மினியேச்சர் சைஸ்; மருத்துவ மகத்துவம்; மேற்குத் தொடர்ச்சி மலையே தாயகம் - அயனி பலா தெரியுமா?

அயனி பலா

பழங்களின் அரசன் என வர்ணிக்கப்படும் பாலா பழம், மரத்தில் காய்க்கும் பழ வகைகளில் உலகின் மிகப்பெரிய பழ வகையாக அறியப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையைத் தாயகமாகக் கொண்டதாக கருதப்படும் பலாவில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் அயனி பலா.

அயனி பலா

மலையாளத்தில் அஞ்சலி சக்கா என அழைக்கப்படும் இந்த அயனி மரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. தென்னிந்திய காடுகளில் சுமார் 30 மீட்டர் உயரத்திற்கு மேல் ஓங்கி உயர்ந்து வளரும் காட்டுப் பலவான அயனி மரங்கள், தேக்கு மரத்திற்கு இணையாக பயன்படுத்தப்படுகிறது. கேரளாவின் பாம்பு படகு தயாரிப்பில் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பார்லியார் பகுதிகளில் உள்ள பசுமை மாறாக் காடுகளில் அதிக அளவில் காணப்பட்ட இந்த அயனி பலா மரங்கள் தற்போது அரிதாகி வருகின்றன. சூழலியல் பாதுகாப்பு சமநிலையில் முக்கிய பங்காற்றி வரும் அயனி பலா மரங்களை பாதுகாக்க வேண்டும் என ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மிகப்பெரிய பலா பழத்தைப்‌ போன்ற அதே தோற்றத்தில் மினியேச்சர் அளவான கையடக்க அளவில் இருக்கும் இந்த அயனி பலாவில் ஆஸ்துமா முதல் ஆக்சிஜனேற்றம் வரை பல்வேறு மருத்துவ மகத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது.‌

அயனி பலா

அரியவகை அயனி பலா பழங்கள் ஊட்டியில் உள்ள சில கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பலாவை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனிடையே சீசன் சமயங்களில் மர உச்சிகளில் இருந்து விழும் பழங்களில் இருந்து விதைகளை சேகரித்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய வனத்துறை முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.