கடலூர்: `விஷம் குடுத்துட்டேன்; நீங்க செத்துடுவீங்கன்னு சொன்னா...’ - இளம்பெண் மீது கணவர் புகார்!

 கடலூர் மாவட்டம், அயன் கருவேப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், ஆடூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் கடந்த ஜனவரி 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கலையரசனின் தந்தை சுந்தரமூர்த்தி கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்திருக்கும் புகார் மனுவில், `என் மகனுக்கும், ஷாலினி என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

ஆனால் வேறு நபரை காதலித்து வந்த அந்தப் பெண்ணுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. அதனால் அந்தப் பெண்ணை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டோம். ஆனால் அந்தப் பெண்ணின் வீட்டார் அவரை சமாதானப்படுத்தி எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்தப் பெண் என் மகனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஷாலினியுடன் கலையரசன்

இதற்கிடையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் கலையரசன், ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் பேசும் அவர், `ஜனவரி 26-ம் தேதி எங்களுக்கு கல்யாணம். ஆனால் அதுக்கு முதல் நாள் கல்யாணப் பொண்ணு விஷம் குடிச்சிடுச்சி. ஏன் விஷம் குடிச்சிதுனு நாங்க கேட்டதுக்கு, `பொண்ணுக்கும் அவங்க அப்பாவுக்கும் சண்டை.

அதனாலதான் விஷம் குடிச்சிடுச்சி’னு சொல்லி மழுப்பி, எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. கல்யாணம் ஆகி ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கே அந்தப் பொண்ணு யாரோ ஒரு பையன் கூட வீடியோ கால்ல பேசிக்கிட்டு இருந்துச்சி. அது யாருனு நான் கேட்டதுக்கு, யாரும் இல்லனு சொல்லிட்டு போனை கட் பண்ணிடுச்சி. அதுக்கு மறுநாளும் நைட் ரெண்டு மணி வரைக்கும் அந்தப் பையன் கூட வீடியோ கால் பேசிக்கிட்டு இருந்துச்சி.

அதனால பொண்ணோட சித்தப்பா ஜனார்த்தனன் மற்றும் மாமா பரமகுருகிட்டயும் இதப்பத்தி சொன்னேன். ஆனால் இந்தப் பொண்ணுகிட்ட நான் எதையும் தெரிஞ்சா போல காட்டிக்கல. அதேநேரத்துல, `உன் வீட்டுக்காரருக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சி. அதனால ஜாக்கிரதையா இருன்னு பொண்ணுகிட்ட அதோட சித்தப்பாவும், மாமாவும் சொல்லியிருக்காங்க. அதுக்கப்புறம் அந்தப் பொண்ணு என்கிட்ட பேசறதே இல்ல. எங்களுக்கு கல்யாணம் ஆகி 26 நாள் ஆகுது.

ஆனால் அதுக்கப்புறம் அந்தப் பொண்ணு என்கிட்ட பேசல. எங்களுக்குள்ள தாம்பத்ய உறவும் நடக்கல. அதுக்கு அந்தப் பொண்ணும் சம்மதிக்கல. அதுக்கப்புறம் போன் பேசற விஷயம் பத்தி நான் கேட்டதுக்கு, பொண்ணுக்கும், எனக்கும் சண்டை வந்துச்சி. `நான் போன்ல பேசுவேன்தான். அதையெல்லாம் நீ கேட்கக் கூடாது’னு சொல்லி என்கிட்ட சண்டை போட்டுச்சி. அதுக்கப்புறம் பொண்ணு மேல சந்தேகமா இருக்குதுனு சொல்லி, அவங்க வீட்டுல போய் நான் விட்டுட்டு வந்துட்டேன்.

சிகிச்சையில் கலையரசன்

அதுக்கப்புறம் பொண்ணோட சித்தப்பா, மாமா எல்லாம், `பொண்ணுக்கு நீ தாலி கட்டிட்ட. நீதான் வச்சி வாழனும். ஏன் விட்டுட்டு வந்த?’ சொல்லி என்னை சமாதானம் பண்ணாங்க. அதுக்கு, உங்க பொண்ணு சரியில்ல. என்னை ஏமாத்துது. அதனாலதான் அவங்க வீட்டுல விட்டுட்டு வந்தேன்னு சொன்னேன். ஆனா பொண்ணோட சித்தப்பா, மாமா உள்ளிட்ட சொந்தக்காரங்க பஞ்சாயத்து பண்ணாங்க.

அதுக்கு நடுவுல என் அப்பாவும், தம்பியும் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து எனக்கு போன் பண்ணாங்க. அப்போ பொண்ணு வீட்டுக்காரங்க என் கழுத்துல கத்தியை வச்சி, `நீ ஸ்டேஷனுக்குப் போன அறுத்துடுவேன்’னு சொல்லி மிரட்டனாங்க. அதனால என் தம்பிகிட்ட எந்தப் பிரச்னையும் இல்லைனு சொல்லிட்டு, நான் போய் பொண்ணை கூட்டிக்கிட்டு வந்தேன். அப்பவும் பொண்ணு என்கிட்ட பேசல. அதுக்கப்புறம், `மாப்பிள்ளைக்கு எல்லாமே தெரிஞ்சிடுச்சி.

இதுக்கப்புறம் அவரை உயிரோட விட்டா உன்னை ஏதாவது பண்ணிடுவான்’னு பொண்ணுகிட்ட அவங்க சித்தப்பா சொல்லி இருக்காரு. பிப்ரவரி 19-ம் தேதி நைட் ஷிஃப்ட் முடிச்சிட்டு மறுநாள் 20-ம் தேதி காலைல வீட்டுக்கு வந்தேன். அப்போ எனக்கு ரொம்ப டயர்டா இருக்குது  குடிக்கறதுக்கு பால் குடுமான்னு கேட்டேன். அப்போ, `வீட்ல பால் இல்ல. மாசா கூல்ட்ரிங்க்ஸ் இருக்குது. அதை வேணும்னா குடிங்க’னு சொல்லுச்சி. நானும் சரினு சொல்லி குடிச்சேன். அப்போ ஏன்மா கூல்டிரிங்க்ஸ் கசக்குது கேட்டேன்.

அதுக்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல குடிங்கனு சொல்லி, என்னைக் குடிக்க வச்சிட்டு போய் படுத்துட்டாங்க. நானும் படுத்துட்டேன். கொஞ்சம் நேரம் கழிச்சி என்னை வந்து பொண்ணு எழுப்புச்சி. நான் என்னனு கேட்டதுக்கு, `நீங்க குடிச்ச கூல்டிரிங்க்ஸ்ல நான் விஷம் கலந்துட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க செத்துடுவீங்க. எங்க மாமா, சித்தப்பா சொல்லித்தான் அதை செஞ்சேன். என் விஷயம் எல்லாம் உனக்கு தெரிஞ்சதால, உன்னை கொலை பண்ண சொல்லிட்டாங்க.

விஷம்

அப்போதான் நான் அவன்கூட (ஆண் நண்பர்) சந்தோஷமா வாழ முடியும்னு. அதுக்கப்புறம் பொண்ணோட சித்தப்பா ஜனார்த்தனனுக்கு போன் பண்ணி இதை சொன்னேன். அப்புறம் அவங்க என்னை கார் வச்சி ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போனாங்க. ஆனால் ஆஸ்பத்திரில இருந்த டாக்டருங்க நான் பொழைக்க மாட்டேன்னு சொல்லி பாண்டிச்சேரி ஜி.ஹெச்-க்கு போக சொன்னாங்க. அதுக்கப்புறம் என்னை பாண்டிச்சேரி ஜி.ஹெச்ல அட்மிட் பண்ணிட்டு அவங்க போயிட்டாங்க.

அதுக்கப்புறம் எங்க அப்பா, தம்பி, தங்கச்சிதான் என்னை பாத்துக்கிட்டு இருக்காங்க. பொண்ணோட சொந்தக்காரங்க யாரும் என்னை வந்து பாக்கல. அதனால எங்க குடும்பத்து மேல எந்தப் பழியை போட்டாலும் அது செல்லாது. என் மனைவி வேற ஒரு பையன் கூட தொடர்புல இருந்ததால, பொண்ணு வீட்டுக்காரங்க என்னை எப்படியாவது கொன்னுடலாம்னு பார்த்தாங்க. என்னோட மனைவிதான் என்னை மருந்து வச்சி கொலை பண்ண பாத்தாங்க” என்று முடித்திருக்கிறார்.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.