``என் மீது உதாசீனம், புறக்கணிப்பு... அவள் மீது அன்பு - சீரியல் பார்த்து கொலை செய்த சிறுவன்

ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் சிலவீடுகளில், `பெற்றோர் தன் மீது அன்பு செலுத்துவதில்லை என்ற வருத்தம் சில குழந்தைகளுக்கு ஏற்படலாம். அந்த வருத்தம் பொறாமையாக மாறி, கொலையில் முடிந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகில் உள்ள நாலாசோபாரா கிழக்கு பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமி பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும், வீட்டிற்கு வெளியில் தனது உறவுக்கார சிறார்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.

மாலையில் நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பவில்லை என்பதால், சிறுமியின் தந்தை அங்கு விளையாடிய 13 வயது உறவுக்கார சிறுவனிடம் விசாரித்தார். அப்போது சிறுமியை சிலர் கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார்.

சிறுமியை தாக்கபயன்படுத்திய கல்

கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சிறுமி

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இது குறித்து போலீஸில் புகார் செய்தார். சிறுமி விளையாடிய பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சிறுமியை 13 வயது சிறுவன் அழைத்துச் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து சிறுவனிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளான். இதையடுத்து சிறுமியை அவன் அழைத்துச் சென்ற இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அங்குள்ள சிறிய மலைப்பகுதிக்குள் சென்று சிறுமியை தேடினர். அங்கு சிறுமி முகத்தில் காயத்துடன் கிடந்தார்.

படுகாயத்துடன் கிடந்த சிறுமியை மீட்டு, உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அந்த சிறுவனிடம் விசாரித்தபோது, உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னை உதாசீனப்படுத்துவதாகவும், சிறுமி மீது அதிக அன்பு செலுத்தியதாகவும், அதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிவித்துள்ளான்.

Police

சிறுவனின் கொலைவெறிக்கு என்ன காரணம்?

இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "மைனர் சிறுவன் சமீபத்தில் ராமன் ராகவ் என்ற கொலை சீரியல் பார்த்துள்ளான். அதில் ராமன் ராகவ் காரணமே இல்லாமல் வீடில்லாதவர்களை இரும்பு தடியால் அடித்து கொலை செய்வார். அந்த கதாபாத்திரத்தை பார்த்து கொலை செய்துள்ளான்" என்று தெரிவித்தனர்.

சிறுவனை கைது செய்து சிறார் சிறைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து, முகத்தில் கல்லை தூக்கிப்போட்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து மனநல மருத்துவர் ஆர்த்தி கூறுகையில், "சிறுவனின் வன்முறை செயலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். வீட்டில் சிறுவன் புறக்கணிக்கப்பட்டு இருக்கலாம். அல்லது திட்டு வாங்கி இருக்கலாம். குடும்பத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்களை பார்த்தும் இது போன்று செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.