செங்கல்பட்டு : சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை - 46 வயது நபர் சிக்கிய பின்னணி!
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 17வயதான சிறுமி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இந்தச் சிறுமியின் வீட்டுக்கு ராஜா (பெயர் மாற்றம்) (46) என்பவர் அடிக்கடி வருவார். ராஜாவும் சிறுமியின் அப்பாவும் நண்பர்களாக பழகிவந்தனர். இந்தநிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிறுமி பள்ளிக்குச் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அன்றைய தினத்திலிருந்து ராஜாவையும் காணவில்லை. அதனால் சிறுமியின் குடும்பத்தினர், மகளைக் காணவில்லை என செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் சிறுமியைத் தேடிவந்தனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. அதைப் போல சிறுமியின் அப்பாவின் நண்பரான ராஜாவும் மாயமாகியிருந்ததால் அவரையும் போலீஸார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் சிறுமியை ராஜா கடத்திச் சென்றிருக்க அதிக வாய்ப்பிருப்பதாக போலீஸார் கருதினர். அதனால் ராஜாவின் நட்பு வட்டாரத்திலிருப்பவர்களையும் அவரின் குடும்பத்தினரையும் போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ராஜா, சில இடங்களிலிருந்து அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் செல்போன் சிக்னல் காட்டிய இடத்துக்குச் சென்று விசாரித்தபோது அங்கு ராஜா இல்லை. இதனால் போலீஸார் ஏமாற்றத்துடன் செங்கல்பட்டுக்கு திரும்பி வந்தனர். அதனால் வேறுவழியில் ராஜாவைப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். அவரின் வங்கி கணக்குகளை ஆராய்ந்து அதன்மூலம் அவரைப் பிடிக்க முடிவு செய்தனர். வங்கி கணக்குகளிலிருந்து ராஜா எப்படி பணம் எடுக்கிறார் என ஆய்வு செய்தபோது அவர் தங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது. போலீஸார் தன்னை நெருங்குவதையறிந்த ராஜா, சிறுமியை அழைத்துக் கொண்டு சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். உடனே சிறுமியை மீட்ட போலீஸார் அவருக்கு கவுன்சலிங் அளித்தனர். அதோடு சிறுமியிடம் விசாரித்தபோது ராஜா, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை போலீஸார் கைது செய்தனர். சிறுமியை அவரின் பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைக்க முடிவு செய்த போது அவர், வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை. அதனால் காப்பகத்தில் சிறுமியை போலீஸார் சேர்த்தனர். அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
அப்பாவின் நண்பரான ராஜா, சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


