Online Scams: கும்பமேளாவையும் விட்டுவைக்காத ஆன்லைன் மோசடி... விடுதி, விமான டிக்கெட் பெயரில் பணமோசடி

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் புனித நீராடவேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். இதற்காக எத்தனையோ சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு தங்குவதற்கு இடம் கிடைப்பதில்லை. சரியான போக்குவரத்து வசதியும் இல்லாமல் இருக்கிறது.

எனவே, இத்தகைய சூழ்நிலைகளை மோசடி கும்பல் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கும்பமேளா செல்ல நினைப்பவர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளது. இந்த மோசடியில், மும்பையைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் உத்தரப்பிரதேச அரசின் சுற்றுலா துறையின் வங்கிக்கணக்கில் பணத்தை வாங்குவது போல் வாங்கி மோசடி செய்துள்ளனர்.

ரூ.3.78 லட்சம் இழந்த மும்பை தொழிலதிபர்

மும்பை லோயர் பரேல் பகுதியைச் சேர்ந்த ரக்‌ஷனா(55) என்ற பெண் தொழிலதிபர் தனது நண்பர்கள் மற்றும் கணவருடன் கும்பமேளா செல்லவேண்டும் என்று நினைத்தார். இதற்காக முன்கூட்டியே கும்பமேளா நடைபெறும் இடத்தில் குடில் முன்பதிவு செய்ய முடிவு செய்து ஆன்லைனில் தேடினார். இதில் Tentcitymahakumbh.org என்ற இணையதளம் பற்றிய தகவல் கிடைத்தது. உடனே அந்த இணையத்தளத்திற்கு சென்று அதில் இருந்த நம்பருக்கு போன் செய்து பேசினார். போனில் பேசிய நபர் வி.ஐ.பி.க்கள் தங்கக்கூடிய குடில்களின் புகைப்படத்தை அனுப்பினார். அதோடு விமான டிக்கெட்டிற்கும் நாங்களே ஏற்பாடு செய்கிறோம் என்று தெரிவித்தார்.

ஆன்லைன் மோசடி

அவரது பேச்சை நம்பி ரக்‌ஷனா இரண்டு குடில், 6 விமான டிக்கெட்டிற்கு ரூ.3.78 லட்சத்தை இரண்டு தவணையாக UP State TourismII என்ற பெயரில் இருந்த வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

குடில், விமான டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாக கூறி ரிசிப்ட், டிக்கெட் விபரங்களை போனில் பேசிய நபர் அனுப்பி வைத்தார். ஆனால் ஒரு சில நாள்களில் அந்த நபரின் வாட்ஸ் ஆப் நம்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ரக்‌ஷனா தெரிவித்தார். ரக்‌ஷனாவின் தோழியிடமும் அதே நபர் 75 ஆயிரத்தை இதே போன்று மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் போலீஸில் புகார் செய்துள்ளனர்.

ஆன்லைனில் தொடர் மோசடி..

இதே போன்று கஃப்பரேடு பகுதியை சேர்ந்த கோதேஷ்வர் என்ற பெண்ணும் கும்பமேளா செல்ல விரும்பினார். அவர் ஆன்லைனில் தேடியபோது mahakumbhhelicopterservice.online என்ற இணையதளம் கிடைத்தது. இது போலி இணையதளம் என்று தெரியாமல் அதில் இருந்த நபரை தொடர்பு கொண்டார். கும்பமேளாவை சலுகை கட்டணத்தில் ஹெலிகாப்டரில் பார்க்க ஏற்பாடு செய்வதாக இணையதளத்தை சேர்ந்த நபர் தெரிவித்தார். கோதேஷ்வர் 12 பேர் ஹெலிகாப்டரில் பயணம் செய்யவேண்டும் என்று தெரிவித்தார். உடனே அதற்கு முன்பணமாக ரூ.60652 செலுத்தும்படி கூறி கியூஆர் கோடு அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் அப்பெண் பணத்தை அனுப்பி வைத்தார்.

ஆன்லைன் மோசடி

ஆனால் பணம் அனுப்பிய அடுத்த நாள் அந்த வெப்சைட் காணாமல் போய்விட்டது. இது தொடர்பாக அப்பெண் போலீஸில் புகார் செய்தார். கொலாபா பகுதியைச் சேர்ந்த சங்கல்ப் என்பவரும் இதே மோசடி கும்பலின் இணையத்தளத்தின் மூலம் பணத்தை இழந்துள்ளார். இது போன்று மேலும் பல புகார்கள் வந்தது.

இதையடுத்து, போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் நந்தினி செலுத்திய பணம் ஏ.டி.எம்.மூலம் பீகாரில் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனே அந்த ஏ.டி.எம்.மெஷினில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து முகேஷ் குமார், அவினாஷ் குமார், சஞ்சித் குமார் உள்பட 5 பேரை கைது செய்தனர். இதில் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.