`இந்தியாவின் கடன் தற்போது 181.74 லட்சம் கோடி; நாங்கள் திருப்பி கேட்கலாமா? - தங்கம் தென்னரசு காட்டம்

தமிழ்நாட்டில் மார்ச் 14-ம் தேதி சட்டமன்றத்தில், 2025-26 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்யவிருக்கிறது. இத்தகைய சூழலில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் பேசும் வீடியோவை இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, ``இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும்.

அண்ணாமலை

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு?" என்று ஸ்டாலின் மீது கேள்வியெழுப்பினார்.

இந்த நிலையில், அடுத்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யும் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அண்ணாமலையின் கேள்விக்கு பதில் கேள்வியை முன்வைத்து, தமிழ்நாட்டின் மீது அக்கறை இருந்தால், தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் நிதியைப் பெற்றுத் தருமாறு கூறியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் தங்கம் தென்னரசு
முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் தங்கம் தென்னரசு

இது குறித்து எக்ஸ் தளத்தில் தங்கம் தென்னரசு, ``2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா? தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள். கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல." என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.