வேலூர்: மேல்மொனவூரில் குவியலாக கொட்டிக் கிடக்கும் குப்பைகள்; நோய் தொற்று பரவும் முன் கவனிப்பார்களா?
வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியை அடுத்த மேல்மொனவூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையின் அருகிலேயே குப்பைகள் பரவி கிடக்கின்றன. இந்த மேல்மொனவூர் பகுதியில் உள்ள சதுப்பேரியின் கரை அருகிலேயே குப்பைகள் குவியல் குவியல்களாக சில சமூக விரோதிகளால் கொட்டப்பட்டு உள்ளன. மேல்மொனவூர் பகுதியில் இருக்கும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையை ஒட்டி சுமார் 100 மீட்டருக்கு குப்பைகள் கொட்டி கிடக்கின்றன.
மேல்மொனவூர் சதுப்பேரியின் ஏரி கரையின் அருகிலேயே மீன் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. வேலூர் மாநகராட்சியின் எல்லை முடியும் பகுதி என்பதால் வேலூர் மாநகரில் இருக்கும் குப்பைகளை கூட இந்த பகுதியில் வீசி செல்கின்றனர். சிலர் மாலை நேரங்களில் இந்தப் பகுதியில் இருக்கும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக மாறி, சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனால் சமீபத்தில் சில விபத்துகளும் இந்த பகுதியில் நடந்திருக்கின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், “இந்தப் பகுதியில் எத்தனை முறை சுத்தம் செய்தாலும் இரவு நேரங்களில் சில சமூகவிரோதிகள் இங்கு குப்பைகளை கொட்டி விட்டுச் செல்கின்றனர். சில நாள்களிலேயே இந்தப் பகுதி முழுவதும் குப்பைகள் குவியல் குவியலாக வந்து குவியத் தொடங்குகின்றன. இதனை தடுக்க யாரும் உரிய முயற்சிகளை எடுக்கவில்லை. எங்கிருந்தோ எடுத்து வரும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு அது நாட்கணக்கில் இங்கு தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் எங்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கெட்டுப்போன இறைச்சிகளும் மீன் கழிவுகளும் இங்கே கொட்டப்படுவதால், அந்தக் கழிவுகள் அழுகி இந்தப் பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது.

இதனாலும் இந்த பகுதியில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்று கூறினார்.
இது குறித்து வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, “மேல்மொனவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கையை மேற்கொள்கிறோம். குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கையினை வரும் காலங்களில் எடுப்போம். எங்களுடைய தூய்மை காவலர்களை கொண்டு இந்த குப்பைகளை அகற்றும் பணியினை செய்ய உள்ளோம்” என்றார்.
நோய் தொற்று பரவுவதற்கு முன்பே மேல்மொனவூர் பகுதியில் குவியல் குவியல்களாக சேர்ந்து உள்ள குப்பைகளையும், மீன் கழிவுகளையும் அகற்ற வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


