சென்னை: பகலில் டெலிவரி பாய்; இரவில் கொள்ளையன் - செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஜோடி!
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆஷல் பேம். இவர் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் தங்கி, அந்தப் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் வேலைப்பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி காலையில் தோழிகளுடன் ஆஷல் பேம், மெரினா கடற்கரைக்குச் செல்ல கோடம்பாக்கம் சாலையில் நடந்துச் சென்றார். அப்போது பைக்கில் வந்தவர்கள் ஆஷல் பேமிம் விலை உயர்ந்த செல்போனைப் பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த ஆஷல் பேம், பைக்கை சிறிது தூரம் விரட்டிச் சென்றார். பின்னர் செல்போன் பறிப்புச் சம்பவம் குறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து சம்பவம் நடந்த நேரத்தில் அவ்வழியாகச் சென்ற டூவீலர்களை சி.சி.டி.வி கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் பைக்கை ஓட்ட இளம்பெண் ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். அந்த சி.சி.டி.வி காட்சியை ஆஷல் பேமிடம் காட்டியபோது பெண் ஒருவர்தான் செல்போனை பறித்தார் எனக் கூறினார்.
இதையடுத்து இளைஞரும் இளம்பெண்ணும் சென்ற பைக் குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது அந்த பைக்கை ஓட்டியது மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சூர்யா (19), பின்னால் அமர்ந்திருந்தது ஆவடியைச் சேர்ந்த சுஜிதா (20) எனத் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஆஷல் பேமின் செல்போனை பறித்தது சுஜிதா எனத் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து குமரன் நகர் போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட சூர்யா மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுஜிதாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சூர்யாவுடன் சுஜிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனால் இருவரும் அடிக்கடி இரவு நேரத்தில் பைக்கில் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பகலில் சூர்யா, உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். அதைப் போல சுஜிதா தூய்மை பணியாளராக வேலை செய்து வந்திருக்கிறார். இரவில் இருவரும் சந்தித்து பைக்கில் செல்லும்போது தங்களின் ஆடம்பர தேவைக்காக செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். சம்பவத்தன்று ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் ஆஷல் பேமிடருந்து செல்போனைப் பறித்திருக்கிறார்கள். தொடர்ந்து இருவரின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


