மாணவியின் கழுத்தை அறுத்து சித்திரவதை செய்த +2 மாணவன்... பரிசளிப்பதாக அழைத்து கொடூரம்..!
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமத்தைச் சேந்த மாணவி ஒருவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதால் இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், ஏற்கெனவே அந்த மாணவியிடம் பழகி வந்த நிலையில், செல்போனில் தொடர்பு கொண்டு அவரை அருகில் உள்ள சோளக்காட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது, அந்த மாணவி மறுக்கவே அவருக்கு பரிசு வாங்கி வைத்திருப்பதாகவும் அதனை வாங்கிக் கொள்ள நீ வா என ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார். இதனை நம்பிச் சென்ற அந்த மாணவியை 12-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் மற்றும் அங்கிருந்த மற்ற இரண்டு பேர்களும் சேர்ந்து மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்துள்ளனர்.
இதனால், பயந்து போன மாணவி கூச்சலிட்டுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்து பொதுமக்கள் வந்தால் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை கழுத்தை அறுத்துள்ளனர். அப்போது, அவர் அபாய குரல் எழுப்பவே சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதைக் கண்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கழுத்தில் படுகாயத்துடன் இரத்தம் வெளியேறும் நிலையில் அந்த மாணவியை மீட்ட அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், திண்டுக்கல் மாவட்டம், குச்சிலியம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவி அவசர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சையில் உள்ளார்.
இது குறித்து, தகவல் அறிந்த பாலவிடுதி காவல் நிலைய போலீஸார் 12-ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய மற்ற இரண்டு பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த மாணவி மேற்கண்ட மாணவர் உள்ளிட்ட மூன்று பேர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக செய்தி பரவியதால், கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியோடு அதே பகுதியைச் சேர்ந்த 12 - ம் வகுப்பு படிக்கும் மாணவன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்புகொண்டு வீட்டிற்கு வெளியே வரவழைத்து கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியுள்ளார். அதோடு, அந்த மாணவி அணிந்திருந்த ஒரு பவுன் செயினையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். எங்கள் விசாரணையில், அந்த மாணவி தகாத வார்த்தைகளால் திட்டியதால், கோபத்தில் மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். கூட்டுப்பாலியல் செய்தி மாணவியின் கழுத்தை அறுத்ததாகச் சொல்லப்படுவது தவறான தகவல். இதுபோன்று தவறான தகவலை பரப்ப வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசளிப்பதாக ஆசை வார்த்தை கூறி பத்தாம் வகுப்பு மாணவியை மூன்று பேர் பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்து கழுத்தை அறுத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


