மது குடிக்க பணம் தர மறுத்த மனைவி; ஆத்திரத்தில் வீட்டுக்குத் தீ வைத்த கணவன்... தென்காசி பரபரப்பு!

தென்காசி மாவட்டத்தில் மது குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுத்ததால், ஆத்திரத்தில் குடியிருக்கும் வீட்டிற்குத் தீ வைத்த கணவனை சிவகிரி போலீஸார் கைது செய்தனர்.

சிவகிரி அண்ணா தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 52), கூலித் தொழிலாளி. இவரின்‌ மனைவி ரதிதேவி. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் செல்வராஜ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து தண்டனை முடிந்து திரும்பி வந்த செல்வராஜ், மதுகுடிப்பதற்காக மனைவி ரதிதேவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் ரதிதேவி பணம் கொடுக்க மறுத்து சத்தம் போட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் வீட்டில் இருந்து வெளியேறிய செல்வராஜ், தான் குடியிருக்கும் வீட்டுக்குத் தீ வைத்துள்ளார். மேற்கூரையில் பிடித்த தீ மளமளவென பற்றி எரியவும் வீட்டினுள் இருந்த அனைவரும் வீட்டைவிட்டு பத்திரமாக வெளியேறினர். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டு கூரையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. மேலும், வீட்டில் வைத்திருந்த சில முக்கிய ஆவணங்களும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஆய்வாளர் கண்மணி(பொறுப்பு), செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். தொடர்ந்து, செல்வராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.