திண்டுக்கல்: திருட்டு வழக்கு விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்- ஓய்வுபெற்ற போலீஸாருக்கு சிறை தண்டனை

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் பக்கத்துவீட்டில் 2001-ல் நகை திருட்டு நடந்தது. இந்த திருட்டு வழக்கை விசாரித்த செம்பட்டி போலீஸார், கூலித்தொழிலாளி மற்றும் அவரின் மனைவியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

நீதிமன்றத்திற்கு வந்த ரெங்கசாமி

விசாரணை முடிந்து வீடு திரும்பியதும் கூலித்தொழிலாளியின் மனைவி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து விசாரணைக்கு அழைத்து தங்களை தாக்கியதாகவும், மனைவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் ஆர்டிஓவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரை விசாரித்த திண்டுக்கல் ஆர்டிஓ ஜெகநாதன், கூலித்தொழிலாளியின் உறவினர்கள் உள்பட 56 பேரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்தார். மேலும் இதில் தொடர்புடைய செம்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி, தலைமைக் காவலர்கள் வீரத்தேவர், சின்னத்தேவர் ஆகியோர் மீது மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி தீபா விசாரித்தார். விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் மீதான புகார்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தண்டனை பெற்றுள்ள சின்னத்தேவர், வீரத்தேவர்

எனவே தற்கொலைக்கு தூண்டியதற்கு தலா 5 ஆண்டுகள் சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம், துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காக தலா 3 ஆண்டுகள், 10 ஆயிரம் அபராதம், சட்டத்தை மீறி விசாரணை என்ற பெயரில் அடைத்து வைத்ததற்கு ஓராண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனால் 3 பேரும் தலா 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று போலீஸாரும் பணி ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.