``உத்தரகாண்டில் வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலம் வாங்கத் தடை - பா.ஜ.க அரசு முடிவு!
நாட்டில் சிக்கிம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகை விலக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, இப்போது அந்த மாநிலத்தில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்க வகை செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்களில் விவசாயிகள் மட்டுமே விவசாய நிலத்தை வாங்கும் வகையில் சட்டம் இருக்கிறது. வெளிமாநிலத்தவர்கள் மகாராஷ்டிராவில் விவசாய நிலம் வாங்கினால் அதற்கு தான் விவசாயி என்பதற்கான சான்றிதழை தாக்கல் செய்யவேண்டும்.
தற்போது பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலத்தில், வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலம் வாங்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டவரைவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
``மாநில மக்களின் உரிமையை பாதுகாக்கும் வகையிலும், மாநில வளத்தை பாதுகாக்கும் வகையிலும் இச்சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான மசோதா வரும் சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதில் ஹரித்வார் மற்றும் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் மட்டும் வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலம் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதோடு, மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் நிலம் என்ன தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்த தேவைக்கு மட்டுமே அந்த நிலத்தை பயன்படுத்தவேண்டும். அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த நிலத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளவும் புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

அதோடு வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்குவதை பதிவு செய்ய பிரத்யேகமாக இணையதளம் ஒன்று அறிமுகம் செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விவசாயம், தொழில், சுற்றுலா தேவைக்காக பொதுமக்கள் 30 ஏக்கர் வரையில் நிலம் வாங்கினால் அதற்கு மாவட்ட நீதிபதியின் அனுமதி தேவையாக இருந்தது. புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்டத்தில் மாநில அரசு நிர்வாகம் இதில் இறுதி முடிவு எடுக்கும். அதோடு அதிக பட்சமாக 12.5 ஏக்கர் நிலம் மட்டுமே வாங்க முடியும். தற்போது வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி எல்லைக்கு வெளியில் வீடு கட்டிக்கொள்ள 250 சதுர மீட்டர் நிலம் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவும் விவசாய நிலத்தில் வாங்க முடியாது.
கட்டுபாடு விதித்த காங்கிரஸ் அரசு
உத்தரகாண்ட் மாநிலத்தில் வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க 2002-2007ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் முதன் முதலில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. காங்கிரஸ் அரசு மாநகராட்சி எல்லைக்கு வெளியில், வெளிமாநிலத்தவர்கள் 500 சதுர மீட்டர் நிலம் வாங்க அனுமதி கொடுத்தது. ஆனால் அடுத்து வந்த பா.ஜ.க அரசு அதனை 250 சதுர மீட்டராக குறைத்துவிட்டது. 2017ம் ஆண்டு நிலம் வாங்குவதற்கு இருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் பா.ஜ.க அரசு நீக்கியது. தற்போது புதிய வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க புதிய சட்டமசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள மாநில அரசு அதிகாரிகள், நிலத்தை தவறான வழியில் பயன்படுத்துவதை தடுப்பதே புதிய சட்டத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளனர்.

முதல்வர் புஷ்கர் சிங் விளக்கம்..
முதல்வர் புஷ்கர் சிங் இது குறித்து கூறுகையில், “கடந்த காலங்களில் பொருளாதார மற்றும் வளர்ச்சி திட்டங்கள் என்று கூறி வெளிமாநிலத்தவர்கள் நிலங்களை வாங்கினர், ஆனால் அவர்கள் சொன்னபடி அந்த நிலத்தில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு புதிய வரைவுச் சட்டத்தை அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.” என்று தெரிவித்தார்.
வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலத்தை வாங்க தடை விதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதே போன்று வேறு மாநிலங்களிலும் சட்டம் இயற்றினால் பா.ஜ.க கூறும் ஒரே நாடு கொள்கை கேள்விக்குறியாகும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


