கல்லூரி மாணவர் மரணம்: ``எறும்பு கடித்து இறந்ததாக போலீஸார் கூறுவதை ஏற்க முடியாது -போராடும் பெற்றோர்
திருநெல்வேலி அண்ணாநகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் மகன் விக்னேஸ்21. தேனி மாவட்டம் போடியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். செமஸ்ட்டர் தேர்வு நடந்துவரும் நிலையில், பிப்ரவரி 13 -ம் தேதி காலை விக்னேஸ் நீண்ட நேரமாக காணவில்லை என சகமாணவர்கள் தேடியுள்ளனர்.
பிறகு கழிப்பறை உள்பக்கமாக பூட்டியிருப்பது குறித்து விடுதி காப்பாளரிடம் தெரிவித்துள்ளனர். கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது விக்னேஸ் இறந்த நிலையில் கிடந்துள்ளார். நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸார் விக்னேஸ் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு உயிரிழந்த விக்னேஷின் பெற்றோர் உள்ளிட்ட அவரது உறவினர்கள் வந்தனர். அப்போது அவர்கள் தங்கள் மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் போலீஸார் விசாரிக்காமல் வழக்கை முடிக்க முயற்சி செய்கின்றனர் எனவும் குற்றச்சாட்டினர். மேலும் மகன் இறந்த வழக்கை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலக வாசலை முற்றுகையிட்டனர். இதையடுத்து கலெக்டரிடம் தங்கள் மகன் இறப்பு வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனு அளித்தனர்.

அந்த மனுவில், மகன் இறந்துகிடந்த இடத்தை பார்க்க கல்லூரிக்குச் சென்றேன். அந்தக் கழிப்பறையில் ரத்தக்கறைகள் இருந்தன. போலீஸாரிடம் இதுகுறித்து கேட்டால் எறும்பு கடித்து இறந்ததாகக் கூறினர். முதலில் காயங்கள் ஏதுமின்றி கழிப்பறையில் கிடந்ததாகக் கூறினர்.
தேனி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த என் மகனின் உடலை பார்க்க அனுமதிக்கவில்லை. கட்டாயம் பார்க்க வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து அனுமதித்தனர். என் மகனின் உடலில் காயங்கள் இருந்தன. காதுக்குள் இருந்து ரத்தம் வடிந்திருக்கிறது. சகமாணவர்களிடம் விசாரித்தபோது கழிப்பறையில் இருந்து மகனின் உடலை எடுத்தபோது பின்பகுதியில் இருந்து ரத்தம் இருந்ததாகக்கூறினர்.

ஆனால் போலீஸாரோ எறும்பு கடித்து இறந்திருக்காலம், மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம், வலிப்பு வந்திருக்கலாம், தற்கொலை செய்திருக்கலாம் என வழக்கை முடிக்கப்பார்க்கின்றனர். என் மகன் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பான் என்ற சந்தேகம் இருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கையை எங்களிடம் காட்ட மறுக்கின்றனர். பிரேதப்பரிசோதனையை வீடியோ எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர். எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


