதறிப் போகும். ஒரு இடத்தில் அமைதியாக இவர்களால் உட்கார முடியாது. வாழ்க்கையில் இவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் எல்லாம், நான் தலைகீழாகத் தான் குதிப்பேன்... என்பதைப் போலவே இருக்கும்.
புகழ்பெற்ற ஜெர்மானிய எழுத்தாளரான கதே (Johann Wolfgang von Goethe), பீத்தோவனை ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறார். பீத்தோவன் பற்றி அவர் எழுதிய குறிப்புகள் இவை: I have never seen an artist more condensed, more energetic and more intimate like Beethoven.
பீத்தோவனின் நண்பர் ஒருவர்,பீத்தோவனை யாரும் அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியாது. அவர் ஒரு புரியாத புதிர்... என்கிறார். அதனால் தானோ என்னவோ பீத்தோவனின் மூன்று (சில குறிப்புகளில் நான்கு, ஐந்து என லிஸ்ட் நீள்கிறது) காதல் முயற்சியும் தோல்வியில் முடிந்தன. கடைசிவரை அவர் திருமணம் செய்து கொள்ளவே இல்லை.
ஆனால் இவையெல்லாம் எவ்வகையிலும் பீத்தோவனின் இசை வாழ்க்கையை பாதிக்கவில்லை. புகழின் உச்சிக்கு ஏறிக்கொண்டே இருந்தார் அவர். ஏணியாக பியானோ செயல்பட்டது!

கிட்டத்தட்ட அந்த சமயத்தில் தான் யாரும் எதிர்பார்த்திராத ஒரு திருப்பம் பீத்தோவனின் வாழ்க்கையில் அரங்கேறியது.
ஓர் இசைக்கலைஞனின் ஆன்மா அவனுடைய செவித்திறனில் தான் இருக்கிறது அல்லவா? ஆனால் பீத்தோவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய செவித்திறனை இழந்து கொண்டிருந்தார்!
அது அவருடைய இருபத்தி எட்டாவது வயதில் ஆரம்பித்தது. நாற்பது வயதை நெருங்கும் போது, மொத்தமாக கேட்கும் திறனை இழந்திருந்தார் பீத்தோவன். செவித்திறனை இழந்ததால் இசையமைப்பதை விட்டுவிட்டாரா? அதுதான் இல்லை. சொல்லப்போனால் அதன்பின்பு தான் பீத்தோவனின் மாஸ்டர் பீஸ் என அறியப்படும் பல முக்கிய சிம்பொனிகள் உயிர்பெற்றன.
புகழ்பெற்ற அவருடைய ஒன்பதாவது சின்பொனியை மேடையில் அரங்கேற்றியபோது, அவர் இசைப்பதை அவராலேயே கேட்க முடியாமல் போனது. இருந்தும் ஒப்பற்ற அந்த சாதனையை திறம்பட நிகழ்த்திக் காட்டினார் அவர்.
பீத்தோவன் இறந்தபோது அவருடைய பிரேத பரிசோதனையை கார்ல் ரோகிடான்ஸ்கி (Karl Rokitansky) எனும் மருத்துவர் மேற்கொண்டார். அதில் பீத்தோவனுடைய காது நரம்புகள் புடைத்திருப்பதைக் கண்டார். மேலும் அப்பகுதியில் இருந்த எலும்புகள் அடர்த்தியாக இருந்தன. இதை வைத்து பீத்தோவனுக்கு பேஜட் நோய் (Pagets Disease) இருந்திருக்கலாம் என்றார் ரோகிடான்ஸ்கி.
பேஜட் நோய் பெரும்பாலும் உடலிலுள்ள முக்கிய எலும்புகளைத் தாக்கும். காது எலும்புகள் உள்பட. இதன் காரணமாகவே பீத்தோவனுக்கு செவித்திறன் இழந்திருக்காலம் என்பது பெரும்பாலான மருத்துவர்களின் வாதம். சிலர், தந்தை மூலம் சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளே (Physical Abuse) காரணம் என்கின்றனர். ஆனால் அதற்குண்டான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை.
1802-ல் பீத்தோவன் தன்னுடைய சகோதரர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் காது கேட்காத தன்னுடைய இயலாமை பற்றியும் தற்கொலை எண்ணத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அவருக்குத் தீவிர மன அழுத்தம் இருந்ததற்கான சான்றுகள் எதுவுமில்லை.
மன அழுத்தமே இருந்தாலும், அதை இரண்டு விஷயங்களின் மூலம் போக்கிக் கொள்ளும் பழக்கம் பீத்தோவனுக்கு இருந்தது.
ஒன்று நாம் அனைவரும் அறிந்ததே.
இசை
மற்றொன்று?
தந்தையை முற்றிலுமாக வெறுத்த பீத்தோவன், அவரிடமிருந்து ஒன்றை மற்றும் விடாப்பிடியாக கற்றுக் கொண்டார்.
குடிப்பழக்கம்
தந்தைக்காவது பழக்கம் என்கிற அளவில் இருந்தது. ஆனால் பீத்தோவன் குடிக்கு அடிமையாகி இருந்தார். ஏற்கெனவே அவருக்கு இருந்த Hyperthymic Temperament குணம், இதை இன்னமும் அதிகப்படுத்தியது.
இதைப் பற்றி எர்ஃபர்த் விளக்கும்போது, பீத்தோவன் குடிக்க ஆரம்பித்து விட்டால் அவரை யாரும் நிறுத்த முடியாது. உணவு கூட இல்லாமல் தொடர்ந்து பல நாள்கள் குடியில் மூழ்கியிருப்பார் பீத்தோவன். மக்கள் மனதை இசையால் கட்டுப்படுத்தி வைத்திருந்த அவரால் குடியை கட்டுப்படுத்த முடியவில்லை... என்கிறார்.

பியானோவின் சத்தத்தோடும், சாராயத்தின் வாசத்தோடும் வளர்ந்ததாலோ என்னவோ இவ்விரண்டின் மூலமாகவே சந்தோஷத்தை தேடிக்கொண்டார் பீத்தோவன். ஆனால் இசையால் வளர்ந்தவர், குடியால் வீழ்ந்தார்.
ரோகிடான்ஸ்கியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூட, பீத்தோவனின் கல்லீரல் குடியால் செயலிழந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. சொல்லப்போனால் பீத்தோவனின் உயிரைக் குடித்ததே குடி தான்!
பீத்தோவன், 1827ம் ஆண்டு மார்ச் 26ல் தன்னுடைய ஐம்பத்தி ஆறாவது வயதில் இறந்தார். அவருடைய இறப்புக்கு பல்லாயிரம் பேர் கூடினர். இசைப்பிரியர்கள் கண்ணீர் வடித்தனர். ஆங்காங்கே பியானோ அலறியது.
பீத்தோவன் இறந்து கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் ஆகிறது. இன்று அவரைத் தெரியாதவர்கள் உலகில் யாருமில்லை. இசைத்துறையில் சாதிக்க விரும்பும் எவரும் பீத்தோவனைத் தான் முன்மாதிரியாக கொண்டிருக்கிறார்கள்.
அவருடைய Fur Elise நோட்ஸ் புகழ்பெற்றது.
அதைக் கேட்காதவர்கள் உலகில் யாரேனும் இருக்கிறார்களா என்ன? (இதுவரை கேட்கவில்லை என்றால் இப்போதே யூடியூப்பில் தேடி கேட்கவும்).
இறுதியாக...
கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு, கலைக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கும் எந்த நாடாக இருந்தாலும், அங்கே கலை மேன்மேலும் வளரும் என்பதில் சந்தேகமில்லை.
-சரத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


