நீலகிரி : தலைதூக்கிய வறட்சி; மலையேற்றத் தடை... வனவிலங்குகளின் தாகம் தீர்க்க களமிறங்கிய வனத்துறை!

நீலகிரியில் இரவு நேரங்களில் நிலவும் கடுமையான பனி மற்றும் பகலில் கொளுத்தி வரும் வெயிலின் தாக்கம் காரணமாக... முக்கூர்த்தி முதல் முதுமலை வரை அனைத்து வனங்களிலும் தற்போது வறட்சி தலைதூக்கியிருக்கிறது. புல்வெளிகள் பசுமை இழந்தும், மரங்களில் இலைகள் உதிர்ந்தும், நீர்நிலைகள் வறண்டும் காணப்படுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

நீர் நிரப்பும் வனத்துறை

வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் வகையில் அடர் வனப்பகுதிக்குள் வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று செயற்கை குட்டைகளில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வறட்சி தகிக்கும் சில வனங்களில் காட்டுத்தீ ஏற்ப்பட்டு வருகிறது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் களமாடி வருகின்றனர்.

காட்டுத்தீ அபாயத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உத்தியான தீ தடுப்பு கோடுகளை அமைக்கும் பணியினை பல பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றனர். மனித தவறுகளால் காட்டுத்தீ ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக வனப்பகுதிக்குள் மலையேற்றம் செய்யவும் தற்காலிகமாக தடையை விதித்திருக்கிறது வனத்துறை.

நீர் நிரப்பும் வனத்துறை

இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரிகள், "வழக்கமாக இந்த பருவத்தில் ஏற்படும் வறட்சி தான் என்றாலும் சில பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதற்கான அபாயம் அதிகமாக காணப்படுகிறது. காட்டுத்தீயைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலேயே ஒட்டுமொத்த வனத்துறையும் தீவிரமாக இயங்கி வருகிறது. தீயணைப்பு வீரர்களும் நமக்காக தயார் நிலையில் உள்ளனர். ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் தாகம் தீர்க்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வரப்படுகிறது" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.