கரூர்: பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளான கார்... 5 பேர் பலியான சோகம்!
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், திருச்சி நோக்கி வந்த மாருதி சுசுகி செலிரியோ காரும், எதிர்பாராவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அரசு பேருந்தின் முன் பகுதியில் கார் சிக்கிக் கொண்டதால் கார் நொறுங்கியது. இதனால், காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் உட்பட 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து, தகவல் அறிந்த குளித்தலை காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, கார் பேருந்தின் அடியில் சிக்கியிருந்ததால், அதில் இருந்த உடல்களை மீட்க முடியாததால், முசிறி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவல் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி, காரின் இடிபாடுகள் இடையே சிக்கிய 5 பேரின் உடல்களையும் மீட்டு, போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், உயிரிழந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றிய குளித்தலை காவல் நிலைய போலீஸார், குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர். அதோடு, இந்த கோர விபத்தில் இறந்தவர்களின் விவரங்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களின் விசாரணையில், கோவை மாவட்டம், சுகுணாபுரம் கிழக்கு மலைப்பகுதியில் உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சோமையா மகன் செல்வராஜ் (வயது: 52) என்றும், அவர் தனது மனைவி கலையரசி(42) மகள் அகல்யா(25) மகன் அருண்(22) ஆகியோருடன் சிவராத்திரியை ஒட்டி, ஒரத்தநாடு அருகே கீழையூரில் உள்ள அக்னிவீரனார் கோயிலுக்கு சாமிகும்பிட, காரில் சென்ற போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது. அதுவும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இந்த விபத்தில், காரினை ஓட்டி வந்த, ஈரோடு மாவட்டம், வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு(வயது: 24) என்பவரும் உயிரிழந்தார். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, குளித்தலை சார் ஆட்சிரியர் சுவாதிஸ்ரீ ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

பின்னர், குளித்தலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த விபத்தில் இறந்தவர்களின் உடல்களை பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை காவல் நிலைய போலீஸார், விபத்துக்கான காரணம் என்ன என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
