Heart : உங்கள் இதயத்துக்கு ஆயுள் நூறு! - இதய நலன் A-Z | Explainer
எந்தப் பக்கம் திரும்பினாலும் ஹார்ட் அட்டாக் செய்திகள். அவை ஒருபுறம் இருக்கட்டும். வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் இதயம் குறித்த பயமின்றி நிம்மதியாக வாழ்வதற்கு ஓர் ’ஆல் இஸ் வெல்’ பேட்டி கொடுங்கள் டாக்டர் என்றோம், சென்னையைச் சேர்ந்த மூத்த கார்டியாலஜிஸ்ட் சொக்கலிங்கம் அவர்களிடம்.
இதயம் இயங்க வேண்டுமென்றால் ஆக்சிஜனுடன் கொழுப்புச்சத்தும் தேவை. ரத்தக்குழாய்களுக்குள் கொழுப்புச்சத்து இல்லையென்றால், அடுத்த நொடி இதயம், மூளை உள்ளிட்ட உடம்பில் இருக்கிற அனைத்து உறுப்புகளும் செயலிழந்து விடும். இதில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ரத்தத்தில் இருக்கிற கொழுப்புச்சத்து உங்கள் உயிரை காப்பாற்றும் என்பதுதான். ’டாக்டரே சொல்லிட்டார். இனி டெய்லி சிக்கன் 65 சாப்பிடலாம்’ என்று ஹேப்பி ஆகி விடாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை உடலே உற்பத்தி செய்துகொள்ளும். நீங்கள், ஐ.சி.எம்.ஆர் (The Indian Council of Medical Research) பரிந்துரைத்துள்ளபடி, நாளென்றுக்கு மூன்று டீஸ்பூன் எண்ணெயுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது சுரக்கிற எண்டார்பின் ஹார்மோன் ரத்தத்தில் மட்டுமே கொலஸ்ட்ராலை வைத்து, இதயத்தைக் காப்பாற்றும். எப்போது பார்த்தாலும் கவலை, வருத்தம், கோபம், போட்டி, பொறாமை என்று ஸ்டிரெஸ் ஆகவே இருந்தீர்கள் என்றால், உங்கள் மகிழ்ச்சி குறையும். விளைவு, அட்ரினலில் இருந்து கார்ட்டிசால் சுரக்க ஆரம்பிக்கும். இது சுரந்தால், ரத்தத்தில் இருக்கிற கொலஸ்ட்ரால் ரத்தக்குழாய்களுக்குள் படிய ஆரம்பிக்கும்.
அப்படி படிய ஆரம்பித்தால், உடனே ஹார்ட் அட்டாக் வந்துவிடுமா என்றால், இல்லவே இல்லை.
ரத்தக்குழாய்களுக்குள் கொலஸ்ட்ரால் 100% படிவதற்கு குறைந்தது 15 அல்லது 20 வருடங்கள் வரை ஆகும். அதனால், நீங்கள் பயப்படவே தேவையில்லை. அப்படியென்றால் 25, 30 வயதிலேயே ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போகிறார்களே என்கிற கேள்வி வரும். இதற்கு காரணம், நீங்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் நிகழ்கிற அதிர்ச்சியான சம்பவங்கள்.
தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை, பிடித்த வேலை கிடைக்கவில்லை, காதல் கைகூடவில்லை, திருமணம் தள்ளிப் போகிறது, குழந்தை பிறக்கவில்லை, மனதுக்கு நெருக்கமானவரின் எதிர்பாராத மரணம், திடீர் வேலையிழப்பு, சேமித்து வைத்த மொத்த பணத்தையும் பறிகொடுப்பது என்று இந்த எதிர்பாராத அதிர்ச்சிகளுக்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.
இவற்றில் ஒரு பிரச்னையை ஒருவர் எதிர்பாராமல் கடக்கும்போது, நம் இதயத்துக்குள் என்ன நடக்கும் தெரியுமா?
ஏற்கனவே ஏதோவொரு கவலையால், வருத்தத்தால், போட்டி பொறாமைகளால் அட்ரினல் சுரந்து இதயத்துக்குள் இருக்கிற ரத்த நாளங்களுக்குள் படிந்திருக்கிற கொலஸ்ட்ராலில் சட்டென்று ஒரு விரிசல் ஏற்படும். அந்த விரிசலில் அப்படியே ரத்தம் உறைந்து நிற்கும். இந்த உறைந்த ரத்தத்திற்கு, ’ஐயோ... இந்த உடலின் சொந்தக்காரனுக்கு 25 வயதுதானே ஆகிறது’ என்பதெல்லாம் தெரியாது.
மகிழ்ச்சி எப்படி டாக்டர் அதிர்ச்சியாகும் என்று உங்களுக்குத் தோன்றலாம். இதற்கு ஓர் உதாரண சம்பவம் சொல்கிறேன். லாட்டரி சீட்டுகள் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் ஒரு தொழிலாளிக்கு லாட்டரி சீட்டில் ஒரு கோடி பரிசுத்தொகை விழுந்திருந்தது. அந்த அதிகபட்ச மகிழ்ச்சியை தாள முடியாமல் அவர் என் கண்ணெதிரே இறந்தார். என்னாலும் அவரை அந்த நிலையில் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், இதுபோன்ற சம்பவங்களின் சதவிகிதம் குறைவுதான் என்பதால், இதுகுறித்து நீங்களே அச்சப்பட தேவையில்லை.
நிக்கோடின் அட்ரினலைத்தூண்டுவது, கார்ட்டிசாலை சுரக்க வைப்பது, ரத்த நாளங்களை சுருங்க வைப்பது என மூன்று பிரச்னைகளை ஒரே நேரத்தில் இதயத்துக்கு ஏற்படுத்திவிடும். பிறந்ததிலிருந்து இறப்பது வரை பிரச்னைகள் இல்லா மனிதர்கள் ஏது? அதனுடன் வாழப் பழகுவதே இதற்கு தீர்வு.
உடல் பருமன் பிரச்னை இருப்பவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகள் இருக்கும். இவர்களுடைய இதயம் வழக்கத்தைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக வேலை செய்யும். இதனால் இவர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த 95% வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பது, காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்வது; உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் செய்வது; பதற்றமில்லாமல் இருப்பது; புகைப்பழக்கமில்லாதிருப்பது இவையெல்லாம்தான். ஒருவேளை உங்கள் இதயத்தில் இருக்கிற ரத்தக்குழாய்களுக்குள் கொலஸ்ட்ரால் படிந்திருக்கிறது என்றால், நான் மேலே குறிப்பிட்ட வாழ்க்கை முறைகளை கடைப்பிடியுங்கள். அது ஒரு வருடத்தில் மாத்திரையே தேவைப்படாத அளவுக்கு பூரணமாக உங்கள் இதயத்தைக் குணமாக்கும். இது 18 வருடங்களுக்கு முன்பே நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்று.
இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு தகவல், ’நான் புகை பிடிக்க மாட்டேன் அல்லது நான் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன்’ என்று சொன்னாலும் புகை பிடிப்பவர்களின் அருகில் நீங்கள் நின்று கொண்டிருந்தாலும் உங்கள் இதயத்தை அந்த நிக்கோடின் புகை பலவீனப்படுத்தும்.
சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நன்றாக என்ஜாய் செய்வார்கள். இரவில் எக்கச்சக்கமாக சாப்பிடுவார்கள். தாமதமாக படுத்து மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி யோசித்து தூக்கத்தைக் கெடுத்துகொள்வார்கள். காலை ஐந்து மணிக்கு பரபரப்பாக எழுந்துகொள்ளும்போது அன்று செய்ய வேண்டிய வேலைகளை நினைத்து டென்ஷனாகி பரபரப்பாக கிளம்பும்போது ஹார்ட் அட்டாக் வரலாம்.
உடற்பயிற்சி செய்யும்போது மகிழ்ச்சிக்கான எண்டார்பின் ஹார்மோன்தான் சுரக்கும். ஆனால், அதை வெறியுடன் செய்யும்போது அட்ரினல் சுரந்து பதற்றமாகி விடுவார்கள். ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும்போதே சிலருக்கு மாரடைப்பு வருவதற்கு இதுவும் காரணம். டிரெட் மில்லை வேகமாக வைத்து ஓடுவது, ஒரு நாளைக்கு 10,000 அடி நடக்க வேண்டும், எட்டுப் போட்டு நடக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல் உங்களுக்கு எந்த அளவுக்கு முடிகிறதோ அந்த அளவுக்கு உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் செய்யுங்கள். அதையும் மகிழ்ச்சியாக செய்யுங்கள்.
ரத்தத்தில் பொட்டாசியம் அளவுடன் இருந்தால் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்கும். ரத்த அழுத்தம் அதிகமானால் அதை கட்டுக்குள் கொண்டு வருகிற சக்தியும் பொட்டாசியத்துக்கு உண்டு. வாழைப்பழத்திலும் இளநீரிலும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இதேபோல நாம் சாப்பிடுகிற உப்பின் அளவு அதிகமானால் எப்படி இதயத்துக்கு கெடுதலோ அதேபோல் உப்பின் அளவு அதாவது சோடியத்தின் அளவு தேவையைவிட குறைந்தாலும் இதயம் நின்றுவிடும். வெயிலில் செல்லும்போது, நடைபயிற்சி செய்யும்போது, உடற்பயிற்சி செய்யும்போது அளவுக்கு அதிகமாக வியர்த்தால் சோடியம் உப்பு வெளியேறிவிடும். சம்பந்தப்பட்ட நபர் ஒருவேளை உப்பு குறைவாக சாப்பிடுபவர் என்றாலோ, உப்பை தவிர்ப்பவர் என்றாலோ இதயத்துக்கு சிக்கல் ஆகிவிடும்.
அதிகப்படியான கால்சியத்திற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என்றால், ரத்தத்தில் இருக்கிற கால்சியத்துக்கும் மாரடைப்புக்கும் சம்பந்தமில்லை. அதே நேரம் கால்சியம் சத்து மாத்திரையை மருத்துவர் ஆலோசனையுடன் வாங்கி பயன்படுத்த வேண்டும். எந்த சத்துமே தேவையைவிட உடலில் அதிகமாக இருக்கக் கூடாது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ரத்த அழுத்த அளவீட்டில் மேலே இருக்கும் 120 ஆனது 140 வரை இருக்கலாம். கீழிருக்கும் அளவீட்டில் இருக்கும் 80 ஆனது 90 வரை இருக்கலாம். இதற்கு மேல் இருந்தால்தான் ஹைபர் டென்ஷன் என்கிற ரத்தக்கொதிப்பு இருக்கிறது என்று அர்த்தம்.
120 என்பது 90 வரைக்கும்கூட இருக்கலாம். அதேபோல் 80 என்பது, 55 வரைகூட இருக்கலாம். இதற்கும் கீழே போகும்போதுதான் லோ பிரஷர் பிரச்னை. மேலே 100 கீழே 70-யெல்லாம் லோ பிரஷர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது லோ பிரஷரில் நார்மல் பிரஷர். இதனால் இதயத்துக்கு எந்த கெடுதலும் ஏற்படாது.
பரீட்சை நேரத்தில், படிக்கட்டு ஏறும்போது, வேகமாக நடக்கும்போது, உடற்பயிற்சி செய்யும் போது, காய்ச்சல் அடிக்கும்போது பால்பிட்டேஷன் என்று சொல்லப்படுகிற இதயத்துடிப்பு அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான். இதற்கும் பயப்படத் தேவையில்லை. சிறிது நேரத்தில் அது தானாகவே இயல்புக்கு திரும்பிவிடும். இதுவே இதயத்தில் ஏற்கனவே பிரச்னை, மது அருந்துதல், நீரிழிவு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு இதயத்தின் வேலை செய்யும் திறன் குறையும். அதை ஈடுகட்ட இதயத்துடிப்பு அதிகரிக்கும். இது பிரச்னைக்குரிய ஒன்றுதான். இதற்கு, உடனடியாக நீங்கள் மருத்துவரை நாட வேண்டும்.
இசிஜி-யை தற்போது கம்ப்யூட்டரே எடுத்து விடுகிறது. அதனால், அதில் சின்ன மாற்றம் இருந்தால்கூட அப்நார்மல் என்று சொல்லிவிடுகிறது. உடனே மக்கள் பயந்து விடுகிறார்கள். இசிஜி காட்டுகிற அப்நார்மல் எல்லாமே இதயப் பிரச்னையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மாரடைப்பின்போது வருகிற வலி என்பது யானை பாதத்தை தூக்கி வைத்ததுபோல அப்படியொரு வலியாக இருக்கும். அந்த வலி தோள்பட்டைகள், வலது இடது கைகள், கழுத்து, முதுகு, ஏன் சுண்டு விரல் வரைக்கும்கூட பரவும். ஆனால் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு இருப்பவர்களுக்கோ வலியே தெரியாமல் மாரடைப்பு வரும்.
தூங்கிக்கொண்டிருக்கும்போது, உங்களுடைய உடல் தசை எதிர்பாராத நேரத்தில் நீங்கள் ஓர் அசைவு கொடுக்கும்போது இந்த தசைப்பிடிப்பு தாங்க முடியாத வலியுடன் ஏற்படும். தூக்கத்தில் கால்களை நீட்டி ஸ்ட்ரெச் செய்யும்போது இப்படி நிகழ்வதை கவனித்துப்பார்த்தால் தெரியும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்னை வரும். உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கும், உடலில் சோடியமும் பொட்டாசியமும் குறையும்போதும் வரும்.
நாம் நடக்கும்போது இதயம் வேலை செய்வதைவிட, படியேறும்போதும் மலையேறும்போதும் இதயம் ஐந்து மடங்கு அதிகமாக வேலை செய்யும். இப்படி அதிகமாக இதயம் வேலை செய்வதற்கு ஏற்றபடி ரத்தக்குழாய்கள் இதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்ய வேண்டும். ஒருவேளை மலையேறுகிற ஒரு நபருக்கு, அவருடைய இதயத்தில் இருக்கிற ரத்தநாளங்களில் ஏற்கனவே 20 அல்லது 30% அடைப்பு இருக்கிறது என்றால், இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டி வரும். ஆனால், அதற்கேற்றபடி ரத்தநாளங்களால் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. இந்த நேரத்தில், உடம்பு ஒத்துழைக்கவில்லை; உடம்பு சோர்வாக இருக்கிறது; சீக்கிரம் படி ஏற வேண்டும்; வெயிலாக இருக்கிறது சீக்கிரம் படி ஏற வேண்டும்; என்பதுபோல ஸ்ட்ரெஸ்ஸையும் எடுத்துக்கொண்டால் இதய ரத்தக்குழாய்க்குள் சட்டென்று ரத்த உறைதல் ஏற்பட்டு மாரடைப்பு வரலாம். இதன் காரணமாகத்தான் உயரமான மலைகளில் டிரக்கிங் செல்பவர்களுக்கு இதய மருத்துவரின் சர்டிஃபிகேட் இல்லையென்றால் மலை ஏறவே அனுமதிக்க மாட்டார்கள்.
பெண்களின் உடலில் இருக்கிற ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ரத்தக்குழாய்களுக்குள் கொலஸ்ட்ராலை படியவிடாது. மாதவிடாய் நின்று ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையும் போது பெண்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இதன் காரணமாக வருகிற இதய படபடப்பு, வியர்வை போன்றவை இயல்பான விஷயங்கள்தான். அதை வியாதியாக நினைத்து பெணĮ
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

