Trump: அமெரிக்காவின் பொற்கால ஆட்சி இது... - அதிபரான பின் முதன்முறையாக காங்கிரஸில் பேசிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பின் அதிரடி பேச்சுகள், அதிரடி அறிவிப்புகள் என தொடர்ந்து வெளியிட்டு வரும் ட்ரம்ப், இன்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றியுள்ளார்.

அவர் பேசியதாவது...

"ஆறு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க பொற்காலத்தின் அதிபராகப் பொறுப்பேற்றேன். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து வரலாற்றின் வெற்றி காலமாக இருக்க வேண்டும் என்று பல பல அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறேன்.

அமெரிக்காவின் பெருமை, நம்பிக்கை உள்ளிட்டவை மீண்டும் திரும்பியுள்ளது. இதுவரை இருந்தவற்றை விட, தற்போது அமெரிக்காவின் கனவு மிகவும் பெரிதாகி உள்ளது. அமெரிக்காவின் கனவை யாராலும் நிறுத்த முடியாது. நம்முடைய தற்போதைய கம்பேக்கை உலகமே இதுவரை பார்த்திருக்காது. இனி மேலும் பார்க்காது.

இந்த ஆறு வாரத்தில் நான் நூறுக்கும் மேற்பட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளேன்... 400-க்கும் மேற்பட்ட அதிகார நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். இவை அனைத்தும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்டதாகும்.

நம்முடைய ஆட்சி

பணி செய்வதற்காக மக்கள் என்னை தேர்ந்தெடுத்தார்கள். அந்தப் பணியை நான் இப்போது செய்து வருகிறேன்.

நம்முடைய ஆட்சியின் முதல் மாதம் முழுவதும் வரலாற்றிலேயே நம் நாட்டின் சிறந்த ஆட்சி காலமாக இருந்தது என பலர் கூறியுள்ளனர்.

நான் பதவியேற்ற சில மணிநேரத்திலேயே அமெரிக்காவின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தி, நம் நாட்டிற்குள் சட்ட விரோதமான குடியேற்றத்தை தடுக்க அமெரிக்க ராணுவத்தை அங்கு குவித்தேன். இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு சட்ட விரோத குடியேற்றத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபரான ஜோ பைடன் ஆட்சியில் மாதம் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சட்ட விரோத குடியேற்றங்கள் நடந்து வந்தன. அவர்களில் குற்றவாளிகள், கடத்தல்காரர்களும் அடங்குவர்.

டிரில்லியன் டாலர்கள் கணக்கில் நம்மிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டிருந்த பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிவிட்டேன். ஊழல் மிகுந்த உலக சுகாதார நிலையத்தில் இருந்து வெளியேற்றிவிட்டேன். மனித உரிமை அமைப்பில் இருந்தும் வெளியேறிவிட்டேன்.

என்னை பொறுத்தவரை, ஒவ்வொரு புதிய சட்டத்திற்கு, 10 பழைய சட்டங்களை நீக்க வேண்டும். அரசின் அனைத்து சென்சார்களையும் நீக்கி மீண்டும் பேச்சுரிமையை கொண்டுவந்துள்ளேன்.

இப்போது ஆங்கிலத்தை அமெரிக்காவில் அதிகார மொழியாக மாற்றி உத்தரவிட்டுள்ளேன்.

ஆங்கிலம் - அமெரிக்காவின் அதிகார மொழி

டாக்டர், நர்ஸ், வழக்கறிஞர் எதுவாக இருந்தாலும் நீங்கள் உங்கள் திறமையின் அடிப்படையில் தான் பணியில் அமர்த்தப்பட வேண்டுமே தவிர, பாலினம் மற்றும் மதம் சார்ந்து அல்ல.

அமெரிக்க பள்ளிகளில் இருந்த பாலினங்கள் குறித்த விஷத்தனமான கல்வியை நீக்கியுள்ளேன். இனி அமெரிக்காவில் இரண்டே இரண்டு பாலினம் தான். ஒன்று ஆண், இன்னொன்று பெண்.

முன் நடந்த ஆட்சியின் சட்ட திட்டங்களால் பணவீக்கம், பொருளாதாரம் போன்றவை மிகவும் மோசமடைந்து வருகிறது. கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான நிலை அது. இதை சரிசெய்ய அமெரிக்க அதிபராக ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டே இருக்கிறேன்.

அரசு சார்ப்பாக அரசு நிர்வாக துறை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் துறையை எலான் மஸ்க் தலைமையேற்று நடத்தி வருகிறார். அவர் சிறப்பாக செயலாற்றுகிறார்.

பிற நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் நிதி சென்றுகொண்டிருக்கிறது. அதை முற்றிலும் நிறுத்த வேண்டும். அதன் ஒரு பகுதியாக, இப்போது பாதி நிதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் ஆரம்பமே.

கோல்ட் கார்டு மூலம் முதலீடுகளும், வரிகளையும் அமெரிக்கா பெறும். இனி அமெரிக்காவில் டிப்ஸ், ஓவர்டைம், சமூக பாதுகாப்பு பலன்களுக்கு வரி கிடையாது. வருமான வரி விதிப்பு நிறுத்தத்தின் முன்னோட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.

எலான் மஸ்க்...

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்களை வாங்கினால் மட்டுமே, அந்தக் கடனுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும். ஒருவேளை அமெரிக்காவில் உங்கள் பொருட்கள் தயாரிக்கப்படவில்லை என்றால், வரி விதிக்கப்படும். சில சமயங்களில், இது மிகப்பெரிய தொகையாக கூட இருக்கலாம்.

இந்தியா நம் பொருட்கள் மீது 100 சதவிகிதத்திற்கும் மேலான வரியை விதிக்கிறது. ஏப்ரல் 2-ம் தேதி முதல் எந்த நாடு நமக்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கான வரியை அவர்கள் மீது நாமும் விதிப்போம்.

ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை பிடிக்க உதவிய பாகிஸ்தானுக்கு நன்றி.

உக்ரைன் போரை நிறுத்த கடுமையாக உழைத்து வருகிறேன்" என்று பேசியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.