திருப்பத்தூர்: அபாய நிலையில் மின் கம்பம்... `எங்கள் உயிருக்கு யார் பொறுப்பு? - அச்சத்தில் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆர்.எஸ் சாலை குடியிருப்பில் பல மாதங்களாகவே மின் கம்பம் ஒன்று மிகவும் சிதிலமடைந்த நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அபாய சூழலில் உள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், ``மின் வாரிய அலுவலர்கள் முறையாக மின் கம்பத்தைப் பராமரிக்காததால், தற்போது மின் கம்பம் பழுதடைந்துள்ளது. குறிப்பாகத் தரைப்பகுதியில் சிமென்ட் தளம் பெயர்ந்து, வெறும் இரும்புக் கம்பிகள் மட்டுமே உள்ளன. இந்த தெரு வழியில், 24 மணி நேரமும் கிராம மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றவாறு இருப்பர். ஆறு மாதங்களுக்கு மேலாக மின்கம்பம் பழுதடைந்தும், எந்த நேரத்திலும் உடைந்து விழும் நிலையிலும் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

மேலும், அந்த வழியே செல்லும் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இந்த மின் கம்பம் நம் மீது விழுந்து ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதுடன், ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது. இந்த மின் கம்பம் இந்த காற்றுக்கு விழுந்து‌ விடுமோ இல்லை, அடுத்த மழைக்கு விழுந்து விடுமோ என்று பயந்து பயந்து அப்பகுதியைக் கடந்து கொண்டு இருக்கிறோம்" என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில் “நகரங்களில் பழைய, சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றி புதியவை பொருத்தப்படுகின்றன. ஆனால் கிராமப்புறங்களிலும் வயல்வெளிகளிலும் உள்ள மிகப் பழைய, முறிந்துபோன மின்கம்பங்கள் மாற்றப்படாமல் அப்படியே வைக்கப்படுகின்றன.

மேலும், மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், பல இடங்களில் காற்று பலமாக வீசும் நேரங்களில் அல்லது மழைக்காலங்களில் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது?” என்றனர்.

இது குறித்து அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

உயிரிழப்புகளைத் தடுக்க, பழைய மின் கம்பங்களை உடனடியாக மாற்றி, மின் சாதனங்களைச் சரியாகப் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் அலட்சியம் வேண்டாமே!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.