Doctor Vikatan: கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரியானதா?
Doctor Vikatan: கார்போஹைட்ரேட்டை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரியானதா... அதை அவசியம் சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டுமா... சன்னா, பயறு உள்ளிட்டவற்றிலும் சிறிது கார்போஹைட்ரேட் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
கார்போஹைட்ரேட்டை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரியானதல்ல. எப்போதுமே நம்முடைய உணவு பேலன்ஸ்டு டயட் எனப்படும் சரிவிகித உணவாக இருக்க வேண்டியது அவசியம். சோஷியல் மீடியாவை பார்த்து கார்போஹைட்ரேட்டை தவிர்க்கிறேன் என சாதமே சாப்பிடாமல் இருப்பது, வெறும் புரதம் மட்டும் சாப்பிடுவது போன்றவற்றைச் செய்யாதீர்கள்.
நீங்கள் கேட்டுள்ளதுபடி, பயறு, மொச்சை, ராஜ்மா என எல்லாவற்றிலும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. ஆனால், அது மட்டுமே போதுமா
என்றால், நிச்சயம் இல்லை. உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் சத்து கிடைக்காவிட்டால், உடல் அதீத களைப்புக்கு உள்ளாகும். உடலானது, கார்போஹைட்ரேட் உள்ள பிற உணவுகளிலிருந்தும் அதை எடுத்துக்கொள்ளும். உதாரணத்துக்கு, புரத உணவுகளில் இருந்தும் எடுத்துக்கொள்ளும். மாவுச்சத்தானது எனர்ஜிக்கு மிக அவசியம். அதற்கு கார்போஹைட்ரேட் அவசியம். புரதச்சத்து அதை ஈடுசெய்யாது.
அடுத்து மூளைக்கு தொடர்ச்சியாக குளுக்கோஸ் தேவை. அதற்காக வெறும் குளுக்கோஸை சாப்பிட வேண்டும் என அவசியமில்லை. நல்ல கார்போஹைட்ரேட் எடுத்துக்கொண்டாலே போதும். அதாவது சுத்திகரிக்கப்படாத மாவுச்சத்தாக இருக்க வேண்டும். முழுத்தானியங்கள், கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்ற சிறுதானியங்கள் அதற்கு உதவும்.

உங்களுடைய சாப்பாட்டுத் தட்டில் மூன்றில் ஒரு பகுதி கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தும், ஒரு பகுதி புரதச்சத்தும், 2 பகுதி காய்கறிகளும் இருக்க வேண்டும்.
சிலர் வேலை செய்து முடித்த உடனேயோ, மாலை 4 மணி வாக்கிலோ அதீத களைப்பாக உணர்வார்கள். அப்படியானால் அவர்களுக்கு போதுமான அளவும் சரியானதுமான கார்போஹைட்ரேட் போய்ச் சேரவில்லை என அர்த்தம். பேலன்ஸ்டு டயட் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் உங்கள் உடல், கார்போஹைட்ரேட்டை தேட ஆரம்பிக்கும். எனவே, நீங்கள் காய்கறிகள், புரதம் என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டாலும், கார்போஹைட்ரேட் எடுக்காவிட்டால், மாலை 3 - 4 மணிக்கு நொறுக்குத்தீனி சாப்பிடவோ, சாக்லேட் சாப்பிடவோ நினைப்பீர்கள். உடலானது கார்போஹைட்ரேட்டை தேடுவதற்கான அறிகுறி அது. எனவே, உடல் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் வயதுக்கும், வாழ்க்கைமுறைக்கும் ஏற்றபடியான பேலன்ஸ்டு டயட் எடுக்க வேண்டியது அவசியம். அதில் கார்போஹைட்ரேட் நிச்சயம் இடம்பெற வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

