Budget 2025: AI -க்கு பலியாகும் வேலைகள் - பொருளாதார அறிக்கை சொல்வதென்ன?
இந்தியா, முழுவதுமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இயைந்து செயல்பட தயராகவில்லை என்றாலும், நம் நாட்டின் தொழிலாளர் சந்தையில் ஏ.ஐ வளர்ச்சியால் ஏற்படப்போகும் இடையூறுகள் குறித்து அரசின் பொருளாதார கணக்கீடு 2024-25-ல் பேசப்பட்டுள்ளது.
"அரசியலில் நாம் தலையிடவில்லை என்றால் அரசியல் நம் வாழ்க்கையில் தலையிடும்" என்ற சினிமா வசனத்தைப் போலவே செயற்கை நுண்ணறிவும் அபார வளர்ச்சியடைந்துள்ளது.
Budget தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, நேற்றைய தினம் நியமைச்சர் வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் AI சகாப்தம்: நெருக்கடியா அல்லது உந்துதலா? ( AI Era: Crisis or Catalyst?) என்ற தலைப்பில் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய பகுதி இடம்பெற்றது.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் செலுத்தினாலும், இந்தியா போன்ற தொழிலாளர்களின் தனிநபர் வருமானம் மிகக் குறைவாக இருக்கும் நாட்டில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அச்சுறுத்தும் தொழில்நுட்ப வளர்ச்சி!
"செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலை இழப்புகள் ஒவ்வொருவரின் நிலையையும் மோசமாக்குவதுடன் நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க தடையாக இருக்கும்" என்கிறது பொருளாதார அறிக்கை.
இன்று மனிதர்களால் செய்யப்படும் பணிகள் எல்லாவற்றையும் இன்னும் சில ஆண்டுகளில் வரப்போகும் திறன்வாய்ந்த இயந்திரங்களால் செய்துவிட முடியும். மருத்துவம், குற்றவியல் நீதி வழங்கல், கல்வி, வணிகம் மற்றும் நிதிச் சேவைகள் போன்ற துறைகளில் முக்கியமான முடிவெடுக்கும் செயல்முறைகளில் (Decision Making) AI மனிதர்களை விட சிறப்பாகச் செயல்படுகிறது.
தொழிலாளர்கள் சந்தையில், முக்கியமாக தொடக்க நிலை தொழிலாளர்களின் வேலையில் ஏ.ஐ குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
என்ன செய்யப்போகிறோம்?
செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, உலகின் பொருளாதார அமைப்பையும் வணிக நடைமுறைகளையும் மாற்றி வருகிறது.
இது போன்ற தொழில்நுட்பங்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தேவையான கல்வி வழங்கல் மற்றும் திறன்களை மேம்படுத்துதல் பற்றி பொருளாதார அறிக்கை பேசியிருக்கிறது.
பெருமளவிலான வேலைகள் தானியங்கி முறைக்கு மாறுவது இந்தியா போன்ற மிதமிஞ்சிய தொழிலாளர் எண்ணிக்கையைக் கொண்ட நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.
பொருளாதார அறிக்கையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வை மேற்கோள்காட்டியுள்ளனர். அந்த ஆய்வின்படி, செயர்கை நுண்ணறிவால் உலகம் முழுவதும் 7.5 கோடி வேலைகள் முழுவதுமாக பறிபோகும் நிலையில் உள்ளன. 30 கோடி வேலைகள் அச்சுறுத்தலில் இருக்கின்றன.
இந்தியாவின் வெள்ளைக்காலர் தொழிலாளர்களையே இது நேரடியாக பாதிக்கும். ஐ.ஐ.எம் அகமதாபாத் மேற்கொண்ட ஆய்வின்படி, 68% நபர்கள் தங்களது வேலை பகுதியளவு அல்லது முழுவதுமாக செயற்கை நுண்ணறிவால் தானியங்கி முறைக்கு மாறும் சாத்தியமுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பெரும் மாற்றம் வரப்போகும் எதிர்பார்ப்பு இருந்தாலும் நாம் சந்திக்கப்போகும் இடர் எப்படியிருக்கும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவைப் பெற நாம் முந்தைய தொழில்நுட்ப வளர்ச்சிகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென பொருளாதார அறிக்கை கூறியுள்ளது.
தொழிலாளர்களின் பணிமாற்றம்...
செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் அடுத்த வேலைக்கு மாறுவதற்கு ஏதுவாக நிறுவனங்களைத் தொடங்குவதன் மூலம், சமூக-பொருளாதார பாதிப்பைக் குறைக்க முடியும் என்கின்றனர்.
"இந்தியாவின் குறைந்த திறன் மற்றும் குறைந்த மதிப்பு சேர்க்கப்பட்ட (Low-Value-Added Service) சேவைகளைக் கொண்ட வேலைகள் ஏ.ஐ-யின் பாதிப்புக்கு எளிதாக பலியாகக்கூடும். தொடக்கநிலைத் தொழிலாளர்களை இடைத்தர மற்றும் உயர்த்தர திறன்கொண்ட வேலைகளுக்கு மாற்ற வலுவான நிறுவனங்களை, திறன் மேம்பாட்டு அமைப்புகளை அமைக்கும்பட்சத்தில், ஏ.ஐ அவர்களுக்கு சவாலாக அமைந்தாலும் அவர்களை ஈடுசெய்ய முடியாது." என பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏ.ஐ நுழையும்போதும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் தொழிலாளர்களுக்காக நிறுவனங்கள் காப்பீடு செய்வதுபற்றியும் பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும்போது, தொழிலாளர்கள் இடைத்தர மற்றும் உயர்த்தர திறன்கொண்ட வேலைகளுக்கு மாற்றப்படும் காலத்தில் அவர்களது வாழ்க்கைத்தரம் பாதுகாக்கப்படும். இந்தியாவின் சமூக கட்டமைப்பும் சிதைவடையாமல் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் AI முதலீடு?
தொழில்நுட்பங்களால் வரவிருக்கும் புதுமைகளைத் தடுப்பது நாட்டைப் பின்னோக்கி கொண்டுசெல்லக் கூடும். எனவே பொருளாதார அறிக்கை, புதுமைகளைத் தடுக்காமல் பொதுநலனை நேர்த்தியாக சமன்செய்யும் அணுகுமுறையை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு வழிகாட்டுகிறது.
சீனா மலிவு விலையில் உருவாக்கிய டீப் சீக் ஏ.ஐ (DeepSeek AI) அமெரிக்காவின் எல்.எல்.எம்களை(Large Language Model) மிஞ்சியதுடன், உலக ஸ்டாக் மார்கெட்டை அதிரச்செய்ததையும் பொருளாதார அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தியா மார்ச் மாதம், செயற்கை நுண்ணறிவில் 1.25 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் சேவை வழங்கலைச் சார்ந்ததாகவும், அதன் இளம் மற்றும் சக்திவாய்ந்த தொழிலாளர்களைக் கொண்டதாகவும் இருப்பதனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அடுத்தகட்டத்துக்கு நகருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
முடிவாக, பொருளாதார அறிக்கை 2024-25, மில்லியன் கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளதையும், அதனால் பாதிக்கப்படும் துறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. அத்துடன் தொழிலாளர்களை மற்ற வேலைகளுக்கு மாற்றுவதற்கான வழிகளையும் விவாதித்திருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
