வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : `ஆட்டோ கேங்’ 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார்.

அந்தப் பெண் மருத்துவர், அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நாக்பூரைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் 2022 மார்ச் 16-ம் தேதி காட்பாடியில் இருக்கும் திரையரங்கில் படம் பார்க்கச் சென்றார். அன்று நள்ளிரவு 1 மணிக்குப் படம் முடிந்ததும் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைப் பகுதிக்குச் செல்வதற்காக திரையரங்கம் முன்பு ஆட்டோவுக்காகக் காத்து நின்றனர். அப்போது வந்த ஒரு ஆட்டோவில் ஓட்டுநருடன் சேர்த்து 5 பேர் இருந்தனர்.

`ஷேர் ஆட்டோ’ என்பதால் அந்தப் பெண்ணுக்கும், அவரின் ஆண் நண்பருக்கும் அவர்கள்மீது சந்தேகம் ஏற்படவில்லை.

ஆட்டோ கேங்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தைக் கடந்ததும், ஆட்டோவிலிருந்த நபர்கள் திடீரென கத்திமுனையில் இருவரையும், வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பாலாற்றுப் பகுதிக்கு கடத்திச் சென்றனர். அங்கு வைத்து, அந்தப் பெண்ணை கூட்டாகச் சேர்ந்து, 5 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதையடுத்து, அவர்களிடமிருந்து 2 பவுன் நகை, செல்போன்களைப் பறித்த ஆட்டோ கேங்... ஏடிஎம் கார்டையும் பறித்து, அதிலிருந்து ரூ.40,000 பணத்தையும் அபகரித்துக்கொண்டு தப்பியது.

வேலூரையே அதிர்ச்சிக்குள்ளாகிய இந்தப் பாலியல் வன்கொடுமை விவகாரம், அந்த நேரத்தில் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

இந்த வழக்குத் தொடர்பாக, சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், பாரா என்கிற பரத், மணிகண்டன், மண்ட என்கிற சந்தோஷ்குமார், 18 வயதுக்குஉட்பட்ட சிறுவன் என ஆட்டோ கேங்கைச் சேர்ந்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 13 பிரிவுகளின்கீழ் வேலூர் வடக்குக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகள் அனைவரும் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். உடனடியாக இவர்கள்மீது `குண்டர்’ சட்டமும் பாய்ந்தது.

இவ்வழக்கு விசாரணை வேலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காவல்துறையினரும் 496 பக்கங்கள்கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

தீர்ப்பு

இந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறார் குற்றவாளியை தவிர்த்து, மற்ற நால்வருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மகேஸ்வரி பானுரேகா உத்தரவிட்டார். அதாவது, இந்த தண்டனை காலத்தை 4 பேரும் தலா 20 ஆண்டுகள் ஏக காலத்திற்குள் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தலா ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, 4 பேரையும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்தியச் சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியாக கருதப்படும் சிறாருக்கு விரைவில் தண்டனை அறிவிக்கப்படவிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.