எங்க காதல் சேராதுன்னு நினைச்சேன்; ஆனா, அந்த ஹாஸ்பிடல்ல இருந்தப்போ... - நடிகை ஜீவிதா ராஜசேகர்

சொல்லாத காதல் சொர்க்கத்துல சேராதுன்னு சொல்வாங்க. இதுதான்டா போலீஸ் நடிகர் டாக்டர் ராஜசேகரும், அவர் மனைவி நடிகை ஜீவிதாவும் ஒருத்தரையொருத்தர் மனசுக்குள்ள 6 வருஷமா லவ் பண்ண, இனி சேரவே முடியாதுங்கிற ஒரு சூழல்ல, மொத்த குடும்பத்தின் சம்மதத்தோட அவங்க கல்யாணம் நடந்திருக்கு. அந்த அனுபவத்தை நம்மளோட ஷேர் பண்ணியிருக்காங்க ஜீவிதா ராஜசேகர்.

ஹலோ யார் பேசுறதுன்னு ஒரு தமிழ் படத்துல கமிட்டானப்போதான் அவரை நான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன். ஆனா, அந்தப் படத்துல ராஜசேகர் நடிக்கல. கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு தலம்பிராலுங்கிற தெலுங்கு படத்துல ஜோடியா நடிச்சோம். தலம்பிராலுன்னா தமிழ்ல அட்சதைன்னு அர்த்தம். அந்தப்படம் பிளாக்பஸ்டர் ஹிட். அதே பேனர்ல மறுபடியும் ரெண்டு படத்துல ஜோடியா நடிச்சோம். அதுவும் பயங்கர ஹிட். மூணாவது படம் பேரு அங்குசம். அதுதான் தமிழ்ல இதுதான்டா போலீஸ்னு வந்துச்சு. சேர்ந்து பத்து படங்களுக்கு மேல நடிச்சிருப்போம். அதுல எட்டோ, ஒன்பதோ நூறு நாள் ஓடுச்சு. எங்களை எல்லாரும் ராசியான ஜோடின்னு கொண்டாடினாங்க என்றவரிடம், யாரு முதல்ல காதலை சொன்னீங்க என்றோம்.

ஜீவிதா ராஜசேகர்

அய்யய்யோ... இதுதான்டா போலீஸ் படம் ரிலீஸானப்போ, அவரை ஊரே லவ் பண்ணிட்டிருந்துச்சுன்னு சிரிச்சவர், தொடர்ச்சியா நிறைய படங்கள் சேர்ந்து நடிச்சோம் இல்லியா... அதனால ஒருத்தரோட இயல்பு இன்னொருத்தருக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அப்படியே நல்ல நண்பர்கள் ஆனோம். அவரோட அப்பா அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனரா இருந்தவர். அவர் ஃபேமிலியில எல்லாரும் போலீஸ், டாக்டர்னு இருந்தாங்க. இவர் சினிமாவுல நடிக்கணும்னு முயற்சி பண்ணப்போகூட நீ நடிகையைக் கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டுதான் ஓகே சொன்னாங்களாம். அவருக்கு பொண்ணு பார்க்கிற நடைமுறை சுத்தமா பிடிக்காது. ஒரு பொண்ணைப்பார்த்துட்டு, பிடிக்கலைன்னா வேணாம்னு சொல்றது எவ்ளோ பெரிய தப்புன்னு சொல்வார். ஆனா, ஒருதடவை வெளியே லன்ச் சாப்பிட்டு வரலாம்னு பொண்ணு பார்க்க கூட்டிட்டுப் போயிருக்காங்க. தொடர்ந்து நிறைய படங்கள் ஒண்ணா நடிச்சதால, பிரேக் நேரத்துல இந்த விஷயங்களையெல்லாம் என்கிட்ட சொல்வார்.

என்னோட கேரக்டர், நான் எப்பவும் புடவை கட்டுறதெல்லாம் அவருக்கு ரொம்ப பிடிக்கும். ஒருமுறை, நான் கல்யாணம் பண்ணா உங்களை மாதிரி ஒரு பொண்ணைதான் கல்யாணம் பண்ணுவேன்னு மறைமுகமா சொல்லியிருக்கார். ஒருகட்டத்துல, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் லவ் பண்றோம்னு தெரிஞ்சிடுச்சு. ஆனா, அப்போ எங்க கல்யாணம் நடக்காதுங்கிற சூழ்நிலைதான். ஏன்னா, அவருக்கு அம்மா மேல ரொம்ப பாசம். இவர்கூட பிறந்தவங்க நாலு பேர். அப்பா போலீஸ் ஆஃபீசர்ங்கிறதால, இவரோட அம்மா தான் அஞ்சு பிள்ளைங்களையும் பார்த்துப் பார்த்து வளர்த்திருக்காங்க. அதனால, அவங்களோட மனசை காயப்படுத்தி ஒரு கல்யாணத்தை தன்னால செஞ்சுக்க முடியாதுங்கிற உறுதியா இருந்தார். எனக்குமே, ஆமா, ரெண்டு பேரோட மனசுலேயும் லவ் இருக்கு. ஆனா, அது கல்யாணத்துல முடியுமான்னு தெரியாதுங்கிறதுல தெளிவா இருந்தேன். இதுக்கு நடுவுல அவங்க வீட்ல பொண்ணு பார்த்துட்டே இருந்தாங்க. ஒரு பொண்ணோட நிச்சயத்தார்த்தம் வரைக்கும் போச்சு. இத நான் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததால, மனசை தேத்திக்கிட்டேன். ஆனா, அந்தப் பொண்ணு நம்ம கல்யாணத்துக்குப்பிறகு நீங்க ஜீவிதாகூட நடிக்கக்கூடாதுன்னு இவர்கிட்ட கண்டிஷன் போட்டிருக்காங்க. கரியர்ல தலையிட்டதால, இவருக்கு கோவம் வந்துடுச்சு. அதோட அந்தக் கல்யாணப்பேச்சு நின்னுப்போச்சு.

ஜீவிதா, ராஜசேகர்

இந்த சம்பவம் நடந்து சில நாள் கழிச்சு, மீசைக்காரன் படத்துல நடிச்சிட்டிருந்தப்போ இவருக்கு மேஜர் ஆக்சிடென்ட் ஒண்ணு நடந்துச்சு. கால் எலும்பெல்லாம் உடைஞ்சு இவரை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருந்தாங்க. நானும் அவர்கூடவே ஹாஸ்பிட்டல் போயிட்டேன். அந்த நேரத்துல இவரோட மொத்தக் குடும்பமும் சொந்த ஊரான மதுரைக்குப் போயிருந்தாங்க. ஸோ, இவருக்கு சர்ஜரியெல்லாம் முடிஞ்ச பிறகுதான் அவங்கெல்லாம் வந்தாங்க. எங்களுக்கு ஒருத்தரையொருத்தர் பிடிக்கும்கிறது அவங்களுக்கும் தெரியும்கிறதால, அவங்க என்னை போக சொல்லல. நானும், அவர் ஹாஸ்பிட்டல் இருந்த ஒரு மாசமும் கூடவே இருந்தேன். அவருக்கு கால் சரியாகுறதுக்குள்ள, அவரோட மொத்த குடும்பத்துக்கும் என்னைப் பிடிச்சுப்போச்சு.

சொன்னா நம்ப மாட்டீங்க, ஹாஸ்பிடல்ல இருந்து அவங்க கிளம்புறப்போ என்னையும் அவங்க வீட்டுக்குக் கூட்டிக்குப் போயிட்டாங்க. அந்த நேரத்துல எங்கப்பா தவறிட்டதால, ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் செஞ்சு வெச்சாங்க. அந்த ஒரு வருஷமும் அவங்க வீட்லதான் நான் தங்கியிருந்தேன். அந்த நேரத்துல வீட்டுக்கு தெரிஞ்சவங்க யாராவது வந்தா, என்னைக் கூப்பிட்டு, இதுதான் நாங்க ராஜசேகருக்கு நிச்சயம் பண்ணியிருக்க பொண்ணுன்னு அறிமுகப்படுத்துவார் என் மாமனார். 1986-ல சந்திச்சோம். 1991-ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரெண்டு பெண் குழந்தைங்க பிறந்தாங்க. உங்க லவ் ஸ்டோரில எவ்ளோ ட்விஸ்ட் இருக்கும்மான்னு என் பொண்ணுங்க விளையாட்டா சொல்வாங்க. யோசிச்சு பார்த்தா அது கரெக்ட் தான்னு தோணுது. கல்யாணமாகி 30 வருஷம் எப்படி போச்சுன்னே தெரியலை. காலம் ரொம்ப வேகமா போற மாதிரி இருந்தா, வாழ்க்கை சந்தோஷமா இருக்குன்னு அர்த்தம்னு சொல்வாங்க. டச் வுட்... இது இப்படியே தொடரணும்க என்கிறார் ஜீவிதா ராஜசேகர்.

காதல் தொடரட்டும்..!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.