கூலிப்படை... வேங்கைவயல்... பெரியார்... கெளரவத் தோற்றத்தில் விஜய்... கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்!

புதுக்கோட்டையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“பெரியார் சர்ச்சை தேவை இல்லாத சர்ச்சை. இந்தியாவில் பேச வேண்டிய பிரச்னை அதிக அளவில் இருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அன்றாடம் வாழ்க்கையில் இருக்கும் நிர்வாக சிரமம், போக்குவரத்து சிரமம் இதைப் பற்றி எல்லாம் பேசுவது கிடையாது. இதை விட்டுவிட்டு சரித்திர சித்தாந்தத்துக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளைத் தற்போது விவாதிப்பதில் எந்தவித பிரயோஜனமும் கிடையாது. அதனால், இது தேவையற்ற சர்ச்சை.

கடந்த கால சிந்தனையாளர்களோடு முரண்பாடு இருக்கும். முரண்பாடு இல்லாத வாழ்க்கை இருக்காது. அவர்களது சிந்தனை, பேச்சில், அவர்களது எழுத்தில் முரண்பாடு இருக்கும். அதை ஒரு ஆராய்ச்சிக்காக வைத்துக் கொள்ளலாமே தவிர அதே ஒரு மைய பிரச்னையாக எடுத்துக்கொண்டு காலை முதல் இரவு வரை அரசியல் மேடையில் பேசுவது தேவையற்றது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மின்வாரியத்திற்கு அதிக அளவு கடன் சுமை இருக்கிறது.

கார்த்தி சிதம்பரம்

அதைக் குறைப்பதற்கு வழி சொல்வதற்காக யாரும் விவாதம் நடத்துவது கிடையாது. படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது கிடையாது. சீனாவில் புதிதாக ஏஐ வந்துள்ளது அதனால், உலகத்தில் உள்ள பெரிய நிறுவனத்தின் பங்குகளின் விலை குறைந்துள்ளது. இதனால், வேலை வாய்ப்பு நிறையப் பேருக்குப் போய்விடும் என்று கூறுகிறார்கள். இதுபோல், விஞ்ஞான ரீதியாக மாற்றங்கள் இந்த உலகத்தில் வரும் பொழுது வேலை வாய்ப்பை எப்படி உருவாக்குவது அன்றாட வாழ்க்கையில் நடுத்தர மக்கள், சாதாரண மக்கள் படும் கஷ்டத்தை முன்னிறுத்திப் பேசுவது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளம் கொடுக்கவில்லை அதைப் பற்றிப் பேசுவது, குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் மிகக் குறைந்த அளவு தான் கொடுக்கிறார்கள்.

அதையும் தமிழ்நாட்டிற்கு அதிகளவு வரவில்லை போன்ற பிரச்னைகளைப் பேசுவது கிடையாது. இது போன்ற அன்றாட பிரச்னைகள், பொருளாதார ரீதியான இருக்கும் சவால்களைப் பற்றிப் பேசாமல் சித்தாந்த விவாதங்கள் என்னைப் பொறுத்தவரைத் தேவையற்ற விவாதம். இது, தமிழ்நாட்டில் எடுபடாது. 24 மணி நேரமும் செய்தி ஓடுவதனாலும், சமூக வலைத்தளம் இருப்பதினாலும் இது முழுமையாகிறதே தவிர மக்களை நேரடியாகச் சந்தித்தால் இதைப்பற்றி யாரும் கூறுவது கிடையாது. மக்கள் யாரும் பெரியாரைப் பற்றி இப்படிப் பேசுகிறார்களே, திருவள்ளுவருக்கு இந்த உடையை அணிவித்தார்களே, இவர் இவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாரே உண்மையா பொய்யா என்று கேட்பதில்லை. மக்களைப் பொறுத்தவரை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணம் வந்து சேரவில்லை, நியாய விலைக் கடையில் மண்ணெண்ணெய் வழங்குவதில்லை, படித்த பையனுக்கு வேலை கிடைக்கவில்லை போன்ற பிரச்னைகளைத்தான் பேசுகின்றனர். இவைதான் அரசியல் மேடையில் நாம் இன்றைக்குப் பேச வேண்டிய பிரச்னைகள்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

ஒவ்வொரு கிராமத்திலும் சமுதாய ரீதியான பிரச்னைகள் இருப்பது வேறு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வரவில்லை என்றால் அவர் ஒரு கட்சித் தலைவராக இருந்து அந்த கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் ஆகிவிடலாம். அதுதான் வழி. வேறு வழி இல்லை. இதனால், சமுதாய ரீதியாக ஒருவரை முதலமைச்சராக விடமாட்டார்கள் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக, சில ஊராட்சிகளில் இது போன்ற சமுதாயப் புறக்கணிப்புகள் இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். அந்த புறக்கணிப்பு போக வேண்டும் என்றால் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்.

சமுதாய ரீதியாக என்ன மாற்றம் வர வேண்டும் என்றாலும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அனைத்து மக்களுக்கும் வந்துவிட்டது என்றால் போகப் போக இந்த சமுதாய வேறுபாடுகளும் போய்விடும். வேங்கை வயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை எந்த வகையில் சரியில்லை என்பதை நீதிமன்றத்தில் வாதாடித்தான் மற்ற விசாரணையைப் பெற வேண்டும். அது, திருமாவளவனின் விருப்பம். அவர் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். அவர் நல்ல சிந்தனையாளர். அவர் நன்றாகப் பழகக் கூடியவர். அவருக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றால் எந்த காரணத்திற்காக நம்பிக்கை இல்லை என்பதை நீதிமன்றத்தின் மூலமாகத் தெரிவித்துத்தான் பெற வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை வேங்கை வயலில் நடந்தது வேதனையான விஷயம்தான். நான் பத்திரிகையில் படிக்கும் செய்தியைத் தவிர நேரடியாக எனக்கு எந்த ஆதாரமும், எந்த தகவலும் வரவில்லை. தற்போது நடந்த விசாரணை நம்பகத் தன்மையானதாக இல்லை. வேறொரு விசாரணை வேண்டும் என்று கேட்டால் அதை ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்துவிட்டு வேறொரு விசாரணை கேட்பது அவரவர்கள் உரிமை.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

சீர்திருத்தம் தேவை என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், பா.ஜ.க உள்நோக்கம் இதில் இருக்கிறது. அதில் உள்நோக்கம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கையில், அவர்களது நிர்வாகத்தில் தலையிட வேண்டும் என்பது இவர்களது விருப்பம். அந்த உள்நோக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. காமன் சிவில் கோட் வரவேற்க முடியாது. அதனைப் பல இடத்தில் ஒத்துக் கொள்ள முடியாது. காமன் சிவில் கோர்ட் என்று மேலோட்டமாகச் சொல்லலாமே தவிர ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம் உள்ளது.

பா.ஜ.க-வின் குறிக்கோள் என்னவென்றால் சிறுபான்மையினர் பழக்கவழக்கங்களில் தலையிட வேண்டும் என்பதற்காக காமன் சிவில் கோடை கொண்டுவர நினைக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையாக உள்ள இந்து சமுதாயத்திலேயே பழக்கவழக்கங்களில் பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. விவாகரத்திற்குக் கூட வெவ்வேறு முறைகள் இருக்கிறது. அதனால், காமன் சிவில் கோடை கொண்டு வருவது அவ்வளவு சுலபம் கிடையாது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான காமன் சிவில் கோட் வரைவை இதுவரை யாரும் பார்த்ததில்லை. என்னைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட காமன் சிவில் கோடை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது. இது, போன்றவற்றில்தான் நாம் சிந்தனை போகிறதே தவிர விஞ்ஞான ரீதியாகப் போவது கிடையாது. மற்ற நாடுகள் செல்லக்கூடிய திசை வேறு நாம் இதைப் பற்றி மட்டுமே பேசிவிட்டு மத நம்பிக்கை... யார் என்ன உணவு உண்கிறார்.. யார் என்ன உடை உடுத்திருக்கிறார்... 50 ஆண்டுகளுக்கு முன்னர் யார் என்ன சொன்னார்கள்...500 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன சொன்னார்கள் என்ற சர்ச்சையில் தான் மாட்டிக் கொண்டு உள்ளமே தவிர நிகழ்கால அரசியல், பொருளாதார, விஞ்ஞானத்தைக் கைவிட்டு விட்டு வேடிக்கை பார்க்கின்ற நாடாக நாம் மாறிக்கொண்டு இருக்கின்றோம். இது வேதனை அளிக்கிறது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

கனிமக் கொள்ளைக்கு எதிராக இருந்த ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும். இது முதல் முறையாக நடந்த சம்பவம் அல்ல. எப்போது பார்த்தாலும் மண் அள்ளுவது போன்ற பிரச்னைகள் வரும் பொழுது அதில் கண்டிப்பாகப் பின்னணியில் மாபியாக்கள் செயல்படுகின்றன என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அது, இந்த ஆட்சியில் மட்டும் நடக்கிறது என்பதை நான் சொல்ல மாட்டேன். காலங்காலமாகத் தமிழ்நாட்டில் நடக்கிறது. அதனை எதிர்த்து யார் குரல் கொடுக்கிறார்களோ இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இதற்குக் காவல்துறை பொறுப்பேற்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் இதில் விழிக்க வேண்டும். இது, காலம் காலமாக இருக்கும் சிஸ்டமிக் ப்ராப்ளம். இது பேசும் பொருளாக மாற வேண்டும். இது குறித்துக் கண்டிப்பதற்கு நான் தயங்கவில்லை. இதனை சாப்ட் கார்னர் முறையில் அணுகவும் இல்லை. நான் இதை நேரடியாகவே சொல்கின்றேன். மக்களை நேரடியாகப் போய் சந்தித்தோம் என்றால் தற்போது அரசியல் மேடையில் நடக்கும் விவாதத்திற்கும் மக்கள் சந்திக்கும் பிரச்னைக்கும் சம்பந்தமே இல்லை என்ற உண்மையை உணர முடியும்.

தமிழ்நாட்டில் கூலிப்படைக் கொலைகள் அதிகரித்து இருக்கின்றன என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அதனையும் அடக்க வேண்டியது காவல்துறையின் கடமை. அதனை யார் ஏவி விடுகிறார்கள், யார் கூலிப்படையில் சேர்கிறார்கள் என்பதைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து முன்கூட்டியே அவர்களைக் கைது செய்ய வேண்டும். அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கூலிப்படைக் கொலை நடப்பது பல பகுதிகளில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

என்.ஐ.ஏ என்பது ஒரு ஆல் இந்தியா ஏஜென்சி. அவர்களுக்குத் துப்பு கிடைக்கும் பொழுது அவர்கள் சோதனையில் ஈடுபடுகின்றனர். இதை அரசியல் காரணத்திற்காகச் சோதனை செய்கின்றனர் என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் தகுந்த ஆதாரத்துடன் சோதனை செய்கிறார்களா என்பதை நீதிமன்றத்தில்தான் நிரூபிக்க முடியும். இதில் ஏதாவது இருந்தால் நீதிமன்றத்தில்தான் தெரிவிக்க முடியும். குறிப்பாக, தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் பகுதியில் அதிக அளவு நடக்கிறது என்பது தெரியும்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அவரது படத்தில் கௌரவத் தோற்றம் என்று வருபவர்களைப் போல் அவ்வப்போது அரசியலிலும் வந்து செல்கிறார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.