கனவு நாடான வெனீஸிற்கு பிணத்துடன் 4 மணிநேரம் பயணம்! - ஆஸ்திரேலிய தம்பதிக்கு நேர்ந்த சோகம்!
விமானப் பயணம் என்றாலே அலாதி ஆனந்தம் தான். அதுவும் கனவு நகரத்திற்கு விமானத்தில் செல்கிறோம் என்றால் சொல்லவா வேண்டும்... ஆனால் அத்தனையும் ஒரே நொடியில் காலியானால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான சம்பவம் ஒன்று ஆஸ்திரேலிய தம்பதிக்கு நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதி மிட்செல் ரிங் மற்றும் ஜெனிபர் கொலின். அவர்கள் தங்களது கனவு நாடான வெனீஸ்க்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்காக கத்தார் ஏர்லைன்ஸ் மூலம் மெல்பெர்னில் இருந்து தோகாவிற்கு சென்றிருக்கின்றனர்.
அந்த விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த இந்தத் தம்பதிக்கு அருகில் இருக்கும் வழிப்பாதையில் பெண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். சோதித்து பார்த்தப்போது அவர் இறந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
அதனால், அந்தப் பெண்ணை கம்பளியில் போர்த்தி ரிங்கிற்கு அருகில் வைத்துள்ளனர். விமானத்தில் நிறைய சீட்டுகள் காலியாக இருந்தும் ரிங்கிற்கு விமான அதிகாரிகள் வேறொரு சீட்டை வழங்கவில்லை.
இறந்த பெண்ணின் அருகில் தொடர்ந்து 4 மணிநேரம் அமர்ந்து வந்த ரிங் மற்றும் அவரது மனைவிக்கு இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ரிங், "அந்தப் பெண்மணி விழுந்ததுமே அவரை காப்பாற்ற அனைத்து விதமான நடவடிக்கைகளையும் விமான அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனாலும், அதற்கு பலனில்லாமல் போய்விட்டது.
அவரின் உடலை பிசினஸ் வகுப்புக்கு கொண்ட செல்ல விமான அதிகாரிகள் முயற்சித்தனர். ஆனால், அவர் சற்று கூடுதல் எடையாக இருந்ததால், அந்த வழிப்பாதையில் அவரை கொண்டு செல்ல முடியவில்லை.
என் அருகில் சீட் காலியாக இருந்தது. சற்று தள்ளி அமர முடியுமா? என்று என்னிடம் கேட்டார்கள். நானும் ஒத்துக்கொண்டப்பின், நான் எந்த சீட்டில் அமர்ந்திருந்தேனோ அந்த சீட்டில் அந்தப் பெண்ணின் உடலை வைத்துவிட்டனர்.
என் மனைவி அருகில் காலி சீட் இருந்தும் என்னை அங்கு அமர விமான அதிகாரிகள் அனுமதிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
"இந்த சம்பவத்திற்கு விமான அதிகாரிகளை காரணம் காட்ட முடியாது என்றாலும் அவர்கள் பயணிகளின் சௌகரியத்தை நினைத்து பார்க்க வேண்டும்" என்று கொலின் கூறுகிறார்.
இந்த மாதிரியான சூழ்நிலையை பயணிகள் சந்திக்க நேர்ந்தால், அதற்கான வழிமுறைகள் விமானத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்று அந்தத் தம்பதியினர் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்திற்காக கத்தார் ஏர்லைன்ஸ் இந்தத் தம்பதியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
