பிரதமர் உட்பட எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது! - சட்ட வல்லுநர்கள் கருத்து

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்களின் தவறுகளையும், அரசின் கொள்கைகளையும் விமர்சிக்க அச்சு ஊடகம், காட்சி ஊடகம், சமூக ஊடகம் என அனைத்து ஊடகங்களுக்கும் சட்ட ரீதியான உரிமை இருக்கிறது. அதற்கான சுதந்திரத்தையும், உரிமையையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால், பிரதமரை விமர்சித்தால் தேசத்தையே விமர்சிப்பதாகப் பாயும் போக்கு ஆளும் தரப்பினரிடம் இருக்கிறது. இது மிகவும் தவறு என்று சட்ட வல்லுநர்களும், அரசியல் திறனாய்வாளர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பீட்டர் அல்போன்ஸ்

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்.

“மக்களைப் பார்த்து ஆட்சியாளர்கள் பயந்தால், அது ஜனநாயகம். ஆட்சியாளர்களைப் பார்த்து மக்கள் பயந்தால், அது ஏதேச்சதிகாரம். என்றைக்கு நாம் அரசைப் பார்த்து பயப்படுகிறோமோ, அப்போது ஜனநாயகம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். I am the state (நான்தான் நாடு) என்று மிகுந்த அகந்தையுடன் சொன்னவன், பிரெஞ்சு மன்னன்14-ம் லூயி. மன்னராட்சி நடைபெற்ற நாடுகளின் மன்னர்களில்கூட, அத்தனை பேரிடமும் அத்தகைய அகங்கார மனப்பான்மை இல்லை. ஆனால், அவர்களில் கொடுங்கோன்மை மிக்கவர்களிடம் அத்தகைய மனப்பான்மை இருந்திருக்கிறது.

‘நான்தான் அரசு’ என்ற மனப்பான்மை கொண்ட மன்னர்கள் இருக்கும் நாடுகளில், மன்னர்கள் மீதான விமர்சனங்கள் தேசத் துரோகக் குற்றங்களாகக் கருதப்படும். உதாரணமாக, தாய்லாந்தில் எல்லா குற்றங்களுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால், மன்னர்களுக்கு எதிராகப் பேசினால், அதற்கு மன்னிப்பே கிடையாது. மேலும், மரண தண்டனை என்ற கடுமையான தண்டனை அதற்கு வழங்கப்படுகிறது. சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மன்னர்களைப் பற்றித் தவறாகப் பேசினால், அங்கே வாழவே முடியாது.

ஊடக சுதந்திரம்

ஆனால், இந்தியா அத்தகைய நாடு கிடையாது. இது ஒரு ஜனநாயக நாடு. இங்கு, அரசியல் சாசனம் மூலமாக நாடாளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய நாட்டில், ஜனநாயத்துக்கும், பத்திரிகை சுதந்திரத்துக்கும் எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்றால், அதற்கு மிகப்பெரிய விலையை இந்த ஆட்சியாளர்கள் கொடுக்க வேண்டியிருக்கும். பத்திரிகை சுதந்திரத்தைப் பொறுத்தவரை, அது நம்முடைய ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு இருக்கிற ஒரு ஏற்பாடு. ஊடக சுதந்திரம் எந்தளவுக்கு இருக்கிறதோ, அந்தளவுக்கு நம்முடைய ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும்.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய அடிப்படையே, ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்திக்கொள்வதுதான். அதுதான் ஜனநாயகத்துக்கு அடிப்படை. அது இல்லையென்றால், ஜனநாயகமே இல்லை. மக்கள் கேள்வி கேட்பதும், அதற்கு அரசு பதில் சொல்வதும்தான் ஜனநாயகம். நாட்டில் ஜனநாயக நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன. பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது. தனிமனித உரிமைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு தரப்படுகிறது. நீதி நிறுவனங்கள் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனவா என்பதைப் பொறுத்துதான், ஜனநாயத்தின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியும்.
மோடி

ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வை எதிர்த்தால், அது தேசத்தையே எதிர்ப்பதற்கு நிகரானது, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தால், அது நாட்டின் இறையாண்மையையே விமர்சனம் செய்வதற்கு நிகரானது என்று சொன்னால், நம்முடைய ஜனநாயகம் வேகமாக அழிவை நோக்கிப் போகிறது என்று அர்த்தம். இத்தகைய போக்கு, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில்தான் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதற்கு முன்பு எமர்ஜென்சி வந்தது. அதற்கு இந்திரா காந்தியே வருத்தம் தெரிவித்தார்.

எமர்ஜென்சி என்ற அந்த ஒரு கட்டத்தைத்தான் நம்மால் சொல்ல முடியுமே தவிர, மற்ற எந்தக் காலகட்டத்திலேயும் தற்போது இருப்பதைப் போன்ற அசாதாரண நிலை இருந்தது கிடையாது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை எப்படியெல்லாம் பா.ஜ.க-வினர் பேசினார்கள். அவரை, பேடி என்றெல்லாம் கூட மிக மோசமானப் பேசினார்கள். இலங்கைத் தமிழர் விவகாரத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாடாளுமன்றத்தில் எதிரே உட்கார வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்பதை நாடு அறியும். ஆனால், அதையெல்லாம் அன்றைய ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளத்தானே செய்தார்கள்.

மன்மோகன் சிங்

ஆனால், இன்றைக்கு ஆட்சியாளர்களுக்கு எதிராக யாரும் வாயே திறக்க முடியவில்லை. நாட்டின் பொருளாரத்தைப் பற்றிப் பேசினாலோ, நாட்டின் நிர்வாகத்தைப் பற்றிப் பேசினாலோ, நாட்டில் நடக்கும் ஊழலைப் பற்றிப் பேசினாலோ, உடனே தேசத்துரோகி என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். சமீபத்திய உதாரணமான திருப்பரங்குன்றம் பிரச்னையை எடுத்துக்கொள்வோம். திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் தர்காவில் காலம் காலமாக ஆடு, கோழி பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. ‘இது ஆண்டாண்டு காலமாக நடந்துகொண்டுதானே இருக்கிறது’ என்று சொன்னால், உடனே ‘இந்துக்களுக்கு விரோதி’ என்று பிரசாரம் செய்கிறார்கள்.

மத நல்லிணக்கம் பற்றிப் பேசினால் ‘இந்து விரோதி’. பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்துகிறார்கள். இந்த அநியாயத்தை எங்கே போய் சொல்வது?” என்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.

கோ.பாலச்சந்திரன்

இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், அரசியல் திறனாய்வாளருமான கோ.பாலச்சந்திரனிடம் பேசினோம். “அரசை விமர்சிப்பது, தேசத்தை விமர்சிப்பது கிடையாது. அரசின் செயல்பாடுகளையும், ஆட்சியாளர்களின் கொள்கைகளையும் விமர்சனம் செய்யலாம். நடுநிலையாக இருப்பவர்கள், அரசின் சில நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசலாம். அரசின் சில நடவடிக்கைகளை அவர்கள் எதிர்த்தும் பேசலாம். அது ஒருபோதும் தேசவிரோதச் செயல் ஆகாது. மாறாக, அது தேசவிரோதம் என்று சொன்னால், அது மிகவும் தவறான ஒரு வாதம்.

‘இந்தியாதான் இந்திரா... இந்திராதான் இந்தியா’ என்று ஒரு தலைவர் ஒரு காலத்தில் சொன்னார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தால், அதைவிட மோசமாக இருக்கிறது. அரசின் கொள்கைகளை ஆதரிக்கவில்லையென்றால், அரசின் கொள்கைகளை எதிர்த்துப் பேசுகிறீர்கள் என்றால், உடனே தேசத்துரோகி என்று முத்திரை குத்துகிறார்கள்.

‘விஸ்வ கர்மா’ என்று ஒரு திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கிறது. அதில் பல குறைபாடுகள் இருப்பதாக பலர் நினைக்கிறார்கள். ஓர் உதாரணம். குயவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் எப்போது பயடைவார்? குயவர் சமூகம் காலம் காலமாக செய்துகொண்டிருந்த தொழிலுக்கு அவர் விண்ணப்பித்தால், அவருக்குக் கடன் கிடைக்கும் என்கிறது விஸ்வகர்மா திட்டம். இதை விமர்சிக்கிறார்கள். அந்த விமர்சனம் உண்மையாக இருந்தால், அரசின் அந்தத் திட்டம் சாதியைத் தூக்கிப்பிடிக்கிறது என்பது அர்த்தமாகிறது. நடுநிலையாக இருக்கும் எவரும் அதை விமர்சிக்கத்தான் செய்வார்கள். அதற்காக அவரை தேசத்துரோகி என்றால் எப்படி?

விஸ்வகர்மா திட்டம்

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. அதில், ஒவ்வொரு ரூபாயும் எங்கிருந்து வருகிறது... ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு செலவிடப்படுகிறது என்று சொல்வார்கள். பட்ஜெட்டில் எத்தனை சதவிகிதம் கார்ப்பரேட் வரியிலிருந்து வருகிறது... எத்தனை சதவிகிதம் ஜி.எஸ்.டி-யிலிருந்து வருகிறது என்று குறிப்பிடுவார்கள். அந்த வகையில், இந்த பட்ஜெட்டில் 24 சதவிகிதம் வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்ட கடன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு ரூபாயில், கிட்டத்தட்டட கால் பங்கு அளவுக்கு வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கி நாட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு ரூபாயிலும் 20 பைசா (பட்ஜெட்டில் 5-ல் ஒரு பங்கு) வாங்கிய கடனுக்கு வட்டியாகச் செலுத்தப்படுகிறது என்று பட்ஜெடடில் கணக்கு இருக்கிறது. இதை விமர்சித்தால் நான் தேசத்துரோகி ஆகிவிடுவேனா? எனவே, அடிப்படையில் இப்படியான எதிர் தாக்குதல் தவறானது.

கடந்த காலத்தில், ஆட்சியாளர்கள் மீதும், மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் மீது இதைவிட கடுமையான விமர்சனங்களையும், கேலிச்சித்திரங்களையும் ஆனந்த விகடன் வெளியிட்டிருக்கிறது. அப்போதெல்லாம், அந்த அரசியல் தலைவர்கள் யாரும் விகடனைத் தடைசெய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், இன்றைக்கு ஆனந்த விகடன் இணையதளத்தை ஆட்சியாளர்கள் முடக்கியிருக்கிறார்கள். அதுவும், முதலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விகடன் தளத்தை முடக்கிவிட்டு, அதன் பிறகு மறுநாள் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், வழக்கு தொடுப்பதற்கு முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது மாதிரி இருக்கிறது” என்கிறார் கோ.பாலச்சந்திரன்.

நீதிபதி அரிபரந்தாமன்

இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபந்தாமனிடம பேசினோம். “பிரதமர், நீதிபதிகள் உட்பட விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது. 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் தலைமை நீதிபதிக்கு எதிராகப் பொதுவெளியில் வந்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம், அது அவர்களின் உரிமை. இது சமீபத்திய வரலாறு. எனவே, யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அது அவதூறாக இருக்கக்கூடாது. மத ரீதியான, சாதி ரீதியான வெறுப்பு பேச்சாகவும் அது இருக்கக் கூடாது. அவ்வளவுதான். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லாருமே விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்தான்” என்கிறார் நீதிபதி அரிபரந்தாமன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.