Kumbh Mela: சிசிடிவிகளை ஹேக் செய்து வீடியோக்களை திருடி விற்கும் கும்பல்; விசாரணையில் பகீர் தகவல்கள்
உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நடைபெறும் பிரயக்ராஜ் நகரில் முழுவதும் ஆயிரக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோகள் விற்பனை செய்யப்படுவதாகச் செய்தி வெளியானது.
கும்பமேளாவில் பெண்கள் குளிக்கும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஹேக் செய்து அந்த வீடியோக்களை ஒரு கும்பல் விற்பனை செய்து வந்தது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் டாக்டர் நோயாளி ஒருவரைச் சோதிப்பது போன்ற ஒரு வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அம்மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அகமதாபாத் சைபர் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த வீடியோ மும்பை வசாய் பகுதியிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அதிரடியாகச் செயல்பட்டு ரியான் பெரேரா என்பவரை போலீஸார் கைது செய்தனர். அந்த நபரின் கம்ப்யூட்டரை சோதித்துப் பார்த்தபோது கும்பமேளா, மருத்துவமனைகள், பள்ளிகள், பிரசவ அறை, பியூட்டி பார்லர், எக்ஸ்ரே அறை, படுக்கை அறைகளில் எடுக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் தனித்தனி பிரிவாக வைக்கப்பட்டு இருந்தன. அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் 50 ஆயிரம் கண்காணிப்பு கேமரா பதிவுகள் கம்ப்யூட்டரில் இருந்தது தெரியவந்தது.
அந்த வீடியோக்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவை ஹேக் செய்து எடுக்கப்பட்டவை ஆகும். அவ்வாறு ஹேக் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோவை டெலகிராம் மற்றும் யூடியூப்பில் போடுவதற்காக விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி சூரத்தைச் சேர்ந்த பரித் தமேலியா, மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியைச் சேர்ந்த வைபவ் ஆகியோரை கைது செய்தனர். இதில் பரித் தமேலியா கும்பமேளா நடைபெறும் பிரயக்ராஜ் நகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஹேக் செய்து கொண்டிருந்தார். அவரைப் பிரயக்ராஜ் நகரில் வைத்துச் செய்தனர்.
இது தவிர மேலும் 7 பேர் இந்த குற்றம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர். பரித் தமேலியாதான் வெளிநாட்டிலிருந்து ஹேக்கிங் சாப்ட்வேர்களை விலைக்கு வாங்கி அதனை மற்ற இரண்டு பேருடன் பகிர்ந்துள்ளார். மூன்று பேரும் தங்களது பகுதியில் இருக்கும் முக்கிய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஹேக் செய்து அந்த வீடியோவை டெலகிராம், யூடியூப்பர்களுக்கு லட்சக்கணக்கில் விற்பனை செய்து சம்பாதித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


