``தோல்விகள் தொடர்ந்துகொண்டே இருந்தது; ஆனால்.. - பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம் வென்ற வேலூர் வீரர்
தேசிய அளவிலான 38-வது விளையாட்டுப் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது. இதில் 73 கிலோ பளு தூக்குபவர் பிரிவில், தமிழ்நாடு சார்பாக வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த N.அஜித் (26) என்பவர் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் 2-வது முயற்சியிலேயே 311 கிலோ எடையை தூக்கி, முதல் இடம் பெற்று தங்க பதக்கம் வென்றிருக்கிறார். தொடர்ந்து மூன்றாவது முறையும் தேசிய அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவருடைய வெற்றி பயணம் குறித்து தெரிந்துகொள்ள அவரை நேரில் சந்தித்து பேசினோம். ``நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பெங்களூருதான். அங்கிருந்த என்னை என்னுடைய மாமா N.பாஸ்கரன்தான் வேலூருக்கு வரவழைத்தார். அவர் வெயிட் லிப்டராக இருந்து, இந்தியன் ரயில்வேயில் விளையாட்டுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் வேலைக்குச் சேர்ந்தவர். எனவே எனக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே வெயிட் லிப்டிங் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். 2013-ம் ஆண்டு வெயிட் லிப்ட்டர் என்னும் பயணத்தை தொடங்கினேன்.
வேலூர் பகுதிக்கு வந்து என்னுடைய மாமாவிடம் பயிற்சி பெற ஆரம்பித்தேன். முதலில் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினேன். அதற்கு வீட்டிலேயே என்னுடைய மாமா பயிற்சி கொடுத்தார். அதன் பிறகு மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள சென்டரில் சேர்ந்து பயிற்சி பெற ஆரம்பித்தேன். வெயிட் லிப்டிங் கோச் சண்முகவேல், கபீர் ஆகியோர் எனக்கு பயிற்சி கொடுத்து 70% வரை என்னை இந்தத் துறையில் மேம்படுத்தனர். அதன் பிறகு நேஷனல் கேம்களில் விளையாடத் தொடங்கினேன்.
முதல் மூன்று ஆண்டுகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. மிகவும் சோர்வடைந்து இருந்த காலத்தில், என்னுடைய மாமாதான் எனக்கு ஊக்கமளித்தார். யுனிவர்சிட்டி அளவிலும் நிறைய போட்டிகள் வரும். நான் நிறைய போட்டிகளில் கலந்து கொள்வேன். ஆனால் மெடல் எனக்கு கிடைக்காது. இதுபோன்ற தோல்விகள் தொடந்துகொண்டே இருந்தது. ஆனால் என்னுடைய பயிற்சியை நான் கைவிடவில்லை.
2018-ம் ஆண்டு நேஷனல் கேம்ஸில் 73 கிலோ எடை பிரிவில் என்னுடைய முதல் தங்க பதக்கம் பெற்றேன். காமன் வெல்த் போட்டியிலும் ஒரு தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். உலக சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியாவில் ரியாதில் நடந்தது. அதில் நான் 16-வது ரேங்க் பெற்றேன். அதன் பிறகு இப்போது உத்தரகாண்டில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறேன்." என்றார்.
விளையாட்டு வீரர்களுக்கான அரசு பணியிடங்களில் உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் அஜித் தற்பொழுது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். மெடல் பெறும் விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்காக விடுமுறை எடுத்துக் கொள்ளும் விதிமுறைகளை பயன்படுத்தி தற்பொழுது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவர் பெற்ற தேசிய அளவிலான தங்கப்பதக்கத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன் பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


