தென்காசி: மனைவியைக் கொன்று சடலத்தோடு காரில் சுற்றிய கணவன்; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தென்காசி அருகே எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸாரின் புலன் விசாரணையில் திருமணம் மீறிய உறவால் வந்த பிரச்னையால் அவர் எரித்துக் கொல்லப்பட்டது அம்பலமாகியது. இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.
அப்போது நம்மிடம் பேசியவர்கள், "தென்காசியை அடுத்த இலத்தூரில் மதுநாதபேரி குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த இலத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலத்தின் கை மற்றும் கால் பகுதிகள் சரிவர எரியாமல் இருந்தது. அப்போது சடலத்தின் கால் விரல்களில் மெட்டி இருப்பதைக் கவனித்த போலீஸார், எரித்துக் கொல்லப்பட்டவர் 30 வயது மதிக்கத்தக்கப் பெண் என்ற முடிவுக்கு வந்தனர்.
இருப்பினும், இறந்த நபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எதற்காகக் கொல்லப்பட்டார் போன்ற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைக் கைபற்றி போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் சம்பவத்தன்று, சந்தேகப்படும்படி இனோவா கார் ஒன்று அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளிலும் பதிவாகியிருந்தது. இதைத்தொடர்ந்து, காரின் பதிவெண்ணை வைத்து தனிப்படையினர் விசாரிக்கத் தொடங்கினர்.
போலீஸின் இந்த விசாரணையில், அந்த கார் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த தங்க திருப்பதி என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து சிவகாசி விரைந்த தனிப்படையினர், தங்க திருப்பதியைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது நண்பரான சிவகாசி பாரதி நகரை கில்பர்ட் ஜான் என்பவர்தான் தனது காரை கடந்த இரண்டு நாட்களாகப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் கில்பர்ட் ஜானைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியானது. அதன்படி, பெயிண்டரான ஜான் கில்பர்ட், அப்பகுதியில் டெய்லராக வேலை பார்த்து வந்த கமலி என்ற பெண்ணைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், கமலிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையறிந்து, கில்பர்ட் ஜான் தனது மனைவி கமலியைக் கண்டித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாகக் கணவன்-மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றும், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், கோபமடைந்த கமலி, பிளாஸ்டிக் பைப்பால் தனது கணவர் ஜான் கில்பர்ட்டை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கில்பர்ட், அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவி கமலியைத் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீஸூக்கு பயந்து கொலையை மறைக்க நினைத்த ஜான் கில்பர்ட், தனது நண்பரான தங்க திருப்பதியிடம் கார் வாங்கிக்கொண்டு, காரின் பின்புறத்தில் கமலியின் சடலத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார்.

மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாகத் தென்காசி வந்த ஜான் கில்பர்ட் கமலியின் உடலைத் தூக்கி எறிவதற்காகத் தகுந்த இடத்தைத் தேடி அலைந்திருக்கிறார். இரண்டு நாட்களாகக் குற்றாலம், தென்காசி, ஆயக்குடி, செங்கோட்டை எனக் காரில் சுற்றிய ஜான் கில்பர்ட், இலத்தூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத குளத்தைப் பார்த்தவுடன் அங்கு வைத்து கமலியின் உடலை எரித்துள்ளார். கமலியின் சடலம் முழுவதுமாக எரிந்துவிட்டதாக நினைத்து அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில்தான் போலீஸின் புலன் விசாரணையில் அவர் சிக்கிக்கொண்டார். இதையடுத்து, ஜான்கில்பர்ட்டை கைது செய்த போலீஸார், கொலைக்கு உதவியதற்காகத் தங்க திருப்பதியையும் கைது செய்தனர். இதையடுத்து கொலைக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுக் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டது" என்றனர்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன் பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


