விகடன் இணையதளம் முடக்கம்: ``பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வலையை... - விஷால் கண்டனம்!
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை, ட்ரம்ப் அரசு கை, கால்களில் விலங்கிட்டு இந்தியாவுக்கு நாடு கடத்திய சம்பவத்தில், பிரதமர் மோடியைச் சித்திரித்து கார்ட்டூன் வெளியிட்டதைத் தொடர்ந்து, விகடன் வலைதளம் முடக்கப்பட்ட விவகாரம், மத்திய பா.ஜ.க அரசுக்கெதிராக பெரும் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது. இதில், ஆளும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பிலிருந்தும் பா.ஜ.க அரசுக்கெதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விஷாலும் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார். எக்ஸ் தளத்தில் விஷால், ``சமீபத்தில் நூற்றாண்டு பெருமை கொண்ட விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் இணையதள பக்கத்தில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் நிகழ்வை ஒட்டி ஒரு சித்திரம் வெளியிடப்பட்டது. அதற்கு கண்டனங்கள் சில இடங்களில் இருந்து வெளிவந்தாலும் ஒன்றிய அரசு விகடன் இணையதளத்தையே முடக்கியது. ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வலையை நசுக்குவதற்கு சமம்.
அதேவேளையில் திரைத்துறை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறிப்பாக பைரசி போன்ற பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து ஒன்றிய அரசை நாம் வலியுறுத்தி வந்தாலும் அதற்கு இதுவரை எந்த தீர்வு எட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். அதேபோல் நாட்டில் புழங்கும் பல்வேறு தவறான செயலிகள் மூலம் திரையில் சக நடிகர், நடிகைகள் மற்றும் மூத்த கலைஞர்கள் பற்றி தவறான செய்திகளைப் பொய்யாகப் பேசி பரப்புவதும், சமூகத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வெளியிட்டு இன்பம் காணும் ஒரு குறுகிய மனம் படைத்த கும்பலைக் கண்டறிந்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நூற்றாண்டு பெருமை கொண்ட விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் இணையதள பக்கத்தில் இந்திய நாட்டின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் நிகழ்வை ஒட்டி ஒரு சித்திரம் வெளியிடப்பட்டது. அதற்கு கண்டனங்கள் சில இடங்களில் இருந்து வெளிவந்தாலும் ஒன்றிய அரசு…
— Vishal (@VishalKOfficial) February 17, 2025
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் குறித்து எடுக்கப்பட்ட வெகு வேகமாக நடவடிக்கை போல், நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலி தற்குறிகள் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப காசுகளுக்காக அறத்தை மறந்து, தர்மத்தை மறந்து உண்மையை அறியாமல் பொய்யான போலியான கற்பனைகளை அவதூறாகப் பரப்பி வருபவர்கள் மீதும் திரைப்படங்கள் பைரசி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும்." என்று பதிவிட்டிருக்கிறார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன் பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


