வரதட்சணை: ``ரூ.5 லட்சம் வேண்டாம்; ஒத்த ரூபாய் போதும் - மணமகள் வீட்டாரை நெகிழ வைத்த மணமகனின் செயல்!
ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் எப்படி தவறோ, அதுபோல வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தவறுதான். ஆனால், படித்த முன்னேறிய சமூகத்தினர் கூட வரதட்சணையை இன்றைய காலகட்டத்தில் வாங்காமலோ கொடுக்காமலோ இருப்பதில்லை. இத்தகைய சூழலில், ராஜஸ்தானில் படித்த இளைஞர் ஒருவர், தனது திருமணத்தின்போது மணமகள் வீட்டார் தட்டில் வைத்துக் கொடுத்த ரூ. 5 லட்சத்தைத் திருப்பிக்கொடுத்திருக்கிறார்.
இது குறித்து வெளியான தகவலின்படி, மணமகனின் பெயர் பரம்வீர் ரத்தோர். சிவில் சர்வீஸ் பணிக்குத் தயாராகிவரும் இவருக்கும், முதுகலை பட்டப்படிப்பு படித்துவரும் நிகிதா பாடி என்பவருக்கும் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிப்ரவரி 14 அன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதில், திருமணத்தன்று சடங்குகளின் ஒருபகுதியாக பரம்வீர் சிங் குதிரையில் வந்திறங்கியதும் மணமகள் வீட்டார் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நெற்றியில் திலகமிடும் சடங்கு தொடங்கியது.
அப்போது, மணமகள் வீட்டார் ரூ.5.51 லட்சத்தை ரொக்கமாக தட்டில் வைத்து மணமகனிடம் கொடுத்திருக்கின்றனர். ஆனால், வரதட்சணை மீது நாட்டமில்லாத பரம்வீர், அங்கிருந்த அனைவர் முன்னிலையில் வாங்காமலிருந்தால் சரியாக இருக்காது என்று கருதி, அப்போதைக்கு அதை வாங்கிக்கொண்டு பின்னர் மணமகள் வீட்டாரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய பரம்வீர், ``அவர்கள் பணத்தைக் கொடுக்க வந்தபோது, இன்னும் இந்தச் சமூகத்தில் வரதட்சணை இருப்பதை எண்ணி வருத்தமடைந்தேன். இருப்பினும், அந்த சமயத்தில் திருமணச் சடங்குகளைத் தொடர வேண்டியிருந்ததால் என்னால் நிராகரிக்க முடியவில்லை. என் பெற்றோரிடம், பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று கூறினேன். நான் சிவில் சர்வீஸுக்கு தயாராகி வருகிறேன், நிறைய படித்திருக்கிறேன். படித்தவர்களே மாற்றத்துக்கு முன்வராவிட்டால், வேறு யார் வருவார்.
அதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று, என் பெற்றோர்களும் பணத்தைத் திருப்பித் தர சம்மதித்தனர். எனக்கும் ஒரு சகோதரி இருக்கிறார். எனவே, வரதட்சணைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், சமூகத்தில் எப்படி மாற்றத்தை உண்டாக்குவது. ஒவ்வொருவரும் இதைத் தொடங்க வேண்டும். படித்தவர்கள் அதை முன்னெடுக்க வேண்டும். திடீரென்று மாற்றம் உண்டாகிவிடாது. ஆனால், நாம் அதை ஆரம்பிக்க வேண்டும்." என்று முற்போக்காகப் பேசினார்.

அதேபோல், பரம்வீரின் தந்தை ஈஸ்வர் சிங், ``பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அதனால்தான் எங்களால் பணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சடங்குகளின் ஒரு பகுதியாக ஒரு தேங்காய் மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு, பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டோம். இந்த வரதட்சணை வழக்கத்தை நிறுத்த வேண்டும்." என்று கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


