விகடன் இணையதளம் முடக்கம்: ``பாஜகவிற்கு எதிராக பெரு மூச்சு விடுவதையும் கூட... - இரா. முத்தரசன்

விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன.

வாசகர்கள் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை என புகார் அளித்திருக்கிறார்கள். இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. விகடன் இணையதள்ம் முடக்கப்பட்டது தொடர்பாக பா.ஜ.க அரசைக் கண்டித்து தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசனும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து இரா. முத்தரசன், ``தமிழ்நாட்டின் முன்னணி வார இதழான “ஆனந்த விகடன்”, தனது இணைய தளத்தில், அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து சென்ற, இந்தியர்களை கைகள், கால்களில் விலங்கு போட்டு திருப்பி அனுப்பிய அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் திமிர் தனமான நடவடிக்கையினையும், அமெரிக்க அரசின் ஆணவச் செயலை நியாயப்படுத்திய ஒன்றிய அரசையும் விமர்சிக்கும் முறையில் ஒரு “கேலிச்சித்திரம்” வெளியிட்டிருந்தது. இதனை சகித்துக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு விகடன் குழும இணைய தளத்தை முடக்கி வைத்து மிரட்டும் செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. விகடன் குழுமம் ஊடகத் துறையில் நீண்ட பாரம்பரியம் கொண்டது.

முத்தரசன்

அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகளில் மட்டும் அல்லாமல் கலை, இலக்கியம், தொல்லியல் ஆய்வு, வரலாறு, அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் தனது கருத்துக்களை வெளிப்படையாக முன் வைத்து வருவதே அதன் சிறப்பு மிக்க பாரம்பரியமாகும். இதன் காரணமாக சிறை செல்லவும் தயங்காத தைரியமும், துணிவும் கொண்ட பாரம்பரியம் கொண்டது. விகடன் ஊடக குழுமம் மட்டுமல்ல, பாஜக, ஆர் எஸ் எஸ், அதன் பரிவாரங்கள், அவைகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எந்த ஊடகத்தையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை என்பதே அனுபவமாகும்.

சர்வதேச அளவிலான ஊடக சுதந்திரப் புள்ளிக் கணக்கில், 180 நாடுகளுடன் ஒப்பிடும் போது கடந்த 2014 ஆம் ஆண்டில் 140வது இடத்தில் இருந்து 2024 ஆண்டில் 159வது இடத்துக்கு சரிந்து விழுந்துள்ளது. கௌரி லங்கேஷ் உட்பட இதுவரை 61 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 25க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளனர். ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரை படுமோசமான நிலவரத்தை வெளிப்படுத்தும் நாடு என, நமது நாடு அடையாளப்படுத்தப்படுகிறது.

முத்தரசன்

பாஜகவிற்கு எதிராக பெரு மூச்சு விடுவதையும் கூட அனுமதிக்க முடியாத, பாசிச வெறித்தனம் வெளிப்பட்டிருப்பதை, விகடன் குழும இணைய தளம் முடக்கம் காட்டுகிறது. இந்தக் கருத்துரிமை பறிப்பு பாசிச நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.