Doctor Vikatan: பலமான விருந்துக்குப் பிறகு வெந்நீர் குடித்தால் வெயிட் ஏறாது என்பது உண்மையா?

Doctor Vikatan: பலமான விருந்தில் சாப்பிடும்போதோ, என்றோ ஒருநாள் ஸ்வீட்ஸ் கொஞ்சம் அதிகம் சாப்பிடும்போதோ, உடனே வெந்நீர் குடித்துவிட்டால், உடலில் கொழுப்பு சேராது, எடையும் கூடாது என்று பலரும் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

டயட்டீஷியன் கற்பகம்

பலமான விருந்தும், ஸ்வீட்ஸும் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் வெயிட் ஏறாது என்றால், எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் எல்லோரும் மிகச் சுலபமாக எடையைக் குறைத்துவிடுவார்களே....  உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்பதெல்லாம் தேவையே இருக்காதே...

பொதுவாக பலமான விருந்தோ, ஸ்வீட்ஸோ  சாப்பிட்டால் உங்கள் எடை நிச்சயம் கூடியிருப்பதைப் பார்க்கலாம். அதற்கு காரணம் அந்த உணவுகள் மற்றும் இனிப்புகளிலுள்ள கலோரிகளின் அளவு. அதிக கலோரிகள் கொண்ட உணவுகளைச் சாப்பிடும்போது சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, இரவு உணவுக்கு கலோரிகள் அதிகமான விருந்து உணவு அல்லது அதிக இனிப்புகள் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.  முன்கூட்டியே அப்படி சாப்பிடப் போகிறீர்கள் என்று தெரியும் பட்சத்தில் அன்றைய தினம் காலை உணவு மற்றும் மதிய உணவை கொஞ்சம் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

நிறைய காய்கறிகள் உள்ளதுபோன்ற பேலன்ஸ்டு உணவாக இருக்க வேண்டியது அவசியம். சாப்பிடும் அளவும் முக்கியம். 

செரிமான பிரச்னை இருப்பவர்கள் வெந்நீரோ, சீரகம் அல்லது ஓமம் சேர்த்த தண்ணீர் குடிக்கலாம்.

இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்கவே முடியவில்லை என்பவர்கள், அதை அளவுக்கதிமாகச் சாப்பிடாமல், அளவோடு சாப்பிடும்போது அடுத்தநாள் எடை கூடாது. முதல்நாள் சாப்பிட்ட அதிகப்படியான இனிப்பை ஈடுகட்ட அடுத்தநாள் செய்யக்கூடிய மேஜிக்கென்று எதுவும் இல்லை. திரவ உணவுகள் நிறைய எடுத்துக்கொள்ளலாம்.

வெந்நீர் குடிப்பதெல்லாம் எந்தவகையிலும் எடையைக் குறைக்க உதவாது. செரிமான பிரச்னை இருப்பவர்கள் வெந்நீரோ, சீரகம் அல்லது ஓமம் சேர்த்த தண்ணீர் குடிக்கலாம். வயிற்று உப்புசம், நிறைய சாப்பிட்டதால் ஏற்படுகிற ஒருவித கனத்த உணர்வு போன்றவற்றிலிருந்து விடுபட அது உதவுமே தவிர, எடைக்குறைப்புக்கு உதவாது. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினால், உணவு விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.