கூடலூர்: வனவிலங்கு வேட்டைக்கு சென்றபோது இளைஞர் மர்ம மரணம்... யானை மீது பழிபோட்டு தப்பிக்க முயற்சி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்ததாக கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை வனத்துறையினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கூடலூர் அரசு மருத்துவமனைக்கு இளைஞரின் உடல் கொண்டு செயல்பட்ட நிலையில், யானை தாக்குதல் தொடர்பாக வனத்துறையினர் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் இளைஞரின் உடலில் ஏற்பட்ட காயம் போன்றவை யானை தாக்குதலுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மர்மமான முறையில் ஏற்பட்ட உயிரிழப்பை யானை மீது பழி போட்டு நாடகாடுவதை கண்டறிந்துள்ளனர்.

உயிரிழந்த ஜம்ஷித்

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கூடலூர் அரசு மருத்துவமனையில் இருந்த இளைஞரின் உடல் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

உயிரிழந்த இளைஞரின் அடிவயிற்றுப் பகுதியில் ஆழமான காயம் இருப்பதைக் கண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் சட்டவிரோதமாக கூட்டாளிகளுடன் சேர்ந்து வனவிலங்கு வேட்டையாட‌ முயன்ற போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில் இளைஞர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளனர். இதை மறைக்க யானை மீது பழி போட்டு நாடகமாடிய சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், "தேவர்சோலை 3 -வது டிவிஷனைச் சேர்ந்த ஜம்ஷித் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் நாட்டுத் துப்பாக்கிகளுடன் வனப்பகுதிக்குள் நள்ளிரவில் வேட்டையாடச் சென்றுள்ளனர். துப்பாக்கியால் வனவிலங்கை வேட்டையாட முயன்ற போது எதிர்பாராத விதமாக அசம்பாவிதம் நடந்திருக்கிறது.

உயிரிழந்த ஜம்ஷித்

அதை மூடி மறைத்துள்ளனர். அடிவயிற்றில் ஏற்பட்ட அசாதாரண காயமே சான்றாக இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே சிலரை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். திடுக்கிட வைக்கும் பல உண்மைகள் விரைவில் வெளிவரும் " என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.