Ooty : தடுப்பூசி ஒவ்வாமை; உயிரிழந்த 10 மாத குழந்தை - ரிப்போர்ட்டுடன் போராட்டத்தில் இறங்கிய பெற்றோர்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள எம். ஜி. ஆர் நகரைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன்- கலைச்செல்வி தம்பதி. ஜஸ்வின் என்கிற தங்களின் பத்து மாத ஆண் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, கோத்தகிரி அருகில் உள்ள குடுமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 - ம் தேதி அழைத்துச் சென்றுள்ளனர். ஜஸ்வினிற்கு தடுப்பூசி செலுத்திய நிலையில், மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெற்றோர்

வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே ஜஸ்வினுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தை ஜஸ்வினை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்துடிப்பு சீராக இல்லையென ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே குழந்தை உயிரழந்ததாக ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் உடல் ஸ்கேன் செய்யப்பட்டதுடன் வீடியோ பதிவுடன் கடந்த நவம்பர் 14 - ம் தேதி உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. உடல் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், தடுப்பூசி ஒவ்வாமை காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாக தற்போது அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெற்றோர்

இதனால் ஆவேசம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்களுக்கு நீதி வேண்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புனேவிலிருந்து மற்றொரு அறிக்கை வர வேண்டியது இருப்பதால் அதுவரை அவகாசம் வேண்டியும், அதன் பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசுத்துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்த நிலையில் போராட்டத்தைக் கைவிட்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.