வாய்த் தகராறு; உருட்டுக் கட்டையால் அடித்து இரட்டை கொலை; தப்பியோடிய கைதி! - நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேகொன்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுமலை (55). இவருடைய உறவினர் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (52). திருமணமாகாத இருவரும் ஒரே இடத்தில் தங்கி கட்டட வேலை செய்து வந்தனர்.

இவர்களை முன் விரோதம் காரணமாக உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தப்பியோட முயன்றபோது அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலையானவர்கள்

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸாரிடம் விசாரித்தோம். ``கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அழகு மலைக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்ற 22 வயது இளைஞருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பீர் பாட்டிலால் அழகுமலை குத்தப்பட்டு படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் சமரசம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நவீன்குமாருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு அழகுமலை தான் என நினைத்த நவீன்குமார் குடிபோதையில் அவரைத் தாக்குவதற்கு உருட்டுக் கட்டையுடன் சென்றுள்ளார்.

அந்தநேரத்தில் வேலை முடித்துவிட்டு வத்தலக்குண்டு மதுரை சாலையில் வெங்கடாஸ்திரி கோட்டை என்ற இடத்தில் அழகுமலையும் அவரின் உறவினர் மனோகரும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களை நவீன்குமார் உருட்டுக்கட்டையால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பிஓடிவிட்டார். படுகாயமடைந்த இருவரும் அதிக ரத்தம் வெளியேறி நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் நவீன்குமார்

தகவலறிந்து விரைந்து வந்த வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் சிலை மணி, சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா ஆகியோர் கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தான் உருட்டுக் கட்டையால் அடித்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் எனக் கூடத் தெரியாமல் நவீன்குமார் தனக்குக் காயம் ஏற்பட்டது போல் நடித்து வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். போலீஸார் நவீன்குமாரைப் பிடிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டதாக அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நவீன் குமார்(22) அவரின் தாயார் கிருஷ்ணவேணி (45) பாட்டி சுந்தரி (60) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது

இதனைத் தொடர்ந்து அழகுமலையின் உறவினர்கள், கடந்த 6 மாதங்களுக்கு முன் பீர் பாட்டிலால் அழகுமலையைக் குத்திய வழக்கில் நவீன்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், 2 பேர் பலியாகி இருக்கமாட்டார்கள். குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்துவந்த நவீன்குமார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸார் சமரசமாகச் செல்லுங்கள் எனக் கூறியதால் தான் இந்த இரட்டைக் கொலை நடந்தது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.