``பூச்சிகளின் உலகம் பிரமாண்டமானது; ஒவ்வொரு பூச்சிக்கும் தனித்தன்மை உண்டு - விளக்கும் வல்லுநர்

வேளாண்மை பிரதானமாக உள்ள மாநிலங்களில், தமிழகம் மற்றவைகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது. வேளாண்மைக்கு தனி பட்ஜெட், விவசாயத்துக்கு இலவச மின்சாரம், இடுபொருட்களுக்கு மானியம் உள்பட பல்வேறு சிறப்புத்திட்டங்கள் செழிப்பான விவசாயத்துக்கு உறுதுணையாக உள்ளன. இந்தநிலையில், விதைப்பது முதல் அறுவடை வரை நோய் தாக்குதல் இல்லா பயிர் வளர்ச்சியை சாத்தியப்படுத்துவது சவாலாக உள்ளது. விவசாயிகளும் கூட குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிர் பாதுகாப்புக்காக பல முயற்சிகள் செய்து வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் வேளாண் ஆராய்ச்சிகளும் விவசாயத்தில் பயிர் பூச்சிகளை கட்டுப்படுத்தி விளைச்சலை பெருக்குவது தொடர்பாகத்தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒட்டுண்ணி

உழுதல், உரமிடுதல், மருந்து தெளித்தல், களையெடுத்தல் என பயிர் பாதுகாப்புக்காக நாம் எடுக்கும் முயற்சிகள் போலவே, சில பூச்சி இனங்களும் வேளாண்மைக்கு இயற்கையாக நன்மை செய்கின்றன. அத்தகைய பூச்சியினங்கள் எவை? எந்த வகையில் அவை விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் நன்மை பயக்கின்றன என்பதை பூச்சியியல் வல்லுனர்களிடம் சில கேள்விகளை முன்வைத்து பேசினோம்.

விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சியினங்கள்

அப்போது, விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சியினங்கள் பற்றி, விருதுநகர் மாவட்ட உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண் அலுவலர் கா.அரிபுத்திரன் கூறுகையில்,

"பூச்சி மேலாண்மையில், தீமை செய்யும் பூச்சிகள், நன்மை செய்யும் பூச்சிகளின் பொதுவான எண்ணிக்கை விகிதம் 2:1 கடைப்பிடிக்கப்படுகிறது. தீமை செய்யும் பூச்சிகள் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை விகிதம் 2:1 என்ற அளவில் இருந்தால் மருந்து தெளிக்கும் முறைகள் தேவை இல்லை.

விகிதம் 2:1 -ஐ விட குறைவாக இருந்தால் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். பறவைத்தாங்கி குச்சிகள், ஒட்டுண்ணி அட்டைகள், இனக்கவர்ச்சி பொறிகள், விளக்குப் பொறிகள், மஞ்சள் நிற ஒட்டு பொறிகள், வரப்பு பயிர் முறைகளை கடைபிடித்து நன்மை- தீமை செய்யும் பூச்சிகள் கண்காணிப்பு செய்து நல்ல விளைச்சல் பெற்றிடலாம்.

விவசாயத்தில், தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை வேட்டையாடி நன்மை செய்யும் பூச்சிகள் ஒட்டுண்ணிகள், ஊண் விழுங்கிகள் என மொத்தம் இரண்டு வகைகள் உள்ளன." என்றார்.

விவசாயம்

இரண்டு வகைகள் பூச்சியினங்கள்

இந்த பூச்சியியல் வகைகள் பற்றியும், அவை விவசாயத்துக்கு செய்யும் நன்மைகள் பற்றியும் கேட்டதற்கு, இதுகுறித்து விரிவாக பேசிய அரிபுத்திரன்,

1.ஒட்டுண்ணிகள் வகைகள்

பூச்சி ஒட்டுண்ணிகளை ஆங்கிலத்தில் பாரசிட்டாய்ட்ஸ் (parasitoids) என்று அழைக்கிறோம். பயிர்களைத் தாக்கும் முக்கிய பூச்சிகளை கட்டுப்படுத்த நன்மை செய்யும் பூச்சி ஓட்டுண்ணிகள் பயன்படுகின்றன. இந்த ஓட்டுண்ணிகள் தீங்கு செய்யும் பூச்சிகளின் வளர்ச்சி (முட்டை, புழு, கூண்டுப் புழு, வளர்ந்த பூச்சி) நிலைகளை தேடி அவற்றில் தன் முட்டையினை வைத்து பின்பு அழிப்பதால் இவை ஒட்டுண்ணிகள் வகைகளை சார்ந்தது. ஒட்டுண்ணிகள் ஹைமினோப்டீரா (Hymenoptera) மற்றும் டிப்டீரா (Diptera) என்ற இரண்டு பூச்சி வகைகளில் 80 சதவீதம் காணப்படுகின்றன. ஹைமினோப்டிரா வகை ஒட்டுண்ணிகளை குளவி இன ஒட்டுண்ணிகள் என்றும், டிப்டீரா வகை ஒட்டுண்ணிகளை ஈக்கள் இன ஒட்டுண்ணிகள் என்றும் வகைப்படுத்தலாம்.

குளவி இன தாய் ஒட்டுண்ணிகள் வயிற்றின் பின்புற நுனிப்பகுதியில் ஊசி போன்ற முட்டை இடும் உறுப்பை கொண்டது. ஆனால் ஈக்கள் வகை ஒட்டுண்ணிகளுக்கு வயிற்றின் பின்புற நுனிபாகத்தில் ஊசி போன்ற முட்டை இடும் உறுப்பு கிடையாது. பொதுவாக பூச்சி ஒட்டுண்ணி குடும்பங்களில் டிரைகோகிரம்மாட்டிடே, இக்னிமோனிடே, பிரக்கோனிடே, பெத்திலிடே, என்சிர்டிடே ஆகியவை குளவி ஒட்டுண்ணிகளாகும். சிர்பிடே, டாக்கினிடே போன்றவை ஈக்கள் வகை ஒட்டுண்ணிகள். ஒட்டுண்ணி வகைகளில் இவை அனைத்தும் முக்கியமானவை.

முட்டை ஒட்டுண்ணி

ஒட்டுண்ணிகள் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் உடலின் உள்பகுதியிலோ அல்லது வெளிப்பகுதியிலோ முட்டையிடும். பூச்சிகளின் உடலின் உள்பகுதியில் முட்டையிடும் ஒட்டுண்ணி முட்டைகள் புழுக்களாக வெளிவந்து பூச்சிகளின் சத்துக்களை உட்கொண்டு அவற்றை அழித்து தன் இனத்தை பெருக்குகின்றன. இவ்வாறு பூச்சிகளின் உடலின் உள்பகுதியில் தன் வாழ்கையை முடிக்கும் ஒட்டுண்ணிகளை உட்புற ஒட்டுண்ணிகள் (Endoparasitoid) என்றும், பூச்சிகளின் உடலில் வெளிப்பகுதியில் முட்டையிட்டு பூச்சிகளின் உடல் சத்தினை உறிஞ்சி பூச்சியை அழிக்கும் ஒட்டுண்ணிகள் வெளிப்புற ஒட்டுண்ணிகள் என்றும் அழைக்கிறோம்.

முட்டை பருவ ஒட்டுண்ணிகள் டிரைக்கோகிரம்மா, டெலினோமஸ், டெட்ராஸ்டிக்கஸ் இவை மூன்றும் ஆகும். அதுபோல் முட்டை புழுப்பருவ ஓட்டுண்ணிகள் பிரக்கோனிட், பெத்திலிட், சால்சிட், இக்னுமானிட், எலாஸ்மிட், டாக்கினிட் ஆகியவை ஆகும். இதுவே கூட்டுப்புழுப் பருவ ஒட்டுண்ணிகள், சால்சிட், ஈலோபிட், வண்ணத்துப்பூச்சி உள்ளிட்டவை. புழுப்பருவ ஒட்டுண்ணி எப்ரிகார்னியா ஆகும்.

2.ஊண் விழுங்கிகள்

பூச்சி ஊண் விழுங்கிகளை பிரிடேட்டார்ஸ் (Predators) என்று அழைக்கிறோம். ஊண் விழுங்கிகளை இரை விழுங்கிகள் என்றும் கூறலாம். இவற்றினை பூச்சியின ஊண் விழுங்கிகள் என்றும் பூச்சியினத்தை சேராத இதர ஊண் விழுங்கிகள் என்றும் இரண்டு வகையாக பிரிக்கலாம். உதாரணமாக சிலந்திகள், பறவைகள் போன்றவை இதர ஊண் விழுங்கிகளாகும். ஊண் விழுங்கிகள் இரையினை பிடித்து அழிப்பதற்கு ஏற்றவாறு உடலில் சில சிறப்பு அமைப்புகளையும், குணங்களையும் பெற்றுள்ளன. நீளமான கால்களில் முட்கள் போன்ற அமைப்பு, எல்லா திசைகளிலும் சுழற்றி பார்ப்பதற்கேற்றவாறு தலைகழுத்து இணைப்பு, பெரிய கண்கள், மென்று திண்பதற்கேற்ற உறுதி வாய்ந்த தாடைகள், இரையினை அறிந்து கொள்ள உணர்வு கொம்புகள், மறைந்திருந்து தாக்குவதற்கேற்ற நிறமாற்றம் மற்றும் உருவ அமைப்பு, இரையினை செயல் இழக்க செய்வதற்கான சுரப்பிகள், ஊசி போன்ற வாய்ப்பகுதிகள். இந்த உறுப்புகளும், உடல் அமைப்பும் இரை விழுங்கிகளுக்கு பெரிதும் உதவுகிறது.

பூச்சிகள்

ஊண் விழுங்கி வகை பூச்சியினங்கள்...

உலகில் மொத்தம் 220 வகை ஊண் விழுங்கி பூச்சியினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, பொறி வண்டுகள், நாவாய்ப்பூச்சிகள், பச்சைக்கண்ணாடி, இறக்கைப்பூச்சிகள், தட்டான் இனங்கள், தொழுபூச்சிகள், கிரிப்டோலிமஸ், கைலோமெணஸ், புருமஸ், ஸ்கிம்னஸ், கைலோகோரஸ், கிரைசோபர்லா, ஜாஸ்டீரோவி, சிரீபஸ், பராகஸ், சிர்பிட் புழுக்கள், எறும்பு இனங்கள், ஈக்கோபில்லா, தரைவண்டுகள், பரினா, ஒபியோனியா, தட்டான், சிலந்திகள், கலோசோமா, சிசிண்டெலா, மெகாசெபலா, டெரோஸ்டிகஸ், சிரடோர்ன்ஸ், பியூல்வ்ஸ், சிர்டோரினஸ், லிவிடிபென்னிஸ், மேக்ரோலோபஸ், பிக்மேயஸ், நீர்த்தாண்டி, ரெடுவிட், மிரிட், ஆந்தோகோரிட், ஏழு புள்ளி பொறி வண்டு, கிரைசோபர்லா கார்னியா, ஊசித்தட்டான், நீர் மிதப்போன், மாண்டிஸ் கும்பிடுப்பூச்சி, பாராடோசா, ஆக்சியோபஸ், டெட்ராகினாத்தா போன்றவற்றை எளிதாக பார்க்கமுடியும். இவற்றில் வண்டுகள், நாவாய் பூச்சிகள், குளவிகள், கண்ணாடி இறக்கை பூச்சிகள் மிகவும் முக்கியமானதாகும்.

ஊண் விழுங்கி பூச்சிகளை பாதுகாக்க வேண்டும்..

ஊண் விழுங்கி பூச்சியினங்களில் பல வகை, இரையினை பிடித்து, கடித்து, குதறி மென்று உண்ணும் குணமுடையன. இவற்றிற்கு உதாரணமாக பொறிவண்டுகள், தட்டான், தொழுப்பூச்சி இவற்றைக்கூறலாம்.

இன்னும் சில வகை, இரையின் சாறை உறிஞ்சி சாப்பிடும் தன்மையுடையன. இவற்றிற்கு உதாரணமாக மிரிட் மற்றும் ரெடுவிட், நாவாய் பூச்சியினங்களை கூறலாம்.

உலகம் முழுவதும் ஊண் விழுங்கி பூச்சிகள் உயிரியல் முறை பயிர்பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்படுகின்றன. பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழித்து நிலையாக வயல்களில் வாழ்வதால் பூச்சிகளின் எண்ணிக்கை மேலும் கட்டுப்படுத்தப்பட்டு பொருளாதார சேத நிலைக்கு குறைவாகவே வைக்கப்படுகின்றன. இவைகளை பெருக்கி வயல்களிலும், தோட்டங்களிலும் விடுவதாலும் இயற்கையிலேயே இருக்கும் ஊண் விழுங்கி பூச்சியை பாதுகாப்பதாலும் அவைகளை மேலும் மேலும் பெருக வாய்ப்பளிப்பதின் மூலமாகவும் நாம் நல்ல பலன்களை பெறமுடியும். பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டினை குறைக்க முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். மனிதர்கள், கால் நடைகள், மற்றும் பிற உயிர் இனங்களை காப்பாற்ற இயலும். ஆகவே ஊண் விழுங்கி பூச்சிகளை நாம் பாதுகாத்து அவற்றின் பலனை பயிர் பாதுகாப்பில் பெறவேண்டும்" என்றார்.

அரிபுத்திரன்

விவசாயத்துக்கு உதவும் நுண்ணுயிரிகள்

விவசாயத்துக்கு உதவும் நுண்ணுயிரிகள் பற்றி கேட்டதற்கு, அவர் கூறுகையில், "விவசாயத்தில் பாக்டீரியா நுண்ணுயிரி முக்கிய பங்கு வகிக்கிறது. தாவர வளர்ச்சி, மண் ஆரோக்கியம் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளுக்கு அது உதவுகிறது. அதன்படி தாவர வளர்ச்சி ஊக்குவிப்பில் நைட்ரஜன் நிலைப்படுத்தலில் பாக்டீரியா செயலாற்றுவது குறிப்பிடத்தக்கது. ரைசோபியா, அசோடோபாக்டர் மற்றும் அசோஸ்பைரில்லம் போன்ற பாக்டீரியாக்கள் வளிமண்டல நைட்ரஜனை தாவரங்கள் பயன்படுத்தக்கூடிய வடிவமாக மாற்றுகின்றன. சூடோமோனாஸ் மற்றும் பேசிலஸ் போன்ற பாக்டீரியாக்கள் மண்ணில் இருக்கும் பாஸ்பரஸை கரைத்து, தாவரங்களுக்கு கிடைக்கச் செய்கிறது. அசோஸ்பைரில்லம் மற்றும் சூடோமோனாஸ் போன்ற பாக்டீரியாக்கள் ஆக்சின்கள் மற்றும் சைட்டோகினின்கள் போன்ற தாவர வளர்ச்சி சீராக்கிகளை உருவாக்குகின்றன.

நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்...

அத்துடன், மண் ஆரோக்கியத்தில் பாக்டீரியாவின் பங்கு முக்கியமானது.

பேசிலஸ் மற்றும் சூடோமோனாஸ் போன்ற பாக்டீரியாக்கள் எக்ஸோபோலி சாக்கரைடுகளை உற்பத்தி செய்கின்றன. அவை மண்ணின் அமைப்பு மற்றும் தண்ணீரைத் தாங்கும் திறனை மேம்படுத்துகின்றன. அதே, சூடோமோனாஸ் மற்றும் பேசிலஸ் போன்ற பாக்டீரியாக்கள் கரிமப் பொருட்களை சிதைத்து, தாவரங்களை உறிஞ்சுவதற்கு ஊட்டச்சத்துக்களை வெளியிடுகின்றன. மேலும், சூடோமோனாஸ் மற்றும் ரோடோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் கன உலோகங்கள் போன்ற மாசுபடுத்திகளை சிதைக்கின்றன. தாவரத்தில் உயிரியல் கட்டுப்பாடுக்கும் பாக்டீரியாக்கள் பெரும் உதவி செய்கிறது.

நன்மை பூச்சிகள்

பயிர் விளைச்சலை மேம்படுத்தும்..

சூடோமோனாஸ் மற்றும் பேசிலஸ் போன்ற பாக்டீரியாக்கள் தாவரநோய் கிருமிகளைத் தடுக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பிற சேர்மங்களை உருவாக்குகின்றன. பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) போன்ற பாக்டீரியாக்கள் பூச்சிகளை கொல்லும் நச்சுகளை உற்பத்தி செய்கின்றன. சூடோமோனாஸ் மற்றும் பேசிலஸ் போன்ற பாக்டீரியாக்கள் நூற்புழுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும். இதுதவிர, பாக்டீரியா அடிப்படையிலான உயிர் உரங்கள் ரசாயன உரங்களை மாற்றும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும். பயோஸ்டிமுலண்ட்ஸ் பாக்டீரியா அடிப்படையிலான உயிரித் தூண்டிகள் தாவர வளர்ச்சியைத் தூண்டி பயிர் விளைச்சலை மேம்படுத்தும். விவசாயக் கழிவுகளை மேலாண்மை செய்யவும் பாக்டீரியாவை பயன்படுத்தலாம், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கலாம்" என விளக்கமாக கூறினார்.

பூச்சிகள் உருவத்தில் சிறிது, அதன் உலகம் பிரமாண்டமானது..

இதைத்தொடர்ந்து, பூச்சிகள் உலகம் குறித்து விவரிக்கையில், "உருவத்தில் சிறியதாகத் தெரியும் பூச்சிகளின் உலகம் மிகவும் பிரமாண்டமானது. பூச்சிகளும் மிகவும் அழகான உயிரினங்களே. ஒவ்வொரு பூச்சியிலும் ஒரு தனித் தன்மை திறன் இருக்கிறது. அவைகளிலும் பிரமிக்கத்தக்க வகையில் பல்வேறு வடிவங்கள் உருவ அமைப்புகள் வண்ணங்களில் அழகாக இப்பூமியில் பரிணமித்துள்ளன. இயற்கை அழகினை ரசிக்கும் நாம் இயற்கையோடு சார்ந்து வாழும் அனைத்து உயினங்களையும் பூச்சியினங்களையும் உற்று நோக்க வேண்டும். பூச்சிகள் என்றாலே நம்மில் பலருக்கும் பிடிக்காது. அது ஓர் அருவருக்கத்தக்க ஜீவன் என்றே எண்ணுகிறோம். ஆனால் அது தவறானது.

முட்டைகள்

மனிதர்களுக்கும் பூச்சிகளுக்கும் இடையேயான சார்பு வாழ்க்கை...

தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் பார்த்துப் பழகிய நமது கண்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் தெரிவதே இல்லை. பூச்சியனங்களை உற்று நோக்கும் போது மிகவும் பிரமிப்பாகவும் அவற்றின் செயல்பாடுகளை கண்டு ரசிக்கும் போது இயற்கையின் படைப்பில் அனைத்தும் அதிசயங்களே என்ற ஓர் உள்ளுணர்வு மனதில் ஏற்படும்.

இப்பூமியில் பரிணமித்துள்ள உயிரினங்கள் அனைத்தும் உயிர்ச் சங்கிலியின் பிணைப்பாகவே உள்ளது. பூச்சிகளையும

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.