Kerala Mass Murder: சுத்தியால் 5 பேரை அடித்துக்கொன்ற இளைஞர்; கேரளாவை உலுக்கிய சம்பவம்; என்ன நடந்தது?
கடந்த 24-2-2025 அன்று திருவனந்தபுரம் வெஞ்ஞாறமூடு காவல் நிலையத்துக்கு, பேருமல பகுதியைச் சேர்ந்த அஃபான்(23) என்ற இளைஞர் ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்த போலீஸாரிடம், “நான் 6 பேரைக் கொலை செய்துவிட்டு, எலி விஷம் சாப்பிட்டுவிட்டேன். என்னைக் கைது செய்யுங்கள்" என எந்தவித பதட்டமுமில்லாமல் கூறியுள்ளார்.
மது போதையில் இளைஞர் உளறுகிறார் எனத் தொடக்கத்தில் நினைத்த போலீஸார், அஃபானின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்து, சீரியஸாக விசாரணையைத் தொடங்கியபோதுதான் அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்திருக்கின்றன.
இது குறித்துப் பேசிய போலீஸார், “மதியம் 1 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை பொறுமையாக 5 கொலைகளை அரங்கேற்றியுள்ளார் அஃபான். ஆணி அடிக்கப் பயன்படுத்தும் இரும்பு சுத்தியலால், ஒவ்வொருவரையும் கொடூரமாக அடித்தே கொன்றுள்ளார்.
வீட்டிலிருந்த அம்மா ஷெமினாவை (40) முதலில் சுத்தியலால் அடித்து வீழ்த்தியிருக்கிறார். அவர் மயங்கிய உடன், இறந்துவிட்டதாக நினைத்து அறைக்குள் போட்டுப் பூட்டிவிட்டு, தோள் பையில் சுத்தியலை எடுத்துக்கொண்டு பைக்கில் பாட்டி சல்மா பீவி (95) வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கே தனியாக இருந்த பாட்டியின் உச்சி மண்டையில் சுத்தியலால் அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் பாட்டி கழுத்தில் கிடந்த தங்கச் செயினை எடுத்துக்கொண்டு போய் அடகு வைத்து 15 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளார்.
அடுத்ததாக அப்பாவின் உடன் பிறந்த அண்ணன் லத்தீப் (60) வீட்டுக்குச் சென்று அவரையும், அவரது மனைவி ஷாஹிதாவையும் (55) சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். அதன்பிறகு வெஞ்ஞாற மூட்டில் ஒரு பாருக்குச் சென்று மது குடித்துவிட்டு ஒரு ஃபுல் பாட்டில் மதுவையும் வாங்கிக்கொண்டவர், தனது காதலி பஃர்ஷானாவை போன் செய்து அழைத்துள்ளார்.

கல்லூரியில் படித்துவந்த காதலி பஃர்ஷானா (22), அன்று வகுப்பு இல்லாததால் வீட்டிலிருந்துள்ளார். அஃபான் அழைப்பை ஏற்று வீட்டிலிருந்து வெளியே வந்தவரைத் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்த அஃபான், அங்கே பஃர்ஷானாவையும் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் தனது தம்பி அப்ஸான் (13), பள்ளி முடிந்து வந்ததும் அவனையும் பைக்கில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வரும் வழியில் தம்பிக்குப் பிடித்த குழிமந்தி பிரியாணி பார்சல் வாங்கியிருக்கிறார். வீட்டுக்கு வந்த தம்பியை வரவேற்பறையில் அமர வைத்து, சாப்பிட பிரியாணி கொடுத்துள்ளார். அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயத்திலேயே, அவரது தலையில் சுத்தியலால் அடித்துக் கொன்றிருக்கிறார்.
இதில் அப்ஸானின் ஒரு கண் முழுவதும் சிதைந்து காணாமல் போயிருந்தது. காதலி பஃர்ஷானாவின் நெற்றியிலிருந்து பின்னந்தலை வரை சுத்தியலால் அடித்து ஓட்டை ஏற்படுத்தி வைத்திருந்தார். அவர் கொலை செய்த ஒவ்வொருவரையும் 8 முதல் 21 முறை சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். சுத்தியலால் அடித்தபோது தனது உடையில் ரத்தக்கறை ஆனதால், 2 முறை சட்டையை மாற்றியுள்ளார். பின்னர் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த மதுவில் எலி விஷம் கலந்து குடித்துவிட்டு ஆட்டோ பிடித்துக் காவல் நிலையத்துக்கு வந்திருக்கிறார்.

ஆட்டோவில் பயணிக்கும்போது, அஃபான் தனது மொபைலில் கேம் விளையாடியபடி நார்மலாகவே இருந்ததாக ஆட்டோ டிரைவர் தெரிவித்தார். பாட்டி வீடு, பெரியப்பா வீடு எனச் சுமார் 75 கிலோ மீட்டர் தூரம் பைக் ஓட்டிச் சென்று கொலைகளை அரங்கேற்றியுள்ளார். குடும்பத்துடன் மரணிக்க வேண்டும் என நினைத்திருந்தால், ஏன் போலீஸில் சரணடைந்தார் என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. மருத்துவச் சிகிச்சைக்கோ, விசாரணைக்கோ அஃபான் ஒத்துழைக்கவில்லை.

அஃபானின் அப்பா ரஹீம், சவுதி அரேபியாவில் வேலை செய்த நிலையில் தற்போது ஊர் திரும்பியுள்ளார். அஃபானின் தாய் ஷெமினா உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடன் பிரச்னை காரணமாக இந்த கொலைகளைச் செய்துள்ளாரா? கொடூரக் காட்சிகள் நிறைந்த சினிமாக்களை பார்க்கும் வழக்கம் கொண்ட அஃபான், போதைப்பொருளுக்கு அடிமையானதால் மோசமான மனநிலைக்கு மாறி கொலைகளைச் செய்தாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்துவருகிறோம்” என்றனர்.
இதற்கிடையே கேரள தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., சியாம் சுந்தர் இவ்வழக்கு பற்றிக் கூறுகையில், “தற்போது திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிகிச்சையில் இருக்கிறார் அஃபான். அவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால்தான் கொலைக்கான முழுக் காரணமும் தெரியவரும். மற்றபடி இப்போது அஃபான் கூறும் தகவல்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன” என்றார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


