உரிமம் பெறாத நர்சிங் கல்லூரிக்கு சீல்: `சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பு -மாணவர்கள் சாலை மறியல்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில், `தமிழ்நாடு நர்சிங் கல்லூரி என்ற பெயரில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரி, மத்திய, மாநில அரசுகளின் முறையான அனுமதி பெறாமல் இயங்குவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து அக்கல்லூரி மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட உயர் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், அங்கு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் மருத்துவக்கல்லூரி முறையற்ற அனுமதியுடன் இயங்கிவந்தது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அக்கல்லூரி தொடர்ந்து செயல்படுவதற்கு அதிகாரிகள் தடை விதித்ததோடு, தமிழ்நாடு நர்சிங் கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்து இழுத்து மூடினர். மேலும், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை வரும் 20-ந்தேதிக்குள் திரும்ப வழங்கிடவும் உத்தரவிட்டனர். விதிகளை மீறி கல்லூரி நடத்தி வந்தது தொடர்பாக, கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.
இந்தநிலையில், அதிகாரிகள் உத்தரவுபடி, தமிழ்நாடு நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்களின் அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை திரும்ப பெறுவதற்காக கல்லூரிக்கு பெற்றோருடன் நேற்று வந்திருந்தனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் தரப்பில் யாரும் வராததால் ஆத்திரமடைந்த மாணவிகள், மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை போலீஸார், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தனர்.

இதனால் மாணவர்களுக்கும் போலீஸூக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பேசிய போலீஸார், கல்லூரி நிர்வாகத்திடம் பேசி அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை திருப்பிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் எச்சரிக்கை தரப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


